Pages - Menu

புதன், 16 ஜனவரி, 2019

டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக டிராஃபிக் போலீஸாக ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதற்கென்று போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு, நெரிசலைச் சீர்ப்படுத்தி வந்தாலும், முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில், ROADEO என்று பெயரிடப்பட்ட டிராஃபிக் போலீஸ் ரோபோவை சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாலை போக்குவரத்தைச் சீரமைத்தல், மாணவர்கள் சாலையை கடக்க உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

இதை புளூடூத் மூலமும் இயக்க முடியும். மக்களுடன் தொடர்பு கொள்ளவும், போக்குவரத்து சிக்னல்களைக் காண்பிக்கவும் ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ளன. பக்கத்தில் உதவுவதற்கு ஒருவர் உள்ளார் என்ற உணர்வை உண்டாக்கும் வகையில் இதனுடைய கண்கள் உள்ளன. இந்த ரோபோவில் முக்கிய செய்திகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்.

சென்னையைச் சேர்ந்த தனியார் ரோபாட்டிக்ஸ் ஆய்வகத்தின் மாணவர்கள், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக போக்குவரத்துப் பணியில் ரோபோக்களை நியமிக்கும் இரண்டாவது நகரமாகச் சென்னை உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக