Pages - Menu

வெள்ளி, 4 டிசம்பர், 2020

கல்வி தீபம் அணையாதிருக்க...தீக்கதிர் -தலையங்கம்...

கல்வி தீபம் அணையாதிருக்க...

மத்திய பாஜக அரசு அரசியல் சட்டப்படி ஆட்சி செய்வதை விட ஆர்எஸ்எஸ்ஸின் கோட்பாடான மனுஸ்மிருதியின்படியிலான மறைமுக ஆட்சியை நடத்துவதையே விரும்புகிறது. 

அதன் பிரதிபலிப்பை நாட்டின் பல்வேறு துறைகளிலும் காண முடிகிறது. 

ஒரு நாட்டின் அறிவுச் செல்வம் என்பது அதன்இளைய தலைமுறையான மாணவர்களை சார்ந்ததாகும். 

அவர்களுக்கு சிறந்த முறையிலான கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் செய்யும்செலவு நாட்டின் அறிவுசார் முதலீடாகும். ஆனால் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஆறு சதவீத நிதியை ஒதுக்க வேண்டுமென்ற கோத்தாரி கமிஷன் பரிந்துரையை செயல்படுத்துவதேயில்லை. 

ஆனால் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும் அளவையும் குறைக்கிற வேலையையே செய்து வருகிறது. 

அத்தகைய வழியிலேயே புதிய தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கல்வியை தாரை வார்க்கும் செயலையே மேற்கொள்கிறது மோடி அரசு. 

அத்துடன் நடைமுறையில் இருக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் கூடஒழித்துக்கட்டும் முயற்சியிலேயே ஈடுபட்டிருக்கிறது. 

மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்படும் உதவித்தொகை நிறுத்தப்படுவது பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கிறது அல்லது அதை மாநில அரசுகளின் தலையில் கட்டிவிடலாம் என்று முயற்சிக்கிறது. 

குறிப்பாக போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டநிதியை முன்பு மத்திய அரசே முழுவதும் வழங்கியது. 

பின்பு சதவிகித அடிப்படையில் மாநில அரசுகளை பகிர்ந்துகொள்ளச் செய்தது. தற்போது முழுவதுமாக மாநிலங்களையே சுமக்கச் செய்யும் வகையில் காய்களை நகர்த்தியது. 

அதை எதிர்த்து மாநிலங்கள் குரல் கொடுத்த நிலையில் பத்து சதவிகிதம் மட்டுமே தர முடியும் என்றும், மீதியை மாநிலங்கள் வழங்க வேண்டுமென்றும் கூறியது. ஆனால் அதற்கு ஒத்துக்கொள்ளாத மாநில அரசுகளின் நிலைபாட்டால் ஏற்கெனவே வழங்கிய 60:40 விகிதத்தை அமல்படுத்திட மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆயினும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைவழங்கப்படாமல் நிறுத்தப்பட்டதால் பட்டியலினமாணவர்கள் 60 லட்சத்திற்கும்மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது மத்திய அரசின்தலித் விரோத செயல்பாட்டையே உணர்த்துகிறது. ஏற்கெனவே மாணவர்களுக்கு வழங்கிவரும் உதவித்தொகையின் அளவை அதிகரிக்கவேண்டுமென்ற கோரிக்கையை உதாசீனம் செய்துவிட்டு, உள்ளதையும் பறிக்க முயற்சிப்பதுநாட்டின் ஒரு பகுதி மக்களை கல்வியறிவற்றவர்களாக ஆக்குகிற சதியாகும். 

எனவே இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நிதியை ஒதுக்கி கல்வி தீபத்தை அணையாமல் காத்திடவேண்டும்.

# தீக்கதிர் தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக