திங்கள், 14 மே, 2018

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்~ கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்…


நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக,
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

180 கேள்விகள்...

தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில்அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன.ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC - என்ஜினீயர் பணிக்கான எழுத்துதேர்வு மே20-ல் நடைபெறுகிறது...


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 28.2.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 330 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த என்ஜினீயர் பணிக்கான எழுத்து தேர்வு வருகிற 20-ந்தேதி சென்னை உள்பட 15 தேர்வு மையங்களில் ஓ.எம்.ஆர். தேர்வு முறையில்நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுக்கு 68 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால்டிக்கெட்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளடு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதென்றால் அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.