சனி, 9 மே, 2020

தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டப் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் பணிகள் என்ன?
யார் இந்த சி.ரங்கராஜன்?

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் தமிழகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பைச் சீரமைக்க 24 பேர் கொண்ட பொருளாதார வல்லுநர்கள், பல்துறை நிபுணர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

24 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான சி.ரங்கராஜனை தலைவராக நியமித்து தமிழக அரசு உத்தரவி்ட்டுள்ளது.

இந்தக் குழுவில் பல்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் என 14 பேரும், மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்வார்கள்.

இந்தப் பொருளாதார உயர்மட்டக் குழுவின் பணிகள் என்ன?

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் தமிழகப் பொருளாதாரத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தல். லாக்டவுன் கொண்டுவரப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் கூடுதல் செலவினங்கள் முன்தடுப்பு நடவடிக்கைகள், சமூக விலகலைக் கடைப்பிடித்தலால் ஏற்பட்ட தாக்கங்களையும் ஆய்வு செய்தல். தமிழகப் பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் இருக்கும் வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை ஆய்வறிந்து கூறுதல். தமிழகப் பொருளதார வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான உதவிகளைக் கண்டறிதல். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆதரவு அளிக்கவும் தமிழக அரசு சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டயதையும் அறிவுறுத்துதல். கரோனா வைரஸால் தமிழக அரசின் நிதிச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பு, நிதிச்சூழலை மேம்படுத்தும் வழிகள் கண்டறிதல். குறிப்பாக வரி விதிப்பை உயர்த்துதல், உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், முன்னுரிமை அளித்துச் செலவழித்தல், வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றை ஆய்வு செய்தல். தமிழக அரசுக்கு இருக்கு நிதிப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகளை ஆராய்தல். கட்டுமானத்துறை, சிறு தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் நிதி, நிதியுதவி அளித்தலைக் கண்டறிதல்.

இந்தப் பணிகளை பொருளாதார உயர்மட்டக் குழு செய்ய உள்ளது.

யார் இந்த சி.ரங்கராஜன் ?

தமிழகத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி ரங்கராஜன் திருச்சியில் உள்ள தேசியக்கல்லூரியிலும், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியிலும் பட்டம் பெற்றவர். 1964-ம் ஆண்டு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அகமதாபாத் ஐஐஎம்ஏ உயர் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் ரங்கராஜன் இருந்துள்ளார்.

அதன்பின் கடந்த 1982 முதல் 1991-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த சி.ரங்கராஜன், 1992 முதல் 1997-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்தார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 1997-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை ஆந்திர மாநிலத்தின் ஆளுநராகவும் சி.ரங்கராஜன் பதவி வகித்துள்ளார். ஆந்திராவின் ஆளுநராக இருந்த காலத்தில் 1998 முதல் 1999 வரை ஒடிசாவின் ஆளுநராகவும், 2001 முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பையும் வகித்துள்ளார்.

அதன்பிறகு நாட்டின் 12-வது நிதிக்குழுவின் தலைவராக சி.ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். அதன்பின் 2005 முதல் 2008-ம் ஆண்டு பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். இந்தப் பதவிக்காலம் முடிந்ததும் மாநிலங்களவை எம்.பி.யாகவும், பின்னர் 2009-ம் ஆண்டு மீண்டும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவின் தலைவராகவும் ரங்கராஜன் நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி முடிந்ததும் தனது பதவியை ரங்கராஜன் ராஜினாமா செய்தார்.

இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும், ஹைதராபாத் பல்கலைக்கழக்தின் முன்னாள்துணை வேந்தராகவும், சிஆர் ராவ் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் ரங்கராஜன் பொறுப்பு வகித்தவர்.

இந்திய அரசின் 2-வது உயர்ந்த விருதான பத்மவிபூஷண் விருது பெற்ற ரங்கராஜன் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் தலைவராக உள்ளார்.

இந்தியாவின் வறுமைக்கோடு குறித்த கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரங்கராஜன் தலைமையில் அளிக்ககப்பட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.நாட்டின் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் கணக்கிடும் முறையை ரங்கராஜன் குழு மாற்றியமைத்தது.கிராமப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ.37,நகர்ப்புறங்களில் ரூ.47 என செலவிடுபவர் வறுமைக்கோட்டிற்கு மேல்் உள்ளவர் என்னும் நிலையை  மாற்றியமைத்தது இவர் தலைமையிலான குழு.இதற்கு முன்னர் இருந்த டெண்டுல்கர் குழு கிராமப்புறத்திற்கு ரூ.33,நகர்ப்புறத்திற்கு ரூ 43 என நிர்ணயம் செய்திருந்தது.
நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சர் மன் மோகன்சிங் தலைமையிலான குழுவிலும்,மேலும் அவர் பிரதமராக இருந்தபோது அவர் தலைமையில் இருந்த பொருளாதார குழுக்களிலும் திறம்பட பணியாற்றியவர் திரு.ரங்கராஜன் ஆவார்.

நன்றி:தி இந்து நாளிதழ் 
*தமிழ் நாட்டின் நிதி நிலையை மேம்படுத்துவது குறித்து  தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்வதற்கு , ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு.சி. ரங்கராசன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு*




சிபிஎஸ்இ விடைத்தாள்களை மதிப்பிடும் பணிக்கு  நாடு முழுவதும் 3,000 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது !

மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிப்பு!

SCIENCE MUSEUM VIRTUAL TOUR...

click here...

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது தான் தமிழ்நாடு அரசின் தீர்க்கமான கொள்கை ஆகும்! மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வரைவு மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிடவேண்டும்! இந்தியப் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர்அவர்கள் கடிதம்



அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோரை வாட்ஸ்அப் குழுவில் சேர்க்க உத்தரவு...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருவது படிப்படியாக இணையதள முறைக்கு கொண்டு செல்லப்படும் !
தமிழக அரசு ஆணை!


மே 9, வரலாற்றில் இன்று.

பெர்டினாண்ட் மோனயர் பிறந்த தினம் இன்று.

பிரான்ஸ் நாட்டின் கண் மருத்துவரான பெர்டினாண்ட் மோனயர் புகழ்பெற்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு அணியப்படும் கண்ணாடிகளில் குறிப்பிடப்படும் டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்ற அளவை உருவாக்கியவர்., இதுதவிர, மோனயர் விளக்கப்படம் எனும் பார்வை திறனை அறிய உதவும் எழுத்துக்கள் அடங்கிய படத்தை உருவாக்கியவரும் இவர்தான்.

மே 9,1836 ல் மோனயர் பிரான்ஸ் நாட்டில் பிறந்த இவர், கண் தொடர்பான ஆராய்ச்சி மருத்துவராக செயல்பட்டு வந்தார், இவரின் கண்டுபிடிப்புகள் 140 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இன்றைய நவீன உலகத்திலும் அதாவது மோனயர் சார்ட்டை அடிப்படையாக கொண்டே பார்வைதிறன் மற்றும் டையப்ட்டர் எனப்படும் கண்ணாடிஅளவுகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஃபெர்டினாண்ட் மோனயர் ஜூலை 11 ,1912இல் தனது 76ஆவது வயதில் காலமானார்.
மே 9, வரலாற்றில் இன்று:

மல்லிகா சாராபாய் பிறந்த தினம் இன்று.

மல்லிகா சாராபாய் ஒரு இந்திய சமூக ஆர்வலர் மற்றும் பிரபல நடனக் கலைஞர். இவர் மறைந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் விக்ரம் சாராபாய் - பிரபல நடனக் கலைஞர் மிருணாளினி சாராபாய் தம்பதியினரின் மகளாவார்.

 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்  அத்வானியை எதிர்த்துப் போட்டியிட்டார். இதனால் நாடு முழுவதும் பிரபலம் அடைந்த மல்லிகா சாராபாய், அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
மே 9, வரலாற்றில் இன்று.

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் உருவான தினம் இன்று.

 அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது. அழகப்பச் செட்டியாரின்கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட  இக்கல்வி நிறுவனம் 1985ம் ஆண்டு மே 9 இல் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தின் வரம்பில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அமையப் பெற்ற 39 கல்லூரிகளும் ஒரு சுயாட்சி பெற்ற கல்லூரியும் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி மையம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
மே 9, வரலாற்றில் இன்று.

பால் ஹெரௌல்ட் நினைவு தினம் இன்று.

1880 வரை அலுமினியத்தின் விலை, தங்கத்தை விட மிக அதிகமாக இருந்தது. மிகவும் முக்கியமான விருந்தினர்களுக்கு அலுமினிய பாத்திரங்களை அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தான் நெப்போலியன்.

 1886 வாக்கில் அமெரிக்காவின் சார்லஸ் மார்டின் ஹால் மற்றும் பிரான்ஸ் நாட்டின் பால் ஹெரௌல்ட் இருவரும் கண்டுபிடித்த முறை தான் "ஹால்-ஹெரௌல்ட் பகுப்பு". இந்த கண்டுபிடிப்புக்கு பின்னர் தான் அலுமினியம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய  சாதாரண உலோகம் ஆனது!
மே 9, வரலாற்றில் இன்று.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே பிறந்த தினம் இன்று.

1) மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.

2) ஒரே டிராயர், ஒரு சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார். அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் ஆதரவாளராக மாறினார்.

3) இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். திலகர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணிபுரிந்தார். ஆனால், இவர் மிதவாதப் போக்கை கடைபிடித்தார். வன்முறையைத் தவிர்ப்பது, அரசு நிறுவனங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவது ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்.

4) மும்பை சட்டப் பேரவைக்கு 1899-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியர்களுக்குப் பொதுத்துறை விஷயங்களில் அதிக அரசியல் பிரதிநிதித்துவம் பெற்றுத்தர போராடினார்.

5) ஆங்கிலேய அரசின் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை ஆதரித்தார். கோகலே மற்றும் மறுமலர்ச்சியாளர்களின் ஆதரவுடன் அந்த மசோதா சட்டமாக்கப்பட்டது. இது உட்பட பல விஷயங்களில் இவருக்கும் திலகருக்கும் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.

6) கோகலே 1905-ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். இந்திய சேவகர்கள் சங்கம் (Servants of India Society) என்ற அமைப்பை உருவாக்கினார். நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பது, மக்களின் தேசிய உணர்வை ஊக்குவிப்பது, கல்வியை மேம்படுத்துவது போன்ற செயல் திட்டங்களுடன் இந்த அமைப்பு செயல்பட்டது. நடமாடும் நூலகங்களை ஒருங்கிணைத்து பள்ளிக்கூடங்களை நிறுவியது. தொழிற்சங்க ஊழியர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

7) நாடு சுதந்திரம் பெறுவதைவிட அதன் சமூக மறுமலர்ச்சியில்தான் கோகலே அதிக அக்கறை காட்டினார். இதை பலரும் எதிர்த்தனர். ஆனால் துணிச்சலுடன் தன் மறுமலர்ச்சிக் குறிக்கோள்களை முன்னெடுத்து செயல்படுத்தினார்.

8) மகாத்மா காந்தி வளர்ந்துவந்த ஆண்டுகளில் கோகலே அவருக்கு அறிவுரையாளராகத் திகழ்ந்தார். முகமது அலி ஜின்னாவுக்கும் இவரே வழிகாட்டியாக விளங்கினார். காந்திஜியின் அழைப்பின் பேரில் 1912-ல் தென்ஆப்பிரிக்கா சென்றார். அப்போது நாட்டு நடப்பு, சாமானிய மக்களின் பிரச்சினைகள் பற்றி காந்தியிடம் எடுத்துரைத்தார்.

9) ‘கோகலே என் அரசியல் குரு’ என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. ‘அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்’ என்றும் பாராட்டியுள்ளார் காந்தி. அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.

10) தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்த கோகலே 49ஆவது வயதில் (1915) காலமானார்.