வெள்ளி, 8 மே, 2020

மே 8, வரலாற்றில் இன்று.

கோகோ கோலா மென்பானத்திற்கு காப்புரிமை பெற்ற தினம் இன்று.

கோகோ கோலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பெர்டைன் என்ற அமெரிக்கர். ஜான் பெம்பெர்டைன் "மார்பைன்' என்ற கஞ்சாவைப் போன்ற ஒரு வகை போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தார். அப்பழக்கத்தினின்றும் மீள பிரஞ்ச் வைன் கொக்கோ என்ற மாற்று பானத்தை உற்பத்தி செய்து அதற்கு காப்புரிமையும் பெற்று சந்தைப் படுத்தி வியாபாரம் செய்தார். ஆனால் அந்த பானத்துக்கு அமெரிக்காவின் பல மாகாணங்கள் தடை விதித்தன. எனவே அவர் கார்பன் பாய்ச்சப்பட்ட நீரில் (carbonated water) தயாரிக்கப்பட்ட கொக்கோ கோலா என்ற மென் பானத்தை (Soft Drink ) தயாரித்து அதற்கு 1886ம் ஆண்டு மே 8ம் நாள் காப்புரிமை பெற்றார்.

 அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோ்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 130 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருக்கும் இந்த கோக்கோ கோலா பானத்துக்கு உலகம் முழுவதுமே கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. உடல் நலத்துக்கு மிகவும் கெடுதி விளைவிக்கக் கூடியது என்று பல நாடுகளின் தன்னார்வ சுகாதார குழுக்கள் எச்சரிக்கின்றன. இந்த பானத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் ஏராளமான நீரை விரயம் செய்வதாக புகாரும் உள்ளது.
மே 8, வரலாற்றில் இன்று.

உலக தாலசீமியா நோய் தினம் இன்று.

உலக தாலசீமியா நோய் தினம் மே 8-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நோய் குழந்தைகளுக்கு பிறவியிலேயே வருகிறது. தாலசீமியா பாதித்த குழந்தைகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்.

தாலசீமியா நோய் என்பது குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் ஒரு விதமான ரத்த சோகையாகும். தாலசீமியா பாதித்த குழந்தைக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும். இதனால், சுவாசிக்கும் ஆக்சிஜன் நுரையீரலில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. அதற்காக, குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க 6-வது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ரத்தம் ஏற்றிக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைக்கு மாதம் மாதம் ரத்தம் ஏற்றுவதால், உடலில் பல விதமான பிரச்சினைகள் வருகின்றன. மேலும் இரும்பு சத்து அதிகரிப்பதால் மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல தீவிர நோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளது.

அம்மா, அப்பா வம்சாவழியில் யாருக்காவது தாலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்கும் இந்நோய் வருகிறது. முக்கியமாக சொந்த உறவுகளில் திருமணம் செய்வதால் குழந்தைகள் தாலசீமியா நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பெண்கள் கர்ப்பக் காலத்தில் பரிசோதனை செய்து கருவில் இருக்கும் குழந்தை தாலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்கலாம். தாலசீமியா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை வேண்டாம் என நினைப்பவர்கள் கருக்கலைப்பு செய்துவிடலாம். குறைபாட்டுடன் குழந்தையை பெற்றுக் கொண்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதைவிட, கருக்கலைப்பு செய்துவிடுவது நல்லது. தாலசீமியா நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சையே சிறந்த தீர்வாகும்.
மே 8,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர்
ராபர்ட் ஏ. ஐன்லைன் நினைவு தினம் இன்று.


ராபர்ட் ஏ. ஐன்லைன் அல்லது ராபர்ட் ஏ. ஹைன்லைன் (Robert A. Heinlein, ஜூலை 7, 1907 – மே 8, 1988) ஒரு அமெரிக்க ஆங்கில அறிபுனை எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் அறிபுனை எழுத்தாளர்களும் மிகவும் பிரபலமானவர், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆனால் அதே சமயம் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஆங்கில இலக்கிய உலகின் விளிம்பில் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்தில் மட்டும் வாசிக்கப்பட்டு வந்த அறிபுனை இலக்கியத்தை இலக்கிய மையத்துக்கு அழைத்து வந்த முன்னோடிகளுள் இவரும் ஒருவர். இவர் ஆங்கில அறிபுனை பாணியின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் - ஆர்தர் சி. கிளார்க்கும், ஐசாக் அசிமோவும்).


ஐன்லைன் தனது அறிபுனைப் படைப்புகளில் பல சமூகம், அரசியல் சார்ந்த விஷயங்களையும் விரிவாக அலசியுள்ளார். இவரது படைப்புகள் பெரும்பாலும் தனிமனித சுதந்திரம், தன்னிறைவு போன்ற கருத்துகளை முன்வைக்கின்றன. இவரது படைப்புகளில் ராணுவ ஆட்சி முறையையும், பாசிசத்தையும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக முன்வைக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. அறிபுனை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக உயரியதான ஹூகோ விருது இவருக்கு நான்கு முறை வழங்கப்பட்டுள்ளது. வெளியாகி ஐம்பது வருடங்களாகியும் இவரது புத்தகங்கள் அறிபுனை வாசகர்களிடம் இன்றும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.
மே 8 – 9, வரலாற்றில் இன்று.

இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தோருக்கான நினைவு தினம் இன்று மற்றும் நாளையும்.

இரண்டாம் உலகப் போரின்போது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது பூமியில் நிகழ்ந்த கொடுமையான வரலாற்று நிகழ்வாகும். எதிர்காலத்தில் மீண்டும் இது போன்று ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதை நினைவுறுத்தும் வகையில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் நினைவஞ்சலி மற்றும் நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மே 8, வரலாற்றில் இன்று.

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் (International Red Cross and Red Crescent Day) இன்று.

இத்தினம் மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான ஹென்றி டியூனண்ட் (Henry Dunant) அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோஸ்லவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது எனலாம். 1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் என அழைக்கப்படுகிறது.
*பரமத்தி ஒன்றியத்தில் 53 ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் விடுபடாமல் தூய்மைப் பணியாளர் ஊதியம் வழங்கிட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்,நாமக்கல் அவர்களுக்கு  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக் கிளையின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.*