ஞாயிறு, 25 ஜூலை, 2021

அன்பானவர்களே! வணக்கம். எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள்-கையாடல்கள் குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு அளித்திட்ட புகாரின்‌ மீது நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதுமான அளவிற்கு திருப்திகரமாக இல்லை. கண்துடைப்பு மிகுந்ததாக, உறுப்பினர்களின் நிதி கையாடல் பிரச்னைகளை மூடிமறைப்பதாக உள்ளது.ஒரு பக்கச் சார்பு கொண்டதாகவே இதுவரையிலும் கூட்டுறவுத்துறை அலுவலர்களின் நடவடிக்கைகள் காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஆட்சி ஆண்ட அரசியல் கட்சியின் கட்டளைகளின் படி தவறிழைத்துள்ள இந்த சங்கத்தின் தலைவரை மற்றும் செயலாளரை காப்பாற்றி விட்டு ,சுயஆதாயம் தேடிக்கொள்ளும் மனநிலையிலேயே இன்று வரை நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் இருந்து வருகின்றனர். மேற்கண்ட சங்கத்தின் தலைவராக இருப்பவர் ஒரு ஆசிரியராக இருந்தாலும், நாணயச் சங்கத்தை நாணயமாக நடத்திடவில்லை. ஒரு அரசியல்கட்சியின் பரிபூரணமான கடாட்சம் பெற்றுள்ளதால் மிகுந்த துணிச்சலோடு எல்லாவிதமான முறைகேடுகளில்‌- கையாடல்களில் முழுமையாக துணை புரிந்துஉள்ளார் என்றே நடைமுறைச்செயல்பாடுகளில் இருந்து அறிய‌முடிகிறது. இது வரையிலும் தன்னை சங்கத்தலைவர் திருத்திக்கொண்டதாக நிர்வாக நடைமுறைகளில் தெரியவில்லை. எல்லாவிதமான முறைகேடுகளுக்கும்-கையாடல்களுக்கும் உடந்தையாகவே இருந்து வருகிறார் சிக்கன நாணயச் சங்கத்தலைவர் என்றே அறியமுடிகிறது. தான்‌ தலைவராக நீடித்தால் போதும்,எது எக்கோலம் போனால் தனக்கென்ன ?!எனும் மனநிலையிலையே உள்ளார்.இத்தகு மனநிலை கொண்டவரின் நிர்வாகத்தில் சிக்கன நாணயச்சங்கம் எப்படி?எவ்வாறு?சிறப்பாக செயல்படும்?என்று கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்கள் கருதுகின்றனர் என்பது தான் வியப்பளிக்கிறது. இவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு சாதகமான குழுவினை நிர்வாகக்குழுவில் ஏற்படுத்திக்கொண்டு பிரச்னைகளை மூடிமறைத்து வருகிறார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை!அலங்கோலம் அலங்கோலமாகவே பாதுகாக்கப்படுகிறது! இத்தகு அவலமான நிலையானது தமிழ்நாடு அரசுக்கு பெருமை சேர்க்காது!புகழ் சேர்க்காது!அறமாகாது! என்பதை நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் !மனதில் நிலைநிறுத்தி செயல்பட வேண்டும்!என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மீண்டும்,மீண்டும் வலியுறுத்துகிறது! இதே அவலமான நிலை நீடிக்குமேயானால் , நாமக்கல் சரக கூட்டுறவுத்துணைப் பதிவாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஏழு கட்டத் தொடர்நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்! இத்தகு தொடர் போராட்டங்களினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கூட்டுறவுத்துறையே பொறுப்பேற்க வேண்டிவரும்! என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தெரிவித்துக்கொள்கிறது! நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையே! கடந்த ஆட்சிக்காலத்தில் மூடிமறைத்த முறைகேடுகளை- கையாடல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருக! தவறிழைத்தவர்களின் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும்-தமிழ்நாடு கூட்டுறவுச்சட்டத்தின் கீழும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்க! தமிழ்நாடு அரசின் மாண்பினை பாதுகாத்திடுக! கூட்டுறவுத்துறையின்‌ மீது நம்பகத்தன்மையை ஏற்படுத்திடுக! இவண், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம் (கிளை).