வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

2016-ம் ஆண்டை விட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2018-ல் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்...

2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களைக் காட்டிலும், 
2018-ம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 2016-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றங்கள் நடந்தன. இது 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 32 குற்றங்களாக உயர்ந்தன. 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 குற்றச்சம்பவங்களாக அதிகரித்துள்ளன.

இருப்பினும் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்புச் சட்டம் (போக்ஸோ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டு கடுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 2018-ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் குறித்துத் தெளிவான விவரங்கள் வழங்கப்படவில்லை".

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்த்தார்.

மத்திய அரசின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு: கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து குறைவு...


அரசுத் தரவுகளின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் கல்விக்கு நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்து வருவது தெரியவந்துள்ளது.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வித்துறைக்காக மத்திய அரசு ரூ.99 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 
இதில் ரூ.3 ஆயிரம் கோடி திறன் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்நிலையில் மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு  பதிலளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''ஒட்டுமொத்த பட்ஜெட்டில், கல்விக்காக 3.2% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது 2014-15, 2015-16, 2016-17, 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.61%, 3.89%, 3.66%, 3.71% மற்றும் 3.48% ஆக இருந்தது.

உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) சதவீத அடிப்படையில் 2014-15, 2015-16, 2016-17, 2017-18 2018-19 ஆகிய ஆண்டுகளில் முறையே 4.07%, 4.20%, 4.32% மற்றும் 4.43% ஆக இருந்தது'' என்று குறிப்பிட்டார்.