அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன்சிலிங், ஜூலை முதல் வாரத்தில் துவங்கும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேர, தமிழக அரசின் சார்பில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்தப்பட உள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.59 லட்சத்து, 631 பேர் விண்ணப்பித்துஉள்ளனர். இவர்களில், 59 ஆயிரத்து, 416 பேர் மாணவியர். கவுன்சிலிங்கில், தரவரிசை பட்டியல் தயார் செய்வதற்கான, 'ரேண்டம்' எண் பட்டியலை
உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன், முதன்மை செயலர், சுனில் பாலிவால் ஆகியோர், வெளியிட்டனர்.
பின்னர், அமைச்சர் அளித்த பேட்டி:
மாணவர்களின் தரவரிசை பட்டியலை நிர்ணயிக்கும் போது, ஒரே மதிப்பெண் உள்ள மாணவர்களை வரிசைப்படுத்துவதற்கு, ரேண்டம் எண் உருவாக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் கவுன்சிலிங் முறையில், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்வதன் வழியாக, மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்படும்.
இதற்கான கவுன்சிலிங்கை, ஜூலை, 6ம் தேதி துவங்க திட்டமிட்டுள்ளோம். மருத்துவ கவுன்சிலிங் தேதிக்கு ஏற்ப, இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி மாறுபடும்.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 18 ஆயிரத்து, 500 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், ஒரு லட்சத்து, 59 ஆயிரத்து, 631 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஜூன், 8 முதல், 14 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.