சனி, 20 நவம்பர், 2021
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில #குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.#ஸ்டாலின்..!!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும் தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவியும், கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி ஒருங்கிணைந்த வளர்ச்சியை பெறவும், குழந்தைகளின் உரிமைகள் எவ்வித தடையுமின்றி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும் மாநில அளவில் குழந்தைகளுக்கான கொள்கையை வடிவமைத்தல் இன்றியமையாதது ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு அவர்களின் வளர்ச்சிப் படிநிலைகளுக்கான இலக்கினை அடைந்திடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி, மருத்துவம், பாலியல் பாகுபாடின்மை, பாதுகாப்பு இவை அனைத்திற்குமான தனித்துவம் வாய்ந்த கொள்கையாக “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மேல் மாறாத அன்பும் அவர்களின் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவி திட்டங்களையும் நிவாரண நிதி உதவிகளையும் வழங்குவதற்கு 29.05.2021 அன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அவ்வறிப்பினை தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் இதுநாள்வரையில் கோவிட்-19 நோய் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த 256 குழந்தைகளுக்கு ரூ.12.80 கோடி மற்றும் ஒரு பெற்றோரை இழந்த 6,493 குழந்தைகளுக்கு ரூ.194.79 கோடி, என மொத்தம் 6,749 குழந்தைகளுக்கு ரூ.207.59 கோடி தமிழ்நாடு அரசால் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் 2021-22ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், பெற்றோர் இருந்தும் வறுமை நிலை காரணமாக, பராமரிக்க இயலாது குழந்தைகளை நிறுவனங்களில் வைத்து பராமரிப்பதற்கு மாற்றாக குடும்பங்களில் வைத்து பராமரிப்பதை ஊக்குவிக்கும் வண்ணம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவுத் திட்டத்தின் காத்திருப்பு பட்டியலில் உள்ள 1,148 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு மாநில அரசின் முழு பங்களிப்புடன் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்திற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.1,37,76,000/- நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 10 குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதியுதவிக்கான காசோலைகளை வழங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமூகநல இயக்குநரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அலுவலகங்களில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 15 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)