வாட்ஸ் அப் நிறுவனம், குரூப்களில் புதிய நபர்களை சேர்க்கும் முறையில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டாக குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வாட்ஸ் அப்பில் தற்போது யார் வேண்டுமானாலும் தங்களது கணக்கில் இருக்கும் வாட்ஸ் அப் பயனர்களை குரூப்பில் சேர்த்து அட்மினாக ஆகலாம். இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும்.
இந்நிலையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வாட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அப்டேட் வர உள்ளது.
Settings...
1. வாட்ஸ் அப் செட்டிங்சில் உள்ள பிரைவசி பகுதியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும். (WhatsApp Settings > Account > Privacy > Groups)
2. யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதாவது Everyone, My Contacts, Nobody என்று இருக்கும்.
3. அதில் உள்ள Nobody என்ற ஆப்ஷனை நாம் தேர்ந்தெடுத்தால் யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குரூப்பில் சேர்க்க முடியும்.
4. நீங்கள் எந்த பதிலும் கொடுக்காதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே காத்திருக்கும்.