வியாழன், 17 செப்டம்பர், 2020

செப்டெம்பர் 17,வரலாற்றில் இன்று. திரு.வி.க என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.

செப்டெம்பர் 17,
வரலாற்றில் இன்று.

 திரு.வி.க என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.

1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று விருத்தாசலம் முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாக பிறந்தார்.

1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.  

1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.  சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.  

இதனால் கல்வி தடைப்பட்டது.  நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் 
செல்லவில்லை.

மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.  

ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார்.  

1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.   

1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது.  விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார்.  

1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார்.  

அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார்.  இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது.  

இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார்.  1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவ ஐயருடன் தொடர்பு ஏற்பட்டது.  

1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார்.  அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.  

1910 முதல் 1916 வரை வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் அம்மையாரை மணந்தார்.  மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது.  

தன்னிடமிருந்த மிருகப் போக்கை மாற்றியது மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார். 

1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.  

1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  

1917 ஆம் ஆண்டு பி.பி. வாடியா உடன் தொடர்பு ஏற்பட்டது.  பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.

1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார்.  

டிசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.  

தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.  

பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் தொடங்கி நடத்தி வந்தார்.

1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார்.  சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார்.  

இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  

இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார். 

1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார்.  இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது.  திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.  

1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது.  இவ்வாண்டு அக்டோபர் திங்களில் நவசக்தி என்னும் இதழைத் தொடங்கினார்.

1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்தி  விடுவதாக மிரட்டினார்.  
ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை.  

சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது. 

1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது.  

தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார்.  இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது.  1947 ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.க வுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது.  

1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.  

1953 செப்டெம்பர் 17 அன்று காலமானார்.

செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.

செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.

பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.
செப்டெம்பர் 17, வரலாற்றில் இன்று.

பெரியார் ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் இன்று.

யார் இந்த பெரியார்? ஏன் அவரைப் பற்றி இன்றும் பேசுகிறோம்?

பெரியாரை இன்றைய தலைமுறையினர் சரியாகப் புரிந்து கொள்ள உதவும். 

படியுங்கள்.

"ஏனெனில்_அவர்_பெரியார்"
-----------------------------------
பெரியார் படத்தின் மீது, சிறுநீர் கழிக்கப்படுகிறது,....
செருப்பால் அடிக்கப்படுகிறது,....
இன்று அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைவார்; அவமானப்பட மாட்டார். 
அவரே சொன்னார்... 
'பொதுத் தொண்டுக்கு வந்தவன், மானம் - அவமானம் பார்க்க முடியாது; மானம் பார்த்தால் தொண்டு செய்ய முடியாது!’

கடலூர் மஞ்சக்குப்பத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை நோக்கி கைவண்டியில் பயணித்துக்கொண்டு இருந்தார் பெரியார். நள்ளிரவு நேரம். பகலிலேயே அவர் மீது கல், சாணி விழும். அனைத்தையும் பார்த்தும் பயம் இல்லாமல்தான் பேசுவார். ராத்திரி நேரத்தில் பயணம் செய்யும்போது சும்மா இருப்பார்களா? திடீரென, கயிறுபோல ஏதோ ஒன்று அவர் மேல் விழுந்தது. அது... பச்சைப் பாம்பு. எடுத்துத் தூக்கிப் போட்டுவிட்டு, வண்டியை வேகமாகச் செலுத்தச் சொன்னார். கொஞ்சம் தூரம் போனதும், வண்டியைத் திருப்பச் சொல்லி வந்த வழியே மீண்டும் போகச் சொன்னார். வண்டியை ஓட்டுபவருக்கு ஒன்றும் புரியவில்லை; உடன் வந்தவர்களுக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை. வண்டியைவிட்டு இறங்கிய பெரியார், காலால் தடவியவாறு இருட்டில் எதையோ தேடினார். ஒரு செருப்பு கிடந்தது. அதை கையில் எடுத்த பெரியார், 'அதுதானே பார்த்தேன்! நான் போகும்போது என் மேல ஒரு செருப்பு விழுந்தது. ஒரு செருப்பை வீசினவரால் இன்னொரு செருப்பை வெச்சுட்டு பிரயோஜனம் இல்லை. அதனால் அந்த இடத்துலதானே போட்டுட்டுப் போயிருக்கணும். அதை எடுக்கத்தான் வந்தேன்’ எனச் சொன்னார். அவர் மீது செருப்பு வீசப்பட்டதே மற்றவர்களுக்கு அப்போதுதான் தெரியும்.

30 ஆண்டுகள் கழிந்தது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் பெரியாருக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது. 'செருப்பொன்று வீசினால் சிலையொன்று முளைக்கும்’ என கவிஞர் கருணானந்தம் எழுதினார். பெரியாரின் 'ராசி’ இறப்புக்குப் பிறகும் செருப்பு மாலைகள்!

ஈரோட்டில் மளிகைக்கடை மண்டிவைத்து வெறும் ராமசாமி நாயக்கராக செல்வத்தில் புரண்டு கிடக்காமல், அவர் தலையெழுத்து... தமிழர்களுக்காக இரவும் பகலும் வெயிலிலும் மழையிலும் அலைந்து, குடல் இறக்கம் காரணமாக மாட்டு வயிறுபோல தொங்கிய தன் வயிற்றைத் தூக்கிக்கொண்டு திரிந்து, சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலும் மூத்திரச் சட்டியுடன் மேடையில் அமர்ந்து, சிறுநீர் பிரியும்போதெல்லாம் 'அம்மா... அம்மா...’ என மரண அவஸ்தைப்பட்டு, அந்தக் கிழவன் பாடுபட்டதன் வினை என்ன தெரியுமா? அவரது படத்துக்கு ஓர் இளைஞர் செய்கிறார் சிறுநீர் அபிஷேகம்!

'உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான்’ எனச் சொன்னவர் பெரியார். சாதியை எதுவெல்லாம் காப்பாற்றியதோ அதையெல்லாம் எதிர்த்து பிரசாரம் செய்தார். மதம், சாஸ்திரம், கடவுள் எதிர்ப்புக் கருத்துக்களை அவர் அதிகம் பேசியது அதனால்தான். 'எனக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருப்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இழிதன்மைகள்தான். அவர்களைச் சுதந்திரம் அடையச் செய்வதே என் கண் நோய்க்கான தீர்வு’ என்பதைத் தெளிவாகச் சொன்னவர் அவர். அந்த லட்சியத்துக்காகப் பேசியவர்; போராடியவர். அதில் சிறுபகுதிதான் கடவுள் மறுப்பு. 'சாதியை மதம் காப்பாற்றுகிறது. மதத்தைக் கடவுள் படைத்தார் என்றால், அப்படிப்பட்ட கடவுளும் மதமும் தேவையா?’ என்றே அவர் கேட்டார்.

கடவுள் மறுப்பு வாசகங்களை, தன் சிலைக்குக் கீழே செதுக்கிவைத்திருக்கச் சொன்னதே, அவரது கிண்டலான எதிர்வினைதான். 'சும்மா சிலையை மட்டும் வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பின், இவர் ஏதோ சாமியார்போல என நினைத்து மாலை போட்டுக் கும்பிட ஆரம்பிச்சுருவான். அப்படி ஆகிவிட கூடாதுனுதான் இப்படி எழுதச் சொன்னேன்’ என்றார்.

கடவுள் இல்லை என நா தழும்பேறி நாத்திகத்தை பிரசாரம் செய்த பெரியார், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நிச்சயம் கவனிக்க வேண்டியது.

தான் நடத்திய அநாதை இல்லத்தில் பெரியார் உட்கார்ந்து இருந்தார். அவரைச் சந்திக்க வந்த கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு பேசிக்கொண்டு இருந்தார். கடவுள் வாழ்த்து என்ற பாடலை அந்தப் பிள்ளைகள் வாசித்ததை நெ.து.சு. கவனித்து, 'உங்கள் பிள்ளைகள் மட்டும் கடவுள் வாழ்த்து படிக்கிறார்களே?’ என பெரியாரிடம் கேட்டார். 'ஆதரிக்க ஆள் இல்லாத அநாதைப் பிள்ளைகள் இவர்கள். சோறு போட்டுக் காப்பாற்றுகிறேன் என்பதற்காக நாத்திகத்தை அவர்கள் தலையில் திணிக்கவில்லை. வயதுவந்தால் அவர்கள் படித்துத் தெரிந்துகொள்வார்கள். தங்கள் சிந்தனையால் அவர்கள் நாத்திகர்களானால் சரி’ எனச் சொன்ன பண்பு, இன்று தமிழ்ச் சமூகத்திடம் இருக்கிறதா?

'என் அபிப்பிராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், என் அபிப்பிராயத்தை வெளியிட எனக்கு உரிமை உண்டு’ என்பதுதான் பெரியாரின் நடத்தை. தனது கருத்துக்கு எதிரானவர்கள் அனைவரையும் தன்னைவிட உயர்வாக மதித்தவர் அவர்.

சைவ நெறியாளரான மறைமலை அடிகளுக்கும் பெரியாருக்கும் கடுமையான மோதல்கள் நடந்தன. சைவ சமயக்கூட்டத்தில் இவரது ஆட்களும், சுயமரியாதை இயக்கக் கூட்டங்களில் சைவ சமயத்தவரும் மோதிக்கொள்வார்கள். ஒருகட்டத்தில் இரண்டு இயக்கத்தவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டது. மறைமலை அடிகள், பெரியாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதை 'திராவிடன்’ இதழில் பிரசுரிக்கச் சொன்னார் பெரியார். ஆசிரியர் குழுவினர், 'மன்னிப்புக் கடிதம்’ எனத் தலைப்பிட்டு பிரசுரித்துவிட்டார்கள். துடித்துப்போன பெரியார், 'இந்தத் தலைப்புக்காக நிபந்தனை இல்லாமல் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்’ எனப் பகிரங்கமாகப் பணிந்தார்.

சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. 'நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர்.

 அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும்,மு.வரதராசனாரும் வந்து, 'திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். 'சரி’ என, தன் தொண்டர்களை அமைதியாக இருக்கச் சொன்னார் பெரியார். 'திருவாசகத்தில் சிவபுராணத்தைப் பாடப்போகிறோம்’ என அ.ச.ஞா சொன்னார். 'அப்படியே செய்யுங்க’ எனச் சொல்லிவிட்டு அவர்கள் பாடும்போது எழுந்து நின்றவர் பெரியார்.

கடவுளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் பெரியாரைச் சந்திக்க நினைக்கிறார் குன்றக்குடி அடிகளார். ஈரோடு வந்த அடிகளார், பெரியாரைச் சந்திக்க வருவதாகச் சொல்கிறார். 'நீங்கள் மகா சந்நிதானம். என்னைத் தேடிவரக் கூடாது. நானே வருகிறேன்’ எனச் சொல்லிவிட்டு பெரியார் சென்றார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார் அடிகளார். 'மகா சந்நிதானம் எழுந்து நிற்கக் கூடாது’ எனச் சொல்லிவிட்டு அருகில் இருந்த நாற்காலியில் அமரப் போகிறார். 'இந்த இருக்கையில் இரண்டு பேர் உட்காரலாம். என் அருகில் உட்காருங்கள்’ என அடிகளார் சொல்ல, 'சந்நிதானத்துக்குச் சமமாக நான் உட்காரக் கூடாது’ என மறுத்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள். 'சாதியை உங்கள் கடவுளும் மதமும் ஒழிக்கவில்லையே’ என பெரியார் சொல்ல, 'சாதியை கடவுள் உருவாக்கவில்லை’ என அடிகளார் சொல்ல, 'ஆனால், உங்கள் கடவுள் அதைத் தட்டிக் கேட்கவில்லையே’ என பெரியார் சொல்ல... அந்தச் சந்திப்புதான் இருவரையும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் கரம் கோக்கவைத்தது.

அப்போது பெரியார் சொல்லி அடிகளார் குலுங்கிச் சிரித்த ஜோக்: 'எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா? நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

அடிகளாரைப் பார்க்க, அவரது குன்றக்குடி மடத்துக்கே பெரியார் ஒருமுறை போனார். அவருக்கு வைதீகமாக பூரணக் கும்ப மரியாதை தரப்பட்டது. அடிகளார், மரியாதையின் அடையாளமாக விபூதியை எடுத்துப் பூசினார். பெரியார் அழிக்கவில்லை. சில நாட்கள் கழித்து பெரியாரிடம் ஒரு தொண்டர் கேட்டபோது, 'விபூதியை நான் எடுத்துப் பூசிக்கொள்ளவில்லை. அடிகளார்தான் பூசிவிட்டார். அப்போது தலையைத் திருப்புவது அவரை அவமதிப்பதுபோல் ஆகாதா?’ எனக் கேட்டார். அடுத்தவர் உணர்வுக்கு மரியாதை கொடுத்து நடந்தவரின் படத்தை இன்று சிறுநீரால் அவமதிக்கிறார்கள்.

பிராமண துவேஷி என அவர் தூற்றப்படுகிறார். உண்மையில், அவர் சாதி துவேஷிதானே தவிர,  குறிப்பிட்ட ஒரு சாதியின் துவேஷி அல்ல. எல்லா சாதிகளையும் அதன் ஆணவத்தையும் கண்டித்தவர். சிலர் 'தங்களை ஆண்ட பரம்பரை’ எனச் சொன்னபோது, 'பட்டாளத்தில் இருந்த எல்லாரும் ஆண்ட பரம்பரைதான்’ என நெத்தியடி அடித்தவர். 'பறையர் பட்டம் போகாமல் சூத்திரர் பட்டம் போகாது’ என்றவர்.

அனைத்துக்கும் மேலாக தான் சார்ந்த சமூகத்தையே விமர்சிக்கத் தயங்காதவர். ஒருவன் தான் பிறந்த மதத்தை, தான் பிறந்த சாதியை விமர்சிப்பதற்குத்தான் வீரம் வேண்டும். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒரு கிராமத்தில் மரியாதைக் குறைவாக நடத்தியபோது, 'இரண்டு பேருக்கும் என்ன வித்திசாயம்?’ எனக் கேட்டவர். 'இந்து’ கஸ்தூரி சீனிவாசன், நியூஸ் ஏஜென்சியை ஆரம்பித்தபோது பணம் முதலீடு செய்தார். சிம்சன் அனந்த ராமகிருஷ்ணன் இயந்திரக் கலப்பையை உற்பத்தி செய்தபோது பார்க்கப் போனார்.

மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள் மயிலாப்பூருக்கு வந்தபோது, திராவிடர் கழகத்தினர் அங்கு குழும, ரசபாச சூழல் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்த பெரியார், 'பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது உங்கள் வேலை’ என தி.க-வினருக்கு அறிவுறுத்தினார்.

கவியோகி சுத்தானந்த பாரதி தனது வீட்டுக்கு வந்தபோது, பூட்டப்பட்டுக் கிடந்த பூஜை அறையைத் திறந்துவிட்டு, தட்டில் பூ கொண்டுவைத்தவர் பெரியார். வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்துகொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, 'கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். 'நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர்.

அவரது படத்துக்கா இன்று சிறுநீர் கழிப்புகள்?

அந்தக் காலத்தில் மாலி என்பவர் 'கடவுள் எங்கே?’ என்ற தலைப்பில் நாடகம் நடத்தினார். பெரியாரைக் கடுமையாகத் திட்டிய நாடகம் அது. ம.பொ.சி-யின் நண்பர் அவர். பெரியாரைச் சந்திக்கப் போன ம.பொ.சி., தன்னோடு மாலியையும் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். ' 'கடவுள் எங்கே?’ நாடகம் போட்ட பையனா நீ?’ எனக் கேட்டார். 'உங்களை எதிர்த்து அதில் நிறைய வசனங்கள் வருது’ என்றார் மாலி. 'அதனால் என்ன... உன் கருத்தை நீ சொல்ற... என் கருத்தை நான் சொல்றேன். இதுல தப்பு ஒண்ணும் இல்லை. மக்கள் முடிவு பண்ணிப்பாங்க’ என இந்தச் சமூகத்தில் தனக்கு எவ்வளவு உரிமையை எடுத்துக்கொண்டாரோ, அதே உரிமையை தனது கொள்கை எதிரிக்கும் வழங்கினார். ஆனால், அவர் எந்த மரியாதையை மற்றவர்களுக்குக் கொடுத்தாரோ அது அவருக்குத் திரும்பக் கிடைக்கவில்லை. அதைப் பெரியார் எதிர்பார்த்தவரும் அல்ல.

 'மனித ஜீவனிடம் நன்றியை எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மை’ எனச் சொன்ன அவர், 'எனக்கு யாரிடமும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என்றும் சொன்னார்.  

ஏனெனில் அவர் தான் பெரியார்.