செப்டெம்பர் 17,
வரலாற்றில் இன்று.
திரு.வி.க என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவு தினம் இன்று.
1883 ஆம் ஆண்டு ஆகஸ்டு 26 அன்று விருத்தாசலம் முதலியாருக்கும், சின்னம்மாளுக்கும் ஆறாவது குழந்தையாக பிறந்தார்.
1891 ஆம் ஆண்டு சென்னை இராயப்பேட்டையில் தொடக்கக் கல்வி கற்றார்.
1894 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார். சேர்ந்த சில மாதங்களில் கை கால் முடக்கம் ஏற்பட்டது.
இதனால் கல்வி தடைப்பட்டது. நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச்
செல்லவில்லை.
மீண்டும் 1898 ஆம் ஆண்டு வெஸ்லி பள்ளியில் சேர்ந்து மெட்ரிகுலேஷன் வரை பயின்றார்.
ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால், இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து நின்றார்.
1901 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயின்று தேர்ந்தார்.
1907 இல் கதிரைவேலர் மறைவு நிகழ்ந்தது. விபின் சந்திர பால் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது அதுமுதல் தேசியத்தின் பொருட்டுப் போராடத் துணிந்தார்.
1907 முதல் 1908 வரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஸ்பென்சர் கம்பெனியில் பணி செய்தார்.
அங்கே இந்திய உரிமைகளைப் பற்றி சக ஊழியர்களிடம் படித்துக்காட்டுவார். இதனால் அக்கம்பெனியின் மேலாளர் திரு.வி.க வை எச்சரிக்க நேர்ந்தது.
இருப்பினும் அதனைப் பொருட்படுத்தாத திரு.வி.க அப்பணியைத் துறந்தார். 1908 ஆம் ஆண்டு ஜஸ்டின் சதாசிவ ஐயருடன் தொடர்பு ஏற்பட்டது.
1910 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார். அம்மா என்று தான் திரு.வி.க பெசண்டை அழைத்து மகிழ்வார்.
1910 முதல் 1916 வரை வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1912 ஆம் ஆண்டு கமலாம்பிகை என்னும் அம்மையாரை மணந்தார். மணவாழ்க்கை அவருக்கு இனிப்பூட்டுவதாய் இருந்தது.
தன்னிடமிருந்த மிருகப் போக்கை மாற்றியது மணவாழ்க்கை தான் என்று தன்னுடைய குறிப்பில் திரு.வி.க குறிப்பிட்டுள்ளார்.
1914 ஆம் ஆண்டு சுப்புராய காமத், எஸ்.சீனிவாச ஐயங்கார் தொடர்பு ஏற்பட்டது.
1916 ஆம் ஆண்டு வெஸ்லி கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
1917 ஆம் ஆண்டு பி.பி. வாடியா உடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னாளில் திரு.வி.க தொழிற்சங்கம் தொடங்குவதற்கு வாடியாவின் தொடர்பு தான் காரணமாக இருந்தது.
1917 ஆம் ஆண்டு தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டி பணியை விடுத்தார்.
டிசம்பர் 7ஆம் நாள் தேசபக்தன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
தேசபக்தனில் இரண்டரை அண்டுகள் பணியாற்றினார் அதன் பின்னர் அவ்விதழின் செயலாளருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக இதழ்ப்பணியை விடுத்தார்.
பின்னர் நவசக்தி என்னும் இதழை நண்பர்களின் துணையுடன் தொடங்கி நடத்தி வந்தார்.
1918 இல் இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் தொடங்கினார். சென்னைத் தொழிலாளர் சங்கம் என அதற்குப் பெயரிட்டார்.
இச்சங்கத்திற்கு திரு.வி.க துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
இதே ஆண்டில் தான் அவரின் துணைவியார் இயற்கை எய்தினார்.
1919 ஆம் ஆண்டு முதன் முதலாகக் காந்தியடிகளைச் சந்தித்தார். இவ்வாண்டில் தான் பெரியாரின் நட்பும் திரு.வி.கவுக்குக் கிடைக்கப்பெற்றது. திலகரை வ.உ.சி உடன் சென்று சந்தித்தார்.
1920 ஆம் ஆண்டு மத்திய தொழிலாளர் சங்கம் தோற்றம் பெற்றது. இவ்வாண்டு அக்டோபர் திங்களில் நவசக்தி என்னும் இதழைத் தொடங்கினார்.
1921 ஆம் ஆண்டு ஆளுநர் வெலிங்டன் பிரபு இவரை அழைத்து நாடுகடத்தி விடுவதாக மிரட்டினார்.
ஆனால் அதற்கு திரு.வி.க அஞ்சவில்லை.
சர். தியாகராய செட்டியாரின் உதவியால் நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது.
தலைவர் திரு.வி.க வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா மாநாட்டிலிருந்து வெளியேறினார். இதனால் தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.
1944 ஆம் ஆண்டு திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்பு வெளிவந்தது. 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 7 வரை காங்கிரஸ் ஆட்சியில் திரு.வி.க வுக்கு வீட்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டது.
1949 இல் தன்னுடைய ஒரு கண் பார்வையை இழந்தார், பின் இரு கண்களுமே இழக்க நேரிட்டது.
1953 செப்டெம்பர் 17 அன்று காலமானார்.
மிக சிறந்த தொகுப்பு. நன்றிகள்.
பதிலளிநீக்கு