திங்கள், 18 நவம்பர், 2019

நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.


சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவு தினம் இன்று.

மன்னார்குடி வட்டம் தேவங்குடியில் பிறந்த தி.ஜானகிராமன் (தி.ஜா) அவர்கள். சிறுகதை, நாவல், பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர்.

பத்து வருடங்கள் பள்ளியாசிரியராக பணியாற்றி,
பின் அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தி.ஜா எழுதிய நாவல்கள் :
மோகமுள்
அமிர்தம்
அம்மா வந்தாள்
மரப்பசு
நளபாகம்
மலர்மஞ்சம்
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
அடி

சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைள், கட்டுரைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

மன்னைக்கு பெருமை சேர்த்த தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் இவர்.
நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.

சென்னை புறநகர் பேருந்து நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்ட தினம் இன்று (2002).


சென்னை புறநகர் பேருந்து நிலையம் சென்னை மாநகரின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய பேருந்து நிலையம்.

 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஐ.எஸ்.ஓ 9001:2000 தரச் சான்றிதழும் இப்பேருந்து நிலையம் பெற்றுள்ளது.

 இப்பேருந்து நிலையம் 103 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.ஒரே சமயத்தில் 270 பேருந்துகளையும், நாளொன்றுக்கு 2000 பேருந்துகளையும் 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது.

தி. மு. க. ஆட்சியில் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்ட இப்பேருந்து நிலையம் மருத்துவமனையாக மாற்றப்படாமல் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாளன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது !
நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.


‘மிக்கி மவுஸ்’ உருவான தினம் இன்று (1928).


மிக்கி மவுஸ் உருவான கதை

டோரிமான், சின்சான், ஸ்கூபி டூ, ஸ்நோ வைட், டாம் அண்டு ஜெரி, பென் டென், டோரா, மொட்லு பொட்லு என்று இன்றைய குழந்தைகளைக் குஷிப்படுத்தும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ஏராளம். உங்கள் தாத்தா, பாட்டி குழந்தைகளாக இருந்த காலத்துக்கு முன்பிருந்தே குழந்தைகள் உலகின் முடிசூடா மன்னனாக இருப்பது ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரம்.

மிக்கி மவுஸ் கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கியவர் யார் தெரியுமா?
 வால்ட் டிஸ்னி. இவரது குழந்தைப் பருவம் ரொம்ப சோகமானது. டிஸ்னியின் தந்தை ரொம்ப கண்டிப்பானவர். கோபக்காரரும் கூட. டிஸ்னி தனது 10 வயதில் வீடுவீடாக பேப்பர் போடும் பையனாக வேலைக்குச் சென்று, சம்பாதித்ததை அப்பாவிடம் கொடுப்பார். படங்கள் வரைவதென்றால் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், அவரது அம்மாவிடம் அனுமதி வாங்கி நுண்கலைப் பயிற்சி வகுப்புகளுக்கு தினமும் சாயங்கால வேளையில் போய்வந்தார். அப்போதுதான் அவருக்குள் ஓவியம், புகைப்படக் கலை, கார்ட்டூன்கள் மீது ஆர்வத்தை விதைத்தது.

கொஞ்சம் வளர்ந்த பிறகு, புதுமாதிரியான கார்ட்டூன்களை வரைவது தொடர்பான பணிகளில் டிஸ்னி ஈடுபட்டார். ஆனால் அவர் தொட்டது எல்லாமே தோல்வியானது. பல இடங்களில் டிஸ்னியின் திறமையைப் புரிந்துகொள்ளாமல், ‘உனக்குச் சரியாகப் படம் வரையத் தெரியல’ என்று வெளியே அனுப்பினார்கள். ஆனால், டிஸ்னி தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. அவர் முதலில் உருவாக்கியது ‘ஆஸ்வால்ட்’ என்ற முயல் கார்ட்டூன் கதாபாத்திரம். அப்போதைய சூழ்நிலையில் டிஸ்னி உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு அவரே உரிமை கொண்டாட முடியாமல் போனது.

எனவே வேறு ஒரு கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அந்தக் கதாபாத்திரம் உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பிடித்ததாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். இதற்காக பல வருடங்கள் ஏராளமான உருவங்களை வரைந்து பார்த்தார்.

வழக்கமாக டிஸ்னி அறையில் குறுக்கும் நெடுக்குமாக ஒரு எலி உற்சாகமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கும். சில சமயங்களில் அந்த எலி செய்யும் சிறிய சேட்டைகளை டிஸ்னி வேடிக்கை பார்ப்பார். தனது உணவில் அந்த எலிக்கும் கொஞ்சம் கொடுப்பார். தனக்குப் பிடித்த அந்த எலியைக் கார்ட்டூனாக வரைந்து அதற்கு மனிதக் குணாதிசயங்களை புகுத்தி் கற்பனை செய்து பார்த்தார் டிஸ்னி. இப்படித்தான், வால்ட் டிஸ்னி தனது நண்பர் ஐவர்க்ஸ் உடன் சேர்ந்து ‘மிக்கி மவுஸ்’ கதாபாத்திரத்தை உருவாக்கினார். அதற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘மார்டைமர் மவுஸ்’. குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்பெயர் மிக்கி மவுஸ் எனப் பின்னர் மாறியது.

மிக்கி மவுஸை மையமாக்கி எடுத்த இரண்டு அனிமேஷன் குறும்படங்களை யாரும் விநியோகிக்க முன்வரவில்லை. மூன்றாவதாக வெளியான ‘ஸ்டீம் போட் வில்லீ’யைக் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் ரசித்து வரவேற்றார்கள். இந்தப் படம் வெளியான 1928, நவம்பர் 18ஆம் நாளை மிக்கி மவுஸ் பிறந்த தினமாகக் கார்ட்டூன் ரசிகர்கள் உலகமெங்கும் கொண்டாடுகிறார்கள்.

அனிமேஷன் படங்கள் வண்ண மயமானதும், மஞ்சள் காலணி, சிவப்பு கால்சட்டை, வெள்ளை கையுறையுடன் மிக்கி மவுஸ் மேற்கொள்ளும் சேட்டைகளும் சாகசங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. ஆரம்ப அனிமேஷன் படங்களில் மிக்கி மவுஸுக்குக் குரல் கொடுத்தவர் வால்ட் டிஸ்னி!. மிக்கி மவுஸ் தோழியாக மின்னி மவுஸ், தோழனாக டொனால்ட் வாத்து, காமெடிக்குக் கூஃபி நாய், வில்லனாக பீட் என்ற பூனை எனப் பல்வேறு கதாபாத்திரங்கள் உருவாக்கி, குழந்தைகளை மகிழ்வித்தன. இவர்கள் அனைவரும் அமெரிக்க நாட்டில் கற்பனையாகச் சித்தரிக்கப்பட்ட கலிசோட்டா மாகாணம் மவுஸ் டவுனில் வசிப்பதாக, டிஸ்னி தனது அனிமேஷன் படங்களை உருவாக்கினார்.

மவுஸ் டவுன் மற்றும் அதில் வாழும் கதாபாத்திரங்களை நிஜம் என்றே குழந்தைகள் நம்பினர். குழந்தைகள் எதிர்பார்த்த விளையாட்டுகளும் கேளிக்கைகளும் நிரம்பிய கனவு ஊரை நிஜமாக்க டிஸ்னி விரும்பினார். அப்படித்தான் அமெரிக்காவில் ‘டிஸ்னி லேண்ட்’ என்ற பிரபலக் கேளிக்கைப் பூங்கா உருவானது. அதன் தொடர்ச்சியாக உலகின் பல்வேறு நகரங்களிலும் டிஸ்னி தீம் பார்க்குகள் வந்தன. அனிமேஷன் படங்கள் மட்டுமல்லாது காமிக்ஸ் புத்தகங்கள், வீடியோ கேம்ஸ் என மிக்கி மவுஸ், பல தலைமுறைகளாகக் குழந்தைகளை மகிழ்வித்துவருகிறது.

மிக்கி மவுஸைப் பார்க்கும்போதெல்லாம் குஷியாகும் குழந்தைகளுக்கு, அதனை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும், தோல்விகளைக் கண்டு ஒதுங்காத அவரது விடாமுயற்சியும் ஞாபகத்துக்கு வரவேண்டும் அல்லவா?
நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.

 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை நினைவு தினம் இன்று.


 வ.உ.சி
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
இவரது அரசியல் வாழ்க்கை,
உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 வ.உ.சி. 1892ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.


வ.உ.சி
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் கம்பெனியை தொடங்கி கப்பல் போக்குவரத்து ஏற்படுத்திய விளையாட்டு வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படுகிறார். ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

 வ.உ.சி. 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் காலமானார்.