வியாழன், 11 மே, 2023

மாநிலக்கல்விக் கொள்கை வகுக்கும் குழுவின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பேரா.லெ.ஜவகர்நேசன் பதவி விலகல்!

 மாநில கல்வி கொள்கை குழு ஒருங்கிணைப்பாளர் பதவி விலகல்



தமிழக அரசின் கல்வி கொள்கை வடிவமைப்பு குழுவின், உயர்மட்டக் குழு உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான ஜவஹர் நேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநில கல்வி கொள்கை வகுக்க, கடந்த ஆண்டு ஜூன் 1ல், ஆணை பிறப்பித்த அரசு, உயர்நிலை குழு அமைத்தது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, நான் மற்றும் 13 துணை குழுக்கள் செய்த ஆய்வு முடிவுகளின்படி, ஆரம்பகட்ட கொள்கை அம்சங்களை, 232 பக்கங்களில் அறிக்கையாக, உயர்நிலை குழுவில் சமர்ப்பித்தேன்.

இறுதியான கொள்கை வகுக்க, அடிப்படை வசதிகளும், கட்டமைப்பும் இல்லை

ஜனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமை, சில மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்கள், முறையற்ற தலையீடுகள் ஆகியவற்றால், உயர்நிலை கல்வி குழு இயங்க முடியாமல் தடுமாறுகிறது. இதனால், தொடர்ந்து பணி செய்ய முடியவில்லை.

மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை பின்பற்றி, மாநில கல்வி கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு செல்கிறது. பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட,தேசிய கொள்கையின் மறுவடிமாகவே உருவாகிறது.

நான் அரசாணைப்படியான இலக்குகளை அடையும் வகையில், பணிகளை தொடர்ந்தேன். ஆனாலும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளை கூறி, என்னை அச்சுறுத்தி, அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்று செயல்பட வேண்டும் என, அழுத்தம் தந்தார்.

இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும், பாதுகாப்பற்ற நிலையையும், குழு தலைவரிடம் பல முறை முறையிட்டேன்; அவர் துளியளவும் எதிர்வினை ஆற்றவில்லை.

அடுத்து நான் என்ன செய்வதென்ற வழிகாட்டுதலையும் தரவில்லை. சுயமாக முடிவெடுக்கும் உரிமையை காக்க, குழு தலைமை தவறி விட்டது.

இதுகுறித்து, முதல்வருக்கும் கடிதம் அளித்தேன்; எந்த பதிலும் இல்லை. சூழலை சரிசெய்ய இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சித்தேன். உண்மையும், ஜனநாயகமும் அற்ற குழுவின் சூழலும், அதிகார வர்க்க தலையீடுகளும், அச்சுறுத்தலும், என் செயல்களை முடக்கி விட்டன.

எனவே, இனியும் குழுவில் மேலும் நீடிப்பது பொருளற்றது. அதனால், கனத்த இதயத்துடன் உயர்மட்ட குழுவில் இருந்து விலகுகிறேன். தமிழக மக்களின் விருப்பப்படி, சமத்துவமான, மதச்சார்பற்ற கல்வி கொள்கை உருவாக்கும் என் போராட்டம் என்றும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.