வெள்ளி, 5 ஜூன், 2020

*☀சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு*

*☀சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு*

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:தஞ்சை ராமையா தாஸ் பிறந்த தினம்.*

ஜூன் 5,
வரலாற்றில் இன்று.


தஞ்சை ராமையா தாஸ் பிறந்த தினம் இன்று.

ராமையாதாஸ் (சூன் 5, 1914 - ஜனவரி 15, 1965) தமிழகக் கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவும் ஆவார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.

இராமையாதாஸ் தமிழ்நாடு தஞ்சாவூர், மானம்புச்சாவடியில் நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார். தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்ற இரண்டு மனைவியர். மூத்தவருக்கு விஜயராணி என்ற மகளும், மற்றவருக்கு இரவீந்திரன் என்ற மகனும் உள்ளனர்.

ஜெகந்நாத நாயுடு என்பவரின் "சுதர்சன கான சபா" என்ற நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார். அப்போது டி. ஆர். சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" (1947) என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுத இவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. இவரது முதல் திரைப்படப் பாடல் "வச்சேன்னா வச்சது தான் புள்ளி என்பதாகும்.

இதனை அடுத்து, திகம்பர சாமியார் (1950), சிங்காரி (1951) ஆகிய படங்களுக்கும் பாடல்கள் எழுதினார். இராமையாதாசின் மச்சரேகை என்ற நாடகம் 200 நாட்களைக் கடந்து மேடைகளில் நடிக்கப்பட்டு வந்தது. நடிகர் டி. ஆர். மகாலிங்கம் அதனை அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்க எண்ணி அவரை 1950இல் சென்னைக்கு அழைத்தார்.

இதனை அடுத்து நாகி ரெட்டியின் "பாதாள பைரவி" படத்துக்குத் திரைக்கதை, வசனம், பாடல் எழுதினார். இதனைத் தொடர்ந்து நகி ரெட்டியின் மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கி கல்யாணம், மனிதன் மாறவில்லை ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.

இவரது பகடை பன்னிரண்டு என்ற நாடகக் கதை எம்.ஜி.ஆர். நடித்த "குலேபகாவலி" என்ற திரைப்படமாகியது. இப்படத்தில் இவர் எழுதிய சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு, மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... என்ற பாடல்கள் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத்தந்தன. மொத்தம் 83 படங்களில் 532 பாடல்கள் வரை இவர் எழுதியிருக்கிறார். அத்துடன் 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

இராமையாதாஸ் 1962 ஆம் ஆண்டில் "திருக்குறள் இசை அமுதம்" என்ற நூலை எழுதினார். இந்த நூலுக்கு முனைவர் மு. வரதராசன், எம். எம். தண்டபாணி தேசிகர் ஆகியோர் அணிந்துரை தந்திருந்தனர். அப்போதைய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த எம்.ஜி.ஆர். நூலை வெளியிட்டார்.

புகழ்பெற்ற பாடல்கள் தொகு
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமன்றோ (மிஸ்ஸியம்மா)
சொக்கா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு (குலேபகாவலி)
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ... (குலேபகாவலி)
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
அழைக்காதே! நினைக்காதே! அவை தனிலே என்னை நீ ராஜா (மணாளனே மங்கையின் பாக்கியம்)

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே! தங்கச்சி கண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க (மதுரை வீரன்)

தஞ்சை இராமையாதாசின் கலைப்படைப்புகள் 2010 ஆம் ஆண்டு ஜூலை 16இல் தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு அவரது வாரிசுகளுக்கு ரூபாய் ஆறு இலட்சம் பணமும் வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:ஹோலோகிராபி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஹங்கேரி விஞ்ஞானி டென்னிஸ் கபார் பிறந்த தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

ஹோலோகிராபி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஹங்கேரி விஞ்ஞானி டென்னிஸ் கபார் (Dennis Gabor) பிறந்த தினம் இன்று.

 ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் (1900) பிறந்தவர். இளம் வயதில் இருந்தே அறிவியல் பரிசோதனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சகோதரருடன் சேர்ந்து வீட்டிலேயே சோதனைக் கூடத்தை அமைத்து, எக்ஸ் கதிர்கள், கதிரியக்கம் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

 இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் ஹங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.

 கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார்.

 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். யூதரான தான், ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933-ல் இங்கிலாந்து சென்றார்.

 இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936-ல் திருமணம் செய்துகொண்டு 1946-ல் பிரிட்டன் குடியுரிமை பெற்றார். முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947-ல் கண்டறிந்தார். ஆனால், 1960-ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது.

 ஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் மேட்ரிக்ஸ், அவதார் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது.

 ரகசிய தகவல் சேகரிப்புகளுக்கு சிறந்த பாதுகாப்பு முறையாகவும், ஓவியக் கலையில் மெருகூட்டல் சம்பந்தமான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கலப்படத்தை தடுக்க பெருங்காய டப்பா, பனியன் தொடங்கி பதிவுப் பத்திரங்கள் வரை ஹோலோகிராபிக் ஸ்டிக்கர்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

 தன் ஆராய்ச்சியை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தீவிரமாக்கி, தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

 ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை 1963-ல் வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஸ்டிக்கர்களும் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

 எண்ணற்ற விருதுகள், பல பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட ஹோலோகிராபியைக் கண்டுபிடித்த டென்னிஸ் கபார் 79ஆவது வயதில் (1979) காலமானார்.

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:காயிதே மில்லத் பிறந்த தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

காயிதே மில்லத் பிறந்த தினம் இன்று.

கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள் திருநெல்வேலி பகுதியில் உள்ள பேட்டை என்கிற ஊரில் அரசர்களுக்கு துணி விற்றுக்கொண்டு இருந்த மதத்தலைவரான மியாகான் ராவுத்தர் அவர்களின் மகனாக பிறந்தார். இளமைக் காலத்திலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் அவர் வளர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு கல்லூரி பட்டப்படிப்பு தேர்வை புறக்கணித்தார். பின்னர் முஸ்லீம் லீக் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.

விடுதலைக்கு பின்னர் டிசம்பர் மாதத்தில் 1948இல் கராச்சியில் முஸ்லீம் லீக் கட்சி பாகிஸ்தான் பகுதிக்கு ஒன்று என்றும்,இந்தியாவிற்கு இன்னொன்று என்றும் உடைந்தது. அங்கே பாகிஸ்தான் பகுதியின் தலைவராக திகழ்ந்த லியாகத் அலிகான் ,"உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும்கேளுங்கள் காயிதே மில்லத் அவர்களே ! எப்பொழுதும் உதவக் காத்திருக்கிறோம்" என்ற பொழுது "எங்களுக்கான தேவைகளை, சிக்கல்களை நாங்களே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு என்று ஒரு தேசமிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு செய்கிற உதவி ஏதேனும் இருக்குமானால் அது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள்,சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை பாதுகாப்போடு பார்த்துக்கொள்வது தான் !: என்று கம்பீரமாக சொல்லிவிட்டு நடந்தார்.

இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டார். அப்பொழுது எது தேசிய மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்கிற விவாதம் எழுந்தது. பழமையான மொழியே தேசிய மொழியாக வேண்டும் என்கிற வாதம் வைக்கப்பட்ட பொழுது அமைதியாக எழுந்த காயிதே மில்லத் அவர்கள் இப்படி பேசினார் :
" ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். . இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். . இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன். அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய கம்பீரமான தமிழினத்தின் தலைவர்...

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:உலக சுற்றுச்சூழல் தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

 உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று.

'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண்''தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம்,

பழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம்.

இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை.

மலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன.

கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. மனித இனம், தம் சுற்றம் குற்றமற்று வாழ, சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக
ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

அரசியல் கவனத்தையும் , செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது.

உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும், உலகச் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும், சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.

மாறிவரும் இயற்கைச் சமநிலைஇயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், காட்டுயிரிகள், காற்று மண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும்.

மனித இனம், விலங்கினம், பறவையினம், தாவர இனம், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்த சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது.

இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங் கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன.

நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசடைந்து வருகிறது.

சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.

பள்ளிகளின் பங்கு இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான்' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ்.

குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள்தான் மனிதராக மாறும்போது அவை மரமாக வளர்ந்து நிற்கும்.

இதைப் பள்ளிகள் செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக, மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல்,

அரசு விழாக்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு அரசு விழாக்களிலும் ஒரு மரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல்,

தேசத்தலைவர்களைப் போற்றும் வகையில் அவர்களது பெயரிலேயே மரக்கன்று நடச்செய்தல், உலக சுற்றுச் சூழல் தினம், உலக வனநாள் போன்ற தினங்களைப் பள்ளிகளில் கொண்டாடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல்,

இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல், சிறப்பாக மரம் வளர்க்கும் மாணவர் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக
புத்தகங்கள், பூச்செடிகள் பரிசளித்துப் பாராட்டுதல்,

தங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை உருவாக்குதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி
மாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பள்ளிகள் செய்ய வேண்டும்.

தனிமனிதனின் பங்கு 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன்.

நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி.

இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல, புல் பூண்டுகளும் ஓர் அங்கம்தான் என்பதை உணர வேண்டும்.

பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும்.

கடைகளுக்குத் துணிப்பைகளைத் துாக்கிச் செல்ல வேண்டும். துணிப்பைகளைப் பயன்படுத்தினால் நமக்கும், எதிர்காலச்
சந்ததியினருக்கும் துக்கம் இல்லை.
ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.பதினைந்து லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப் பட்டுள்ளது.

ஒவ்வொரு தனி மனிதனும் பல லட்சங்களுக்கு அதிபதியாவான் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரமாக்கும் போது.

எனவே, சுற்றுச் சூழலின் முக்கியப் பங்கினை தனிமனிதன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சூழல் மேம்பட 'துாய்மை பாரதம்' என்ற திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி, அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை மேம்படச் செய்துவருகிறது.

பாலிதீன் பைகளுக்கு மாற்றாக இனிப்பகம் மற்றும் கடைகளில் பனையோலைக் கொட்டான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம்.

இதனால் பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மேம்படும். காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம்.

மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வீடுகளிலும், தெருக்களிலும் தனித்தனியாகக் குப்பைகளை இடச் செய்யலாம்.

நெகிழித் தேனீர்க் கோப்பைகளுக்குப் பதிலாக மண்பாண்டக் குவளைகளைப் பயன்படுத்தச் செய்யலாம்.

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்திப் பரிசுகள் வழங்கலாம்.

பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம்.

மரங்கள் நிறையும் போது, நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.