செவ்வாய், 17 டிசம்பர், 2019




🔥தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியக்கிளையின் சார்பில்  பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 16.12.2019 பிற்பகல் 5.15 மணியளவில் ஆசிரியர் கோரிக்கைகள் சார்பாக சந்தித்து பேசப்பட்டது. இச்சந்திப்பில் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள்,மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  திரு.ப.சதீஷ்,மாவட்ட தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.தண்டபாணி,மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார்,ஒன்றியத் தலைவர் திரு.நா.ரங்கசாமி ,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,மகளிர் அணி அமைப்பாளர் திருமதி வீ.மாலதி,உறுப்பினர்கள் திரு.காமராஜ்,சூசை அந்தோணி உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இச்சந்திப்பில்  கீழ்க்கண்ட பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் திரு.ச.காமராஜ் அவர்களின்  ஊக்க ஊதிய உயர்வு கோரும் விண்ணப்பத்தின் மீது விரைந்து ஆணை வழங்கிட வேண்டும்.மேலும் காமராஜ் அவர்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் ஆசிரியர்பயிற்சி பட்டயச் சான்று ஆகிய கல்வித்தகுதிக்கு 6 மாதங்களுக்கு முன் உண்மைத்தன்மை கோரி விண்ணப்பித்தும் சான்று பெறுவதற்கு  காலதாமதத்தை ஏற்படுத்துவதை விடுத்து உண்மைத்தன்மை  சான்று பெற்றுத்தர வேண்டும்.

தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களின்மீது உரிய ஆணையினை விரைந்து வழங்கிட வேண்டும்.

தேர்வுநிலை/சிறப்புநிலை கோரி விண்ணப்பித்த  ஆசிரியர்களுக்கு பணிப்பதிவேடு மாவட்டக் கல்வி அலுவலகம் சென்றுள்ளதாகக் கூறி ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு விண்ணப்பங்களை திருப்பி அளிப்பதை விடுத்து  ஒப்படைப்பு தேதி முதல்  ஆணை வழங்கிட வேண்டும்.

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்துப் பேசப்பட்டது.இதில் நிறைவான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

க.சேகர்.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று.

தாம்சன் (சூன் 26 1824 - டிசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த இவர்  இயற்பியல் அறிஞர்  ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 மின்காந்தவியல், வெப்பவியல் என பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை, இவர் நினைவாக கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியியல் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler)ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம்  17-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக் நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

இங்கிலாந்தின் வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளருமான சர் ஹம்ப்ரி டேவி சர் ஹம்பிரி டேவி (Sir Humphry Davy)   பிறந்த தினம் இன்று.

இவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வேதியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார். இவர் பல்வேறு தனிமங்களைக் குறிப்பாக குளோரின்,சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் போன்றவற்றைக் கண்டுபிடித்தவராவார்.

டேவி மிகச்சிறந்த மின்னியலாளரும் வேதியியலாளரும் ஆவார்.1815 இல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். சுரங்கத்தில் வெளிவரும் மீத்தேன் வாயுவினால் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து தொழிலாளர்களைக் காக்க இவரது கண்டுபிடிப்பான காப்பு விளக்கு உதவியது.

இங்கிலாந்தின் பென்சான்ஸ் நகரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் (1778) தந்தை ஒரு மரச் சிற்பி. 16 வயதில் அப்பாவை இழந்தார். ஜேம்ஸ் வாட்டின் மகன் கிரிகோரி வாட், இவர்கள் வீட்டில் விருந்தினராக தங்கியிருந்தார்.

இளம் டேவிக்கு மிகப் பெரிய உறு துணையாக இருந்து வழிகாட்டினார். அறிவியலில் நாட்டம் கொண்டிருந்த இவர் டேவிஸ் கில்பர்ட் என்ற மருத்துவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்.

இவரது அறிவுத் திறனாலும் பேச்சாற்றலாலும் ராயல் இன்ஸ்ட்டி டியூட்டில் வேலை கிடைத்தது. அறுவை சிகிச்சையின்போது வலியினால் நோயாளிகள் அவதியுறுவதைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கினார். நைட்ரஸ் ஆக்சைடின் மயக்க விளைவைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். துணிச்சலுடன் அந்த வாயுவை தானே நுகர்ந்து பார்த்தார். மயக்கமடைந்தார்.

தொடர்ந்து பரிசோதித்து இதன் தன்மைகளை விளக்கிக் காட்டினார். லாஃபிங் கேஸ் எனப்படும் இந்த வாயுவைக் கண்டறிந்த டேவியின் புகழ் உலகெங்கும் பரவியது.

1756இல் பிரிஸ்டலில் ஃபெனுமாடிக் அமைப்பில் இணைந்த டேவி, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். ஒரே வருடத்துக்குள் நைட்ரஸ் ஆக்சைடு குறித்த புகழ்பெற்ற கட்டுரைகளை வெளியிட்டார். இந்த இரண்டு ஆய்வுக் கட்டுரைகளும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. 1801இல் ராயல் இன்ட்டிட்யூட்டில் உரையாற்றினார்.

தோல் பதனிடல், வோல்டா மின்கலம் ஆகியவை குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சொற்பொழிவுகளை ஆற்றி வந்தார். வேதியியல் கூட்டுப் பொருள்களை மின்னாற் பகுப்பு மூலம் எவ்வாறு பிரிப்பது என்பதை இவர் விளக்கினார். சோடியம், பொட்டாசியம் ஆகியவற்றைப் பிரித்துக் காட்டினார்.

இந்த அடிப்படையில்,ஆல்கலைஸ்கள் உலோக ஆக்சைடுகளே என்பதை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக் கூறினார். வாயுக்கள் குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அவை தொடர்பான ஏராளமான ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தன. குளோரின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பேரியம், போரான், அயோடின் ஆகிய பல்வேறு தனிமங்களையும் கண்டறிந்தார்.

ரசாயன ஆராய்ச்சிக்கு மின்சாரம் சிறந்த பயன்பாடாக உள்ளது என்பதை நிரூபித்துக் காட்டியதால், ‘மின்சார ரசாயனத்தின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ஐயோடின் பற்றி ஆய்வு செய்தார். வைரம் ஒரு கரிமப் படிவம் என்பதை நிரூபித்தார். 1815-ல் சுரங்கத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்தார். இது ‘டேவிஸ் லாம்ப்’ என்று குறிப்பிடப்படுகிறது.

சிதைந்த வேதியல் கூட்டுப் பொருட்களின் மீது எலக்ட்ராலிசிஸ் முறையில் செயல்பட்டு அதிலிருந்து பொட்டாசியம், சோடியம், பேரியம், கால்சியம், மக்னீஷியம் ஆகிய மூலப் பொருட்களைப் பிரித்தெடுத்தார். 1812இல் சர் பட்டம் வழங்கப்பட்டது. தனது ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

எலிமன்ட்ஸ் ஆஃப் கெமிக்கல் ஃபிலாசபி, எலிமன்ட்ஸ் ஆஃப் அக்ரி கல்சுரல் கெமிஸ்ட்ரி மற்றும் கான்சொலேஷன்ஸ் இன் டிராவல் உள்ளிட்ட இவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். ராயல் சொசைட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், ஏழு வருடங்கள் தொடர்ந்து இந்தப் பதவியில் பணியாற்றினார். பிறந்த நாட்டுக்கும் மனித குலத்துக்கும் மிகச் சிறந்த பங்களிப்புகளை வழங்கிய சர் ஹப்ம்ரி டேவி 1929ஆம் ஆண்டு, 50ஆவது வயதில் காலமானார்.
டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

ஓய்வூதியர் தினம் இன்று.

இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் தினம் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982 ஆம் நாளில் இந்திய உச்ச நீதிமன்றம் ஓய்வூதியம்
குறித்து வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை நினைவு கூறும் வகையில் இந்த
நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால்
இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.