ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் 22.01.19 முதல் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் மிகுந்த எழுச்சியுடன், நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் 100 சதவிகிதம் மூடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்திட அரசு முயற்சி செய்வது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவாது. எனவே, உடனடியாக போராட்டக்குழு தலைவர்களை, முதல்வர் அழைத்துப் பேசி விரைந்து தீர்வு காண்பது ஒன்றே, ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பி அரசு செய்முறைத் தேர்வுகளை நடத்திட உதவியாக அமையும்.
இரவு, மாவட்ட, மாநில போராட்டக்குழு தலைவர்களையும், ஏராளமான முன்னணி ஆசிரியர்களையும், கைது செய்து சிறையில் அடைத்திருப்பது, போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளது. அதுவும், பள்ளிகளில் குடியரசு தின விழாவை மாணவர்களும், ஆசிரியர்களும் கொண்டாடுவதை சீர்குலைக்கும் அளவுக்கு விழாவின் முதல் நாள் இரவு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டிப்பதோடு, அரசு உடனடியாக ஜேக்டோ-ஜியோ போராட்டக் குழு தலைவர்களை விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
(இரா.முத்தரசன்)
மாநிலச் செயலாளர்.