news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 ஜூன், 2020

*🌸இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது:* *மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு* *50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!*

இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை ஆகாது: மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து!
**************************

இடஒதுக்கீடு
உரிமை என்பது அடிப்படை உரிமை ஆகாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 மருத்துவப்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு
50% இடஒதுக்கீடு கோரி திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு
விளக்கமளித்துள்ளது.

 பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு கோரும் மனுவை விசாரிக்க மாட்டோம் என்றும்   உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும்,
இதுபோன்ற மனுக்களை ஊக்குவிக்க மாட்டோம் என கருத்து தெரிவித்துள்ளது.

 இதுமட்டுமல்லாது, மருத்துவப் படிப்பில்
50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

*😷முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ₹100 அபராதம்.-கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை.*

முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்!

சமூகவிலகலைக் கடைபிடிக்காத நிறுவனங்கள்,
கடைகளுக்கு  பூட்டு! சீல் !

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் எச்சரிக்கை!

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

 கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். அதே போல் இருசக்கர வாகனங்களில் வரும் போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொவருக்கு பரவாமல் தடுக்க முடியும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதனை மீறுவோருக்கு அபராதமாக ரூ.100 விதிப்பதோடு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939 மற்றும் தொற்று நோய்ச் சட்டம் 1897 ன் கீழ் சட்டப்படியான நடவடிக்கையும் தொடரப்படும். மேலும் அனைத்து ஷோரும்கள் மற்றும் அனைத்து கடைகளுக்கும் மக்கள் செல்லும் போது ஒரே நேரத்தில் கடையில் ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது. பொது இடங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும். அரசு ஊடரங்கை அமல்படுத்தியபோதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோய் பரவலை தடுக்க இயலாது.

 எனவே, பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கையை சுத்தப்படுத்தவும் , வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும் , சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து , அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் , இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் .
எனவே , பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.அன்பழகன்.இஆப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசின் தொகுப்பில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்க!-முதலமைச்சர்கள்-முக்கிய கட்சித் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்.

மத்திய அரசின் தொகுப்பில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்க!
-------------------------------------------------------------------------------
முதலமைச்சர்கள்-முக்கிய கட்சித் தலைவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்
-------------------------------------------------------------------------------

சென்னை, ஜூன்11, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டவர் புறக்கணிக்கப்படுவது குறித்தும், இது தொடர்பாக  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் முதலமைச்சர்களுக்கும், முக்கியத் தலைவர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். சிலரிடமிருந்து ஒப்புதல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடித விவரம் வருமாறு:

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் (PG-எம்.டி, எம்.எஸ் மற்றும் எம்.டி.எஸ்) 50% இடங்களையும், மருத்துவ இளநிலை படிப்புகளில் (UG - எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ்) 15% இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கின்றன.
இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம்  (DGHS) மற்றும் மருத்துவ கலந்தாய்வு மய்யம் (MCC) மேற்கொள்கிறது.
இந்தக் கல்வியாண்டில், நீட்- PG மருத்துவ மேற்படிப்பு மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பில்  மாநிலங்கள் முறையே 7,981 இடங்களையும், 274 இடங்களையும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைத்துள்ளன.

இந்த கல்வி ஆண்டில் (2020-2021) மாநிலங்கள் அளித்த எட்டாயிரத்திற்கும் கூடுதலான அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு சதவீதம் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

2013-ஆம் ஆண்டில் இருந்து தருவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அகில இந்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்த இடங்கள் (பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு), 72,500 இடங்களாகும். இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்பட்ட இட ஒதுக்கீடு சதவீதம் ‘பூஜ்ஜியமே.’
இத்தகைய சமூக அநீதியைச் சுட்டிக் காட்டி, கடந்த சில ஆண்டுகளாக, திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கட்சிகள், நாடாளு மன்ற உறுப்பினர்கள்,  பிற சமூக அமைப்புகள், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் கடிதம் எழுதியும், குரல் எழுப்பியும் எந்த பதிலும், தீர்வும் கிடைக்கவில்லை.
இந்த அநீதியை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2020  மே 9 ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டார், மேலும் இந்த சமூக அநீதிக்கு எதிராகப்  போராட அனைவருக்கும் ஒரு தெளிவான அழைப்பும் விடுத்தார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் - திமுக, மதிமுக, சி.பி.அய்., சி.பி.அய். (எம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, பா.ம.க.  என அனைத்துக் கட்சிகளும் சமூக நீதியைக் கோரி அறிக்கைகளை வெளியிட்டனர். மேலும், இந்த அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை (திமுக, மதிமுக, காங்கிரஸ், சி.பி.அய்.,    சி.பி.அய்.(எம்), பா.ம.க.) தற்போது உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளன. திராவிடர் கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சென்னையில் மே 30 ஆம் தேதி திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் மக்களின் ஆதரவை உணர்ந்த தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
சமூகநீதி விஷயத்தில் தமிழகம் எப்போதும் முன்னணியில் உள்ளது. தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகப் போராடினார், இதன் விளைவாக 1951 ஆம் ஆண்டில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் ஏற்பட்டது, இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய நாடு முழுமைக்கும்  15 (4)வது பிரிவின் கீழ் கல்வியில் இடஒதுக்கீடுக்கு வழி வகுத்தது. தந்தை பெரியாருக்குப் பிறகு, அவரது கொள்கையைப் பின்பற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம், மண்டல் குழுப் பரிந்துரைகளை அமல்படுத்திடக் கோரி வடநாடு உட்பட 42 மாநாடுகள், 16 போராட்டங்களை நடத்தி, சிறைத்தண்டனை உள்ளிட்ட தியா கங்களைச் செய்துள்ளது. 1979 ஆம் ஆண் டில் எம்.ஜி.ஆர். அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்க்கான இட ஒதுக்கீட்டிற்கு ரூ.9000 பொருளாதார வரையறை தடுத்து நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதில், திராவிடர் கழகம் போராட்டத்தை நடத்தியதோடு நின்றுவிடாமல், அரசமைப் புச் சட்டம் 31சி பிரிவின் அடிப்படையில் ஒரு வரைவு  மசோதாவை தமிழ் நாடு அரசுக்கு அளித்து, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்திலும், பின்னர் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட, நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ள  முழுமூச்சாய் செயலாற்றியது.

இவ்வாறு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்காக, திராவிடர் கழகம், சமூக இயக்கமாக, நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு சமூக நீதியை வழங்குவதைப் பாதுகாப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும் அதன் பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
சமூகநீதி குறித்த விழிப்புணர்வைத் தொடர்ந்து தமிழ் மக்களிடையே உருவாக்குவதிலும், அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதிலும், தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் அவரது மறைவுக்குப் பின்னரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் தொடர்ந்து பங்காற்றி வருவதால், தமிழகத்தில் சமூக நீதி காப்பாற்றப்பட்டு வருகிறது.

இப்போது மருத்துவப் படிப்புகளுக்கான  சேர்க்கையில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட இந்தப் பிரச்சினையில், திராவிடர் கழகம் நாடு முழுவதும் இந்த விஷயத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக, இந்தியா முழுவதும் உள்ள பாஜக தவிர்த்த அரசுகளின் பதினோரு முதல்வர்களுக்கும், அதே போன்று, வட மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் என பதிமூன்று தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தலைவர்களில் சிலர் எங்கள் முயற்சிகளை ஒப்புக் கொண்டு பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். திராவிடர் கழகம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சங்கம், பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

நாடெங்கிலும் உள்ள அனைத்து சமூக நீதி அமைப்புகளையும், ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், சமூக நீதிக்கான போரில் நாம் வெற்றி பெறுவது உறுதி, அதை நோக்கி, நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம்.

-திராவிடர் கழகம்
-------------------------------------------------------------------------------
கடிதம் அனுப்பப்பட்ட முதல்வர்கள்:
வீ. நாராயணசாமி (புதுச்சேரி) கே.சந்திர சேகர ராவ் (தெலங்கானா), ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), பினராயி விஜயன் (கேரளம்), அசோக் கேலாட் (ராஜஸ் தான்), உத்தவ் தாக்கரே (மகாராட்டிரா), மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்), நிதிஷ் குமார் (பீகார்), நவீன் பட்நாயக் (ஒடிசா), கேப்டன் அம்ரிந்தர் சிங் (பஞ்சாப்), பூபேந்தர் பாகல் (சட்டீஸ்கர்)

தலைவர்கள்:
சோனியா காந்தி (காங்கிரஸ்), சரத் பவார் (தேசிய காங்கிரஸ்), ராம் விலாஸ் பஸ்வான் (எல்.ஜே.பி.), செல்வி மாயாவதி  (பி.எஸ்.பி.), என். சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்), எச்.டி. தேவகவுடா (மதசார்பற்ற ஜனதா தளம்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), தேசஸ்வி யாதவ் (ஆர்.ஜே.டி.) உபேந்திர குஷ்வாகா (ஆர்.எல்.எஸ்.பி.), அனுபிரியா படேல் (அப்னா தள்), சித்தாராமையா (காங்கிரஸ்), பி.கே.ஹரிபிரசாத், எம்.பி, ராஜீந்தர் யாதவ் (தேசிய பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் சங்கம்).

*☀இந்தியாவில் கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் உயர்வு! மத்திய அரசு தகவல்!*

இந்தியாவில் கரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் உயர்வு! மத்திய அரசு தகவல்!
**********************
 இந்தியாவில் நாள்தோறும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளோடு ஒப்பிடும் போது, குணமடைவோர் விகிதம் உயர்ந்து வருவதாக மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று மத்திய நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகக் கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, இந்தியாவில் இதுவரை கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை. பொது முடக்கம் காரணமாக கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  பொது முடக்கம் அமல்படுத்தப்படாவிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாக இருந்திருக்கும்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 49.21% ஆக உள்ளது. கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே சமயம், நாட்டில் கரோனா பாதித்து உயிரிழப்பு விகிதம் 2.8 சதவீதமாக உள்ளது.

தொடர்ந்து கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, கரோனா நோய் பரவலைக் கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 4 ஜூன், 2020

*📘தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளை கோரிக்கை* *தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ் செய்திகள் நாள்:04.06.2020*

*📘தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கிட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி* *ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளை கோரிக்கை*
*தினமணி மற்றும் தினத்தந்தி நாளிதழ் செய்திகள்  நாள்:04.06.2020*