சனி, 11 மே, 2019
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடம் ~ தமிழக அரசுக்கு , பள்ளி கல்வித்துறை பரிந்துரை…
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் மொழிப்பாடம் ஒன்று குறையும் பட்சத்தில் தேர்வுகளின் எண்ணிக்கை 5 ஆக குறையும். இவ்வாறு குறையும்போது 600 ஆக இருந்த மொத்த மதிப்பெண்கள் 500 ஆக குறையும். இந்த முடிவுகளை நன்கு பரிசீலித்த பள்ளி கல்வித்துறை இதற்கான பரிந்துரையை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசு அனுமதி கொடுத்தால் இந்த கல்வி ஆண்டு முதலே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)