Other லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Other லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 ஜூன், 2020

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

Retired judge Justice K Chandru made this statement with regard to the case of the father-son duo (Jayaraj and Emmanuel Benicks) who died in police custody in Thoothukudi

செவ்வாய், 17 மார்ச், 2020

தாய்மொழிப்போராளி முஜிபூர்ரஹ்மான் இந்து தமிழ் திசை நாளிதழ் தலையங்கம்

மொழிக்கான போராட்டங்கள் தொடர்கின்றது!
மதம் கடந்து,
எல்லைக் கடத்து,
இனம் கடந்து மொழிக்கான போராட்டங்கள் வெல்லட்டும்!

தாய்மொழிப்போராளி!
முஜிபூர்ரஹ்மான்
நன்றி:இந்து தமிழ் திசை/17.03.2020.
---------------------------------
“எனது அன்பான சகோதரர்களே, கனத்த இதயத்துடன் இன்று உங்கள் முன் வந்துள்ளேன்.” 1971 மார்ச் 7 அன்று வங்கத் தலைநகர் டாக்காவில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஆற்றிய உரையின் ஒவ்வொரு வரியிலும் தாங்கொணா வலி நிறைந்திருக்கிறது. 20 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தினார் முஜிபுர், “மன வருத்தத்துடன் நமது 23 ஆண்டு காலச் சரித்திரத்தைத் திரும்பிப் பார்க்கிறபோது வங்க மக்கள் ரத்தம் சிந்தினார்கள் என்பதன்றி வேறு எதுவும் தெரியவில்லை. அப்பாவிகளின் ரத்தம், கண்ணீர். இதுவே நமது வரலாறு!”

டாக்கா, சிட்டகாங், குல்னா, ரங்க்பூர், ராஜ்சஹி தெருக்களில் ரத்த ஆறு ஓடியது. கொடூரத் தாக்குதலில் அப்பாவிகள் கொத்துக் கொத்தாக மாய்ந்துபோயினர். “அமைதியான முறையில் ஹர்த்தால் நடத்த அழைப்புவிடுத்தேன். மக்களும் தெருவுக்கு வந்தனர். பதிலுக்கு என்ன கிடைத்தது? கையில் ஆயுதம் இல்லாத மக்கள் மீது ஆயுதங்களைத் திருப்பினார்கள். இவை எங்கள் மக்களின் பணத்தில் வெளி எதிரியிடமிருந்து எங்களைக் காப்பதற்காக வாங்கப்பட்டவை. ஆனால், இன்று எம் சொந்த மக்களையே சுட்டுத் தள்ளுகிறது” என்றார். விடுதலைக்காக, உரிமைகளுக்காகப் பொறுப்பான தலைவனின் அறைகூவலாக ஒலித்தது முஜிபுரின் குரல். வங்க விடுதலைப் போர் தொடங்கியது.

1947-ல் நமக்கு ஒரு நாள் முன்னதாக சுதந்திரம் பெற்றபோதும் 1970 டிசம்பரில்தான் பாகிஸ்தானில் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடந்தது. மொத்தம் 300 இடங்கள். இதில், கிழக்கு பாகிஸ்தான் பகுதியைச் சேர்ந்த அவாமி லீக் கட்சி, 160 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றது. அதன் தலைவர் முஜிபுர் ரஹ்மான். அவர்தான் பிரதமராகப் பொறுப் பேற்றிருக்க வேண்டும். ஆனால், மேற்கு பாகிஸ்தானியத் தலைவர்களும் மக்களும் இதற்கு உடன்படவில்லை. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவிக்கு வரத் துடித்தார் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜுல்பிகர் அலி புட்டோ. கிழக்குப் பகுதியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. வங்க மக்கள் போராட்டத்தில் குதித்தனர். உலகில் முதன்முறையாக, மொழி அடிப்படையில் ஒரு தேசம் உருவாகும் களம் ஏற்பட்டது.

ஏனெனில், அது ஒரு வரலாற்றுத் தருணம். மதங்களால் மட்டுமே நாடுகளை ஒருங்கிணைத்துவிட முடிவதில்லை. மொழி அடையாளம் அதனிலும் தீவிரமானது. பாகிஸ்தான் பிறந்தபோதே வங்க மொழியின் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளி உருதுவை ஒற்றை ஆட்சிமொழியாக ஏற்றது.
கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட இன்றைய வங்கதேசம் வங்காளிகளால் நிறைந்தது. இது ஆறாத ரணமாக அவர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. மேலும், சுதந்திரத்துக்குப் பின்னர் 20 ஆண்டுகளாகவும் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கமே பாகிஸ்தான் அரசியலில் கோலோச்சியது; குறிப்பாக, சிந்து மாகாணத்தினர். இந்தக் கோபத்தின் உச்சமாகவே மக்களின் போராட்டம் வெடித்தது. இந்தக் கோபத்தின் உச்சமாகவே முஜிபுர் ரஹ்மானுக்கு உருவாக்கப்பட்ட நெருக்கடி அமைந்தது. விளைவாக, வங்கதேச விடுதலைப் போராட்டம் வெடித்தது.வங்க மக்களின் கோபம் ‘முக்தி பாகினி இயக்கம்’ வழியாக அவர்களுடைய விடுதலையை நோக்கி செலுத்தியது.

வங்கப் போராட்டத்தின் நெருக்கடியானது இந்தியாவையும் வலுக்கட்டாயமாக அதனுள்ளே இழுத்தது. வங்கதேசத்துக்கு ஆதரவாகக் களம் இறங்கியது இந்தியா. இந்திரா காந்தி, முக்தி பாகினி, முஜிபுர் ரஹ்மான் கூட்டணி பாகிஸ்தான் படைகளை துவம்சம் செய்தது. சுதந்திரமான இறையாண்மை கொண்ட தனி நாடாக உருவானது வங்கதேசம். பிரதமராகப் பொறுப்பேற்றார் முஜிபுர்.

மதப் பிரிவினை அரசியலை ஏற்க மறுத்தார் முஜிபுர். தேசியம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோஷலிஸம் ஆகிய கொள்கைகளை முன்வைத்தார். இராக்கில் சதாம் ஹுசைன், பாகிஸ்தானில் ஜெனரல் முஷரஃப், சவுதியின் சல்மான் ஆகியோருக்கு முன்பாக மத அடிப்படைவாதத்தை நிராகரித்து, முற்போக்கு அதிபராகச் செயல்பட்டவர் முஜிபுர். ‘தீஸ்டா’ நதிநீர்ப் பங்கீடு, வங்கதேச அகதிகள் ஊடுருவல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தபோதும் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிரந்தரமாக ஒரு சகோதர உணர்வு நிலவுவதற்கு முக்கியக் காரணம் அவர்தான்.

வங்க மொழியின் உரிமைக்காகப் போராட்டம் நடத்திய பிப்ரவரி 21-ம் தேதியை ஆண்டுதோறும் வங்கதேசத்தில் நினைவுகூர்கிறார்கள். வங்கதேசம் முன்னெடுத்ததாலேயே அன்றைய தினம் சர்வதேசத் தாய்மொழிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. எல்லா மொழிகளுக்குமான தனித்துவம், மொழிகளுக்கு இடையேயான சமத்துவம், அந்தந்த மொழிகளுக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை முஜிபுரின் வழியாக உலகுக்கு உணர்த்துகிறது.

ஞாயிறு, 8 மார்ச், 2020

பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி - மகளிர் தின சிறப்பு கட்டுரை

பெண்கள் நலச் சட்டங்களுக்காகப் பெரும் பணியாற்றிய முத்துலட்சுமி ரெட்டி



ஆசியாவின் முதல் பெண் மருத்துவர், சென்னையில் இன்றைக்கும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கியவர், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தவர் என்பன போன்ற பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

பெண்கள் பள்ளிப் படிப்பை முடிக்க முடியுமா எனக் கேட்கும் அளவுக்கான காலம் அது. அப்போதே புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டமானிடம் சிறப்பு அனுமதி பெற்றுப் படித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியையும் முடித்தவர் அவர்.


புதுக்கோட்டையிலுள்ள இப்போதைய மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, அப்போது சமஸ்தானத்தின் உயர்கல்வி நிலையமாக இருந்தது. அதன் இயக்குநர் (முதல்வர் பதவியின் அப்போதைய பெயர்) நாராயணசாமி அய்யர். இவர் சந்திரம்மாள் என்ற இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

1886 ஜூலை 30ஆம் நாள், நாராயணசாமி- சந்திரம்மாளின் மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. தொடர்ந்து நல்லமுத்து, சுந்தரம்மாள் என இரு தங்கைகள். கடைசியாகத் தம்பி ராமையா.

பிற்காலத்தில் நல்லமுத்து, சென்னையிலுள்ள ராணிமேரி கல்லூரியின் முதல் பெண் முதல்வர். சுந்தரம்மாள் தமிழ் இலக்கியம், இசை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவரானார். ராமையா, சட்டம் பயின்று வழக்குரைஞரானார்.

உதவித்தொகை வழங்கப்பட்டாலும் பெண்கள் பள்ளிக்கு வராத காலம் அது. அவ்வப்போது அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டபோதும் 13 வயது வரை கீழ்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார் முத்துலட்சுமி.

அதன்பிறகு அவரது தந்தை நாராயணசாமி, மாதம் ரூ. 2 ஊதியம் கொடுத்து வீட்டுக்கே ஓர் ஆசிரியரை வரவழைத்து மகளுக்குக் கல்வி சொல்லித் தர வைத்தார். 1902இல் மெட்ரிகுலேசன் தேர்வில் முதல் மாணவியாக வந்தார் முத்துலட்சுமி.

தொடர்ந்து, கல்லூரிப் படிப்பு. மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் சிறப்பு அனுமதி பெற்றுத்தான் கல்லூரியில் சேர முடிந்தது.

மாணவர்கள் பகுதி திரைச்சீலையால் பிரிக்கப்பட்டிருக்குமாம். இந்தப் பகுதியில் முத்துலட்சுமி மட்டும்தான்- ஒரேயொரு மாணவி. கல்லூரிக் கல்வியின்போது, பார்வைக் குறைபாடு ஏற்பட்டுக் கண்ணாடி அணிந்து கொண்டே படித்து முடித்தார். இன்டர்மீடியேட் தேர்விலும் முதல் மாணவி.

தொடர்ந்து 1907இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் 'எம்பிசிஎம்' மருத்துவக் கல்வியில் சேர்ந்தார். படிப்புச் செலவுக்கும் புதுக்கோட்டை மன்னர்தான் உதவியிருக்கிறார்.


1912 இல் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, எழும்பூர் அரசு மருத்துவமனையிலும், டாக்டர் ஜிப்மர் நடத்திய மருத்துவமனையிலும் என சில காலம் சென்னையில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கே வந்து மருத்துவச் சேவையாற்றினார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னைக்குத் திரும்பி, சொந்தமாக மருத்துவமனையை உருவாக்கினார்.

அரசியல் அறிஞர் நஞ்சுண்டராவ் குடும்பத்தினருடன் அம்மையாருக்குப் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு முறை நஞ்சுண்டராவின் வீட்டில்தான் மகாகவி பாரதியாரையும் சந்திக்கிறார் மருத்துவ மாணவியான முத்துலட்சுமி. இவரது திறமைகளைக் கண்ட பாரதியார், தனது 'இந்தியா' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதக் கேட்டுள்ளார்.

சென்னையில் சொந்த மருத்துவமனையுடன் ஐரோப்பாவைச் சேர்ந்த லேடி ஒயிட்லெர்டு என்பவரின் சமூக சேவை சங்கத்திலும், பிராமண விதவைப் பெண்களுக்கான சங்கத்திலும், ராணி மேரி கல்லூரி உள்ளிட்டவற்றின் தாழ்த்தப்பட்ட மாணவர் விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளில் மருத்துவச் சேவையை வழங்கினார் முத்துலட்சுமி.

இந்தக் காலகட்டத்தில்தான் சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகன்- விசாகப்பட்டினத்தில் டாக்டராகப் பணியாற்றிய டி. சுந்தரரெட்டி, முத்துலட்சுமியின் பணிகளை அறிந்து அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பி, முத்துலட்சுமியின் தந்தை நாராயணசாமிக்குக் கடிதம் எழுதினார். சுந்தரரெட்டி அந்தக் காலத்திலேயே லண்டன் சென்று படித்து 'எப்ஆர்சிஎஸ்' முடித்த முதல் இந்தியர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துலட்சுமி, சுந்தரரெட்டியைத் தொடர்பு கொண்டு 'என்னுடைய சமூகப்பணிக்கு எவ்வகையிலும் தடையாக இருக்கக் கூடாது' என்ற நிபந்தனையின்பேரில் திருமணத்துக்கு சம்மதித்தார்.

1914இல் அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சபை வழக்கப்படி, அர்த்தமற்ற சடங்கு முறைகள் இன்றி, எளிய முறையில் சுந்தரரெட்டி- முத்துலட்சுமியின் திருமணம் நடந்தது.

இவர்களின் முதல் மகன் ராம்மோகன். தில்லியில் திட்டக் குழு இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய காப்பாளர்.

1917இல் அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அம்மையார் ஆகியோரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்திய மாதர் சங்கத்தில் முத்துலட்சுமி இணைந்து பணியாற்றினார். 1925இல் கணவர் சுந்தரரெட்டி மற்றும் குழந்தைகளுடன் மேல் படிப்புக்காக லண்டன் சென்றார் முத்துலட்சுமி.

அங்கிருந்தபடியே 1926இல் பாரிஸ் சென்று அங்கு நடைபெற்ற அகில உலக பெண்கள் மாநாட்டில் இந்திய மாதர் சங்கத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.

இளவயது திருமணம், விதவை மறுமணம் போன்றவை குறித்து அம்மாநாட்டில் முத்துலட்சுமி பேசியது மாநாட்டில் கவனம்பெற்றிருக்கிறது.

இந்திய மாதர் சங்கத்தின் மூலம் துணை அமைப்புகளைப் போல உருவாக்கப்பட்ட குழந்தைகள் உதவிச் சங்கம், சாரதா மகளிர் மன்றம், இந்தியப் பெண்கள் சமாஜம் போன்ற அமைப்புகளில் முத்துலட்சுமியின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கிறது.

பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்று முத்துலட்சுமி நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக வாக்குரிமை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் மேலவை உறுப்பினராகவும், துணைத் தலைவராகவும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சியில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், விபசார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயதை உயர்த்தும் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் கடுமையான எதிர்ப்புகளை முத்துலட்சுமி எதிர்கொண்டுள்ளார். நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர், பெரியார், திருவிக உள்ளிட்டோர் அப்போது இச்சட்டத்துக்கு ஆதரவளித்தனர்.

சட்டப்பேரவையில் தேவதாசி முறையை ஆதரித்து தீரர் சத்தியமூர்த்தி பேசியபோது, 'மிகக்கடுமையாக' வாதிட்டு வெற்றிபெற்றார் முத்துலட்சுமி. ஆம். 1929 பிப்ரவரி 2ஆம் நாளில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அம்மையாரின் பல்வேறு முயற்சிகளில் இச்சட்டம் மிக முக்கியமான ஒன்று.

1933இல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் முத்துலட்சுமி பங்கேற்று, பெண்ணுரிமைக்கான குரலை லண்டனில் ஒலித்தார்.

1937இல் சென்னை மாநகரத் தலைமையாளர்- 'ஆல்டன் உமன்' என்ற பதவி முத்துலட்சுமிக்கு கிடைத்தது. மாநகராட்சியில் உயர் பதவியைப் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். சென்னையின் மேம்பாட்டில் முத்துலட்சுமியின் பங்குஅதிகமாக இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே இதுபோன்ற முக்கிய பதவிகளில் முத்துலட்சுமி இருந்தபோதுதான், அவையில் அலுவல் ரீதியாக -மிஸஸ் ரெட்டி- என அழைக்கப்பட்டு முத்துலட்சுமியின் பெயர் 'முத்துலட்சுமி ரெட்டி'யாக மாறியிருக்கிறது.

அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு இந்திய மாதர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் முத்துலட்சுமி ரெட்டிக்கு ஏற்பட்டுள்ளது. 1933 முதல் 1945 வரை இந்திய மாதர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

1956இல் முத்துலட்சுமி அம்மையாரின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு பத்மபூஷண் விருதினை வழங்கியது. வாழ்நாள் முழுவதும் பெண்கள் சேவைக்காகப் பணியாற்றி வந்த முத்துலட்சுமி அம்மையார், தனது 82ஆவது வயதில் 1968இல் ஜூலை மாதம் 22ஆம் நாளில் மறைந்தார்.

ஆனால், இன்றைக்கும் அம்மையார் பேசப்படுவதற்கு, நினைவு கூர்வதற்கு ஏராளமான அம்சங்கள் இருந்தாலும் கண்ணெதிர் சாட்சியாக காணப்படுபவை, முதலாவது சென்னையிலுள்ள அவ்வை இல்லம், இரண்டாவது அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.

கணவனால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லமாக 'அவ்வை இல்லம்' இன்றைக்கும் சென்னை அடையாறு பெசன்ட் அவன்யூவில் செயல்பட்டு வருகிறது.

1930 இல் இந்த இல்லத்தை முத்துலட்சுமி அம்மையார் தொடங்கினார். காலப்போக்கில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி, ஏழை மாணவர்கள் பயில்வதற்கான தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என அவ்வை இல்லம் ஆலமரம் போல தன்னுடைய கிளைகளைப் பரப்பி நிற்கிறது.

தற்போது, முத்துலட்சுமி அம்மையாரின் இரண்டாவது மருமகள் மந்தாகினி கிருஷ்ணமூர்த்தி அவ்வை இல்லத்தை நிர்வகித்து வருகிறார்.

அடுத்து மிக முக்கியமானது புற்றுநோய் மருத்துவமனை.

முத்துலட்சுமி அம்மையாரின் தங்கை சுந்தராம்பாள் 1923இல் புற்றுநோயால் காலமானார். மருத்துவரான முத்துலட்சுமி, தங்கையைக் காப்பாற்ற கடுமையாகப் போராடினார். கொல்கத்தாவுக்கும் அழைத்துச் சென்றனர். சிகிச்சை பலனிக்கவில்லை. தங்கையின் மரணம், முத்துலட்சுமி அம்மையாரைச் சற்றே சுருட்டிப் போட்டது. அப்போதே புற்றுநோய்க்கான சிறந்த மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.

1935ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கவுள்ள நோக்கத்தை அறிவித்தார். பலரும் ஆதரவளித்தனர். படிப்படியாக பணிகளைத் தொடங்கி 1952இல் முடிவடைந்து, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு அடிக்கல் நாட்டினார்.


மத்திய அரசு ரூ. ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கியது. 1954 ஜூன் 18ஆம் தேதி முதல் புற்றுநோய் மருத்துவமனை செயல்படத் தொடங்கியது. தென்னாட்டில் உருவாக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகவும், இந்தியாவில் தொடங்கப்பட்ட இரண்டாவது மருத்துவமனையாகவும் புகழ் பெற்ற இம்மருத்துவமனையில் தற்போது ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1902இல் புதுக்கோட்டையில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்று முத்துலட்சுமி வென்றபோது ஏறக்குறைய எல்லோருமே கொண்டாடியிருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்குமா, அதன்பிறகு முத்துலட்சுமி பெறப்போகும் உச்சங்கள் இன்னும் உயரமானவை என்று.

உண்மையில் முத்துலட்சுமி அம்மையாரின் பணிகள் ஈடு இணையற்றவை. அதனால்தான் அவரை இன்னமும் 'மாதர் குல மாணிக்கம்' என்றழைக்கிறார்கள்.

வியாழன், 6 பிப்ரவரி, 2020

பொதுத் தேர்வு ரத்து நல்ல முடிவு; உறுதிபட நில்லுங்கள்!- தமிழ் இந்து நாளிதழ் தலையங்கம்

இந்து தமிழ்_ தலையங்கம்

பொதுத் தேர்வு ரத்து நல்ல முடிவு; உறுதிபட நில்லுங்கள்!

5th-8th-exam-cancelled

ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மிகச் சரியான முடிவு. பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே குழந்தைகளும் பெற்றோர்களும் அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். தேர்வு நடத்தப்படும் விதம் குறித்துப் பள்ளி ஆசிரியர்களும் கல்வித் துறை அதிகாரிகளும் குழப்பத்திலேயே இருந்தனர். குழந்தைப் பருவத்தில் பொதுத் தேர்வு எனும் நடைமுறையைப் புகுத்துவதால் அவர்களின் உளவியலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், இவ்விஷயத்தில் சமூக, பொருளாதாரக் காரணிகள் செலுத்தும் தாக்கங்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் விதமாக தமிழக அரசு ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்துசெய்திருப்பது பாராட்டுக்குரியதாகிறது. இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளில் குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் திறன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘அஸர்’ போன்ற அறிக்கைகள் இத்தகைய கற்றல் குறைபாடுகளைத் தொடர்ந்து எடுத்துக்காட்டிவருகின்றன. அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும் கற்பித்தல் முறையில் நிலவும் குறைபாடுமே மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணம் என்பதையும் இத்தகைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப போதிய ஆசிரியர்கள், ஊழியர்களை நியமிக்கவும், கற்பிக்கும் முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்க அரசு ஆர்வம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக, மாணவர்களின் கற்றல் திறன் குறைபாட்டுக்கு முழுப் பொறுப்பும் ஆசிரியர்களே என்று கைகாட்டவே பொதுத் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்தது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எழுந்த எதிர்ப்பை அடுத்து, இந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது. எனினும், அரசின் இந்த முடிவு, தேர்வுகளைக் கைவிடும் முடிவாக மட்டுமின்றி, மாணவர்களின் நலன் குறித்த முழுமையான அக்கறையாகவும் மாற வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் நிலவிவரும் நீண்ட காலப் பிரச்சினைகளைக் களைவதற்குத் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியைப் பெறுவது குழந்தைகளின் உரிமை என்பதோடு, தரமான கல்வியை அவர்களுக்கு அளிக்க வேண்டியது அரசின் கடமையும்கூட. அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கிறது; மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டிருக்கிறது. ஆசிரியர் குறைவாக இருப்பதால், எஞ்சியிருக்கும் குழந்தைகளின் கற்றல் திறனில் முழுக் கவனம் காட்ட முடிவதில்லை. ஒப்பீட்டளவில், தனியார் பள்ளிகளில் கல்வித் தரம் மேம்பட்டிருக்கிறது என்பதற்கு, அங்குள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கையும் முக்கியமான காரணம். அதைச் சீரமைத்து ஆசிரியர்களிடம் முழுத் திறனையும் கற்பித்தல் நோக்கில் திருப்பினாலே கற்றல் நிறைவடையாமை பிரச்சினைகளுக்கான வேர்களை அரசு கண்டறிந்துவிடலாம்!

தகவல் பகிர்வு:

ஆசிரியர் மன்றம் _நாமக்கல் மாவட்டம்

புதன், 2 அக்டோபர், 2019

நீட்' எனும் மோசடிக் குதிரை

'நீட்' எனும் மோசடிக் குதிரை

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே தேர்வு என்று நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பாஜக அரசை எதிர்த்து, இதனால் சாமானியர்களின் மருத்துவக் கனவு பறிபோகும் என்று தமிழகம் வெகுண்டெழுந்தது.

2017-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் 5 மணி நேரம் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து போராடி சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.  ஆனால் சூத்திரனுக்கு படிப்பதெற்கு என்று சொல்லும் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களின் ஆட்சியில் சாமானியர்களுக்கு கல்வி கிடைப்பதை அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா என்ன?

எத்தனைப் போராட்டம் நடத்தினாலும் நீட் இருந்தே தீரும் என்றார்கள்; விளைவு, தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த அனிதா உட்பட 5 மாணவிகளை பறிகொடுத்தோம். இந்த அய்ந்து மாணவிகளும் படிப்பில் சோடை போனவர்கள் கிடையாது; மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தங்களின் திறமைகளை எடுத்துரைத்தவர்கள். ஆனால் பணமிருந்தால் தான் படிப்பு என்று ஆன பிறகு திறமைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப்போனதுதான் மிச்சம்!

நீட் தேர்வு என்றால் ஏதோ தீவிரவாத தடுப்புப் பயிற்சி முகாமிற்குள் நுழையும் எதிரிகளைப் போல் கடுமையான சோதனைகள், ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவி ஒருவர் போட்டுவந்த முழுக்கைச் சட்டையை அதில் பல டிசைன்கள் இருந்த காரணத்தால் வேறு சட்டை அணிந்துவா என்று சொல்ல, மாணவி வேறு வழியில்லாமல் தந்தையின் சட்டையை வாங்கி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பொதுவெளியில் உள்ளாடைகள் தெரிய கூனிக்குறுகி நீட் தேர்வு எழுதச்சென்றதை தொலைக்காட்சி வாயிலாகக் கண்டு தமிழகம் கொதித்தெழுந்தது,  ஆனால் அரசு எளிதாக ஒரே வார்த்தை கூறியது, 'நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக இத்தனை நடவடிக்கைகள்' என்று வேடிக்கை காட்டியது.

ஆனால், செப்டம்பர் இறுதிவாரம் நடந்த கூத்து ஒன்று பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நீட் தேர்வின் போது சீனாவில் இருந்ததாகவும், மும்பையில் அவருக்குப் பதில் வேறு ஒரு நபர் நீட் தேர்வை எழுதியதாகவும், அதற்காக ரூ.40 லட்சத் திற்கு மேல் கையூட்டுப் பெறப்பட்டது என்றும் யாரோ ஒருவர் தேனி மருத்துவக்கல்லூரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகுதான் உதித் சூரியா என்ற மாணவனின் விவரங்களை சோதித்த போது மும்பையில் நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்ட புகைப்படமும், உதித் சூரியாவின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தது. அதன் பிறகு தான் இதுவரை வட இந்தியாவில் நடந்து, இன்றும் நடந்துகொண்டு இருக்கும் வசூல் ராஜா கதைகள் இங்கும் நடந்துள்ளன என்று தெரியவந்தது.

அதன் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை நடந்த போது தொடர்ந்து ஆள் மாறாட்ட ஏமாற்று வேலைகள் வெளிவந்து குட்டு உடைந்தது.

இதுவரை 6 பேர் சிக்கியுள்ளார்கள். இந்த நிலையில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன. இந்த செய்தி வந்த பிறகு தமிழகம் முழுவதிலுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் மூலம் சேர்ந்து படித்த 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி, விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு மாணவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். சான்றிதழ் சரிபார்ப்பதற்கு வராத மாணவர்கள் குறித்து விசாரணை நடத்த அந்த அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இது போன்று எதுவுமே நடக்காதது போல் அன்றாட வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.  பிஜேபி ஆண்ட மத்தியப் பிரதேசத்தில் "வியாபம்" விவகாரத்தில் முதலமைச்சரே ஊழல் செய்தார் என்று சான்றுகளோடு வந்த பிறகும் அந்த விவகாரத்தை ஊற்றி மூடிய வட இந்திய அரசியல் வாதிகள், நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டை தமிழகத்தோடு முடித்துக் கொள்வார்கள். ம.பி.யில் 10ஆம் வகுப்புப் படித்த மாணவன் எல்லாம் மருத்துவர் ஆன நிலை உண்டு. இப்பொழுது தமிழ் நாட்டில்  ஒரு மாணவருக்கு ரூ.40 லட்சம்  விளையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.   இதுவரை கைதான 6 மாணவர்கள் மற்றும் காணாமல் போயுள்ள 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று பார்த்தால் எத்தனைக் கோடிகள் கைமாறியிருக்கும்? இது தமிழகத்திற்கு மட்டுமே. இதையே நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆயிரம் கோடிகளைக் கூட தொட்டு விடும்.

முதலாவதாக 'நீட்' என்பதே பெரும் மோசடி; இப்பொழுது அந்த 'நீட்' தேர்வு எழுதுவதிலும், மோசடி 'நீட்'டுக்காகத் தனிப் பயிற்சி என்பதிலும் பெரும் பணம் கொள்ளை! இந்த லட்ச ணத்தில் 'நீட்' தகுதியின் அளவு கோலாம் - வெட்கக் கேடு!!
கலி.பூங்குன்றன்.

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் - பொன்னீலன்

ஆசிரியர் இயக்க வரலாற்று நாவல் நூல் அறிமுகம் 

பொன்னீலன்

---------------------------------
எழுத்தாளர் சுகுமாரன் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாழ்க்கையை மேற்கொண்டவர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டியவர். அவரிடமிருந்து ‘‘வீழ்ச்சி’’ என்ற பெயரில் 288 பக்கங்கள் கொண்ட ஒரு நாவல் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிறது. தன் முதல் நாவலை 65_வது வயதில் எழுதி வெளியிட்டிருக்கும் சுகுமாரன் பாராட்டுக்குரியவர்.

இந்த நாவல் பல வரலாறுகளின், பல பிரச்சனைகளின் பின்னலாக வளர்ந்திருக்கிறது. தங்கதுரை என்னும் இளைஞர் சென்னையின் ஒரு பகுதியில் உள்ள திருமுழுக்கு சபைக்குச் சொந்தமான பள்ளியில் இரண்டு பெண் ஆசிரியர்களுக்குப் பின் மூன்றாவது ஆசிரியராகச் சேர்கிறார். இந்தப் பெண் ஆசிரியர்கள் கல்விப் பணியை ஒரு தொண்டாகக் கருதாமல் வயிற்றுப்பாட்டுக்கான வாய்ப்பாகக் கருதிச் செயல்படுபவர்கள். சமூக உணர்வு குறைந்தவர்கள். குழந்தைகளின் பன்முக வளர்ச்சிக்காக வேறு எதையும் செய்ய விரும்பாதவர்கள்.

தங்கதுரை நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்புகிறார். அவர் சொல்லிக் கொடுக்கும் பள்ளியில் இருந்து ஆறாவது வகுப்புக்குப் போகும் மாணவர்கள் தரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற புகார் பக்கத்து உயர்நிலைப் பள்ளியில் இருந்து வரும்போது, அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. பள்ளிக் கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும். கழிப்பறை கட்ட வேண்டும். சத்துணவுக்காக ஒரு காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என்றெல்லாம் தொடங்கும் அவர் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

தங்கதுரை பணியாற்றிய காலம் தமிழக ஆசிரியர் இயக்க வரலாற்றில் எழுச்சிமிக்க காலம். ஆசிரியர் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மாஸ்டர் இராமுண்ணி, அவர் கால ஆசிரியர்களை ஒரு சமூகமாக இணைத்து, இயக்க உணர்வையும் அரசியல் உணர்வையும், ஊட்டி ஆசிரியர்களுக்குப் பல சலுகைகள் பெற்றுக் கொடுத்தப் பெருஞ் சாதனையாளர்.

ஆனாலும் அறுபதுகளில் ஆசிரியர்களின் நிலை விரும்பத்தக்க அளவில் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பிழைப்புக்கு வழி இல்லாமல் பள்ளிகளில் வந்து, தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று, வகுப்பு வகுப்பாகச் சென்று பாடல்கள் பாடியும், வேடிக்கை செய்தும் காசு சேகரித்ததை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இன்று அந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறது. நாவலில் ஒரு இடம் வரும். ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியருக்கு அறிவுரை சொல்லுவார். ‘‘பேசாம பென்சன் வாங்கிட்டுப் போங்க சார். முப்பது வருசம் ஆனா அரைச் சம்பளம். இப்ப அந்தப் பிடித்தம் இந்தப் பிடித்தம் எல்லாம் போக வாங்குறதைவிடப் பென்சன்ல அதிகம் வாங்குவீங்க.’’

இப்படி ஒரு குரல் ஆசிரியர் சமூகத்தினுள் எழுவதற்காக ஆசிரியர் இயக்கம், ஆசிரியர் கூட்டு இயக்கம் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கம், ஆகியன எத்தனை விரிவான போராட்டங்களை நடத்தின. எத்தனைத் தியாகங்களைச் செய்தன. எத்தனை பேரை உயிர்ப் பலி கொடுத்தன. ஆண்களை மீறிப் பெண்கள் எழுச்சி கொள்ள, எப்படி அவர்களுக்கு இயக்க ஆற்றல் ஊட்டப்பட்டது இவையெல்லாம் மிக பெரிய சாதனை வரலாறுகள். இந்த எழுச்சிகளை, இவற்றுக்கான முயற்சிகளை இயக்க உணர்வு கொண்ட ஆசிரியர்கள் செய்துகாட்டினார்கள். தலைவர்களின் அந்த அலைச்சல்களை, போராட்டங்களை, நாவலாசிரியர் சுகுமாரன் நாவலில் நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார்.

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத் தொடக்கக் கல்வித்துறை தனியாக உருவானது, தொடக்கக் கல்வி அலுவலர்கள் என்ற ஒரு புதிய வர்க்கம் உருவானது. அடுத்த கட்டமாக அவர்கள் மூத்த தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கொண்டே நிரப்பப்பட்டனர். இவற்றின் லாப நட்டங்கள் என்ன? தங்கதுரை யோசிக்கிறார். மனதில் மகிழ்ச்சி இல்லை.

இதற்கு இணையாக இன்னொரு புறத்தில், இந்த இயக்கங்களின் வீச்சுக்களால் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாயின. இதுவும் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் ஒரு பெருஞ்சாதனை. ஊராட்சித் தலைவர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது, அடங்காதவர்களைப் பந்தாடுவது, ஆகிய நிலைகள் மாறி, ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் அரசு ஆசிரியர்களாக உயர்ந்தனர். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நேரடியாகச் சம்பளம் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஆசிரியர் கூட்டு இயக்கத்தின் பெருஞ்சாதனைகள், நாவலாசிரியர் சொல்லுவதுபோல பள்ளி நிர்வாகிகள் கொடுக்கு இல்லாத தேளாக ஆக்கப்பட்டது ஆசிரியர்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்தது.

இன்னொரு புறம் சத்துணவுப் பிரச்சனை. காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில், எல்லாருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளியினுள்ளே நுழைந்தது மதிய உணவு அடுப்பு, அந்த அடுப்பை ஊதும் பணியை மட்டுமல்ல, அதற்காக மக்களிடம் தேவைப்படும் பணத்தை வசூல் செய்யும் பணியையும் அரசாங்கம் தலைமையாசிரியர்கள் தலையிலேயே சுமத்தியது.

எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அந்த மதிய உணவு சத்துணவாக மேம்படுத்தப்பட்டது. அரசின் கைகள் இன்னும் கொஞ்சம் தாராளமாயின. ஆனாலும் அந்த உணவுக்கான பொருள்கள் மாணவர்களுக்கு ஒழுங்காகப் போய் சேரவில்லை. அடிக்கு ஒரு தரம் பல அதிகாரிகள் பள்ளிக்கு வந்து உணவு இருப்பை பார்வையிட்டு தொந்தரவு கொடுத்தார்கள். இதில் வெறுப்படைந்த ஆசிரியர் இயக்கம் போராட்டத்தோடு போராட்டமாக இதையும் ஒரு கோரிக்கையாக வைத்துச் சத்துணவு அமைப்பாளர்களை நியமிக்க வைத்தது.

இவைகளுக்கெல்லாம் மேலாண போராட்டம் ஆசிரியர்களுக்கும் போனஸ் வேண்டும். முப்பதாண்டுகள் வேலை பார்த்ததும் முழு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். கருணைத் தொகை முழுமையாக வேண்டும். பொங்கல் பணம் வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அரசின் பார்வைக்கு முன்வைத்தது. இம்மாதிரிக் கோரிக்கைகளுக்காகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் தலைமைச் செயலகப் பணியாளர்கள், எல்லாரும் இணைந்து நாட்டையே நடுங்க வைத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அரசு இயந்திரமே செயலிழந்து நின்றது. கைது, சஸ்பென்ட், டிஸ்மிஸ் அது இது எனப் பல பாணங்களை விட்டும், இந்தக் கூட்டு இயக்கம் ஒடுங்கவில்லை. முடிவு? கூட்டு இயக்கத்தினரின் கோரிக்கைகள் பெரும்பான்மை ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவை ஏற்றுக் கொள்ளப்பட்டனவா. ஏற்றுக் கொள்ளப்படவில்லையா என்பதல்ல பிரச்சினை. இந்தக் கூட்டு இயக்கம் அரசின் இரும்புக்கரத்தைப் பணிய வைத்தது என்பது சாதனை. இதன் வீச்சு அடுத்த தேர்தலிலும் எதிரொலித்தது.

தங்கதுரை வேலை பார்த்த வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்கள் கலந்து கொள்ளவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இந்தச் சிறு குறையால் வெறுப்படைந்த தங்கதுரை போராட்டத்தில் இருந்த பின்வாங்கினார். அவரைப் பொறுத்தவரையில் இது ஒரு வீழ்ச்சி.

அன்றைய முதலமைச்சர் இந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். வேறு வழியில்லாமல் வீதிமன்றத்தில் இருந்த பிரச்சினை நீதிமன்றத்துக்குப் போனது. நீதிபதி ஆசிரியர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கூறினார். வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு போனது. உயர்நீதிமன்றக் கனம் நீதிபதிகள் நீதிபதி தினகரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். தொழில் சங்க தலைவர் டி.கே. ரங்கராஜன் உச்சநீதிமன்றத்திற்குப் போனார். அது இயக்கத்தை முடமாக்கும் தீர்ப்பை அளித்தது. ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டு இயக்கத்திற்கு இது பேரிடி.

நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய நீதிமன்றமே அதிகாரத்துக்கு ஆதரவாக நடந்து கொண்டது இயக்க வரலாற்றின் ஒரு தொடக்கம். படிப்படியாக இந்தப் பார்வை விரிவாகப் பட்டது மட்டுமல்ல. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கே போராடும் உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டது. தங்கதுரை மேலும் இடிந்து போகிறார்.

எழுச்சிகளுக்குப் பின்னான இம்மாதிரியான வீழ்ச்சிகளின் கதைதான் நாவல். அக்காலத்து முதல்வர்கள், ஆசிரியர் இயக்கத்தலைவர். அரசு ஊழியர் இயக்கத் தலைவர்கள் அரசியல் கட்சிகள், தங்கதுரையின் நண்பர்களான மார்டின், மாரடைப்பில் இறந்துபோன தியாகராஜன், குமரன், சாரதி துரைராஜ், அவர் பள்ளி ஆசிரியர்களான பங்கஜம், ஸ்டெல்லா டீச்சர் அவர் மனைவி ஜான்சி, இப்படிப் பல பண்புகள் கொண்ட ஆசிரியர்களை, அவர்களுடைய பலங்களை, பலவீனங்களை நுட்பமாக நாவலில் பதிவு செய்திருக்கிறார் சுகுமாரன்.

நாவலின் சிறப்பு அதன் ஓட்டம், வாசிக்க அலுப்புத் தராத விறுவிறுப்பான ஓட்டத்துக்கு நூலாசிரியரின் இயக்க சம்பந்தமான செய்திகள் துணை நிற்கின்றன.

எளிய மொழியை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கும் விதம் இந்த விறுவிறுப்புக்கு மேலும் துணை செய்கிறது. மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடும் நுட்பமான இடங்களையெல்லாம் கவனமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

ஆசிரியர் இயக்க வாழ்வின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால எழுச்சியையும், வீழ்ச்சி என்று சொல்லி முடியாத ஒரு பின்வாங்குதலையும் வரலாற்றுப் போக்கில் பதிவு செய்வதில் இந்த நாவல் வெற்றி பெற்றிருக்கிறது.