புதன், 2 அக்டோபர், 2019

நீட்' எனும் மோசடிக் குதிரை

'நீட்' எனும் மோசடிக் குதிரை

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு ஒரே தேர்வு என்று நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய பாஜக அரசை எதிர்த்து, இதனால் சாமானியர்களின் மருத்துவக் கனவு பறிபோகும் என்று தமிழகம் வெகுண்டெழுந்தது.

2017-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் 5 மணி நேரம் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்து போராடி சென்னையை மட்டுமல்ல, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.  ஆனால் சூத்திரனுக்கு படிப்பதெற்கு என்று சொல்லும் இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களின் ஆட்சியில் சாமானியர்களுக்கு கல்வி கிடைப்பதை அவ்வளவு எளிதில் விட்டு விடுவார்களா என்ன?

எத்தனைப் போராட்டம் நடத்தினாலும் நீட் இருந்தே தீரும் என்றார்கள்; விளைவு, தமிழகத்தில் அரியலூரைச் சேர்ந்த அனிதா உட்பட 5 மாணவிகளை பறிகொடுத்தோம். இந்த அய்ந்து மாணவிகளும் படிப்பில் சோடை போனவர்கள் கிடையாது; மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தங்களின் திறமைகளை எடுத்துரைத்தவர்கள். ஆனால் பணமிருந்தால் தான் படிப்பு என்று ஆன பிறகு திறமைகள் எல்லாம் மண்ணோடு மண்ணாகிப்போனதுதான் மிச்சம்!

நீட் தேர்வு என்றால் ஏதோ தீவிரவாத தடுப்புப் பயிற்சி முகாமிற்குள் நுழையும் எதிரிகளைப் போல் கடுமையான சோதனைகள், ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவி ஒருவர் போட்டுவந்த முழுக்கைச் சட்டையை அதில் பல டிசைன்கள் இருந்த காரணத்தால் வேறு சட்டை அணிந்துவா என்று சொல்ல, மாணவி வேறு வழியில்லாமல் தந்தையின் சட்டையை வாங்கி தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி பொதுவெளியில் உள்ளாடைகள் தெரிய கூனிக்குறுகி நீட் தேர்வு எழுதச்சென்றதை தொலைக்காட்சி வாயிலாகக் கண்டு தமிழகம் கொதித்தெழுந்தது,  ஆனால் அரசு எளிதாக ஒரே வார்த்தை கூறியது, 'நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என்பதற்காக இத்தனை நடவடிக்கைகள்' என்று வேடிக்கை காட்டியது.

ஆனால், செப்டம்பர் இறுதிவாரம் நடந்த கூத்து ஒன்று பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, தேனி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் நீட் தேர்வின் போது சீனாவில் இருந்ததாகவும், மும்பையில் அவருக்குப் பதில் வேறு ஒரு நபர் நீட் தேர்வை எழுதியதாகவும், அதற்காக ரூ.40 லட்சத் திற்கு மேல் கையூட்டுப் பெறப்பட்டது என்றும் யாரோ ஒருவர் தேனி மருத்துவக்கல்லூரிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகுதான் உதித் சூரியா என்ற மாணவனின் விவரங்களை சோதித்த போது மும்பையில் நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்ட புகைப்படமும், உதித் சூரியாவின் புகைப்படமும் வேறு வேறாக இருந்தது. அதன் பிறகு தான் இதுவரை வட இந்தியாவில் நடந்து, இன்றும் நடந்துகொண்டு இருக்கும் வசூல் ராஜா கதைகள் இங்கும் நடந்துள்ளன என்று தெரியவந்தது.

அதன் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் சோதனை நடந்த போது தொடர்ந்து ஆள் மாறாட்ட ஏமாற்று வேலைகள் வெளிவந்து குட்டு உடைந்தது.

இதுவரை 6 பேர் சிக்கியுள்ளார்கள். இந்த நிலையில் இன்னும் ஆய்வு செய்ய வேண்டியவை அதிகம் உள்ளன. இந்த செய்தி வந்த பிறகு தமிழகம் முழுவதிலுமுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வின் மூலம் சேர்ந்து படித்த 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி, விடுப்பு எடுத்துச் சென்றுள்ளனர். இதில் வாணியம்பாடியைச் சேர்ந்த ஒரு மாணவர் வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். சான்றிதழ் சரிபார்ப்பதற்கு வராத மாணவர்கள் குறித்து விசாரணை நடத்த அந்த அந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் ஆணை பிறப்பித்துள்ளன.

மற்ற மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் இது போன்று எதுவுமே நடக்காதது போல் அன்றாட வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.  பிஜேபி ஆண்ட மத்தியப் பிரதேசத்தில் "வியாபம்" விவகாரத்தில் முதலமைச்சரே ஊழல் செய்தார் என்று சான்றுகளோடு வந்த பிறகும் அந்த விவகாரத்தை ஊற்றி மூடிய வட இந்திய அரசியல் வாதிகள், நீட் ஆள்மாறாட்ட முறைகேட்டை தமிழகத்தோடு முடித்துக் கொள்வார்கள். ம.பி.யில் 10ஆம் வகுப்புப் படித்த மாணவன் எல்லாம் மருத்துவர் ஆன நிலை உண்டு. இப்பொழுது தமிழ் நாட்டில்  ஒரு மாணவருக்கு ரூ.40 லட்சம்  விளையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.   இதுவரை கைதான 6 மாணவர்கள் மற்றும் காணாமல் போயுள்ள 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்று பார்த்தால் எத்தனைக் கோடிகள் கைமாறியிருக்கும்? இது தமிழகத்திற்கு மட்டுமே. இதையே நாடு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் ஆயிரம் கோடிகளைக் கூட தொட்டு விடும்.

முதலாவதாக 'நீட்' என்பதே பெரும் மோசடி; இப்பொழுது அந்த 'நீட்' தேர்வு எழுதுவதிலும், மோசடி 'நீட்'டுக்காகத் தனிப் பயிற்சி என்பதிலும் பெரும் பணம் கொள்ளை! இந்த லட்ச ணத்தில் 'நீட்' தகுதியின் அளவு கோலாம் - வெட்கக் கேடு!!
கலி.பூங்குன்றன்.