ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்
கே.சந்துரு
06 Feb 2022
தமிழ்நாடு சட்டப்பேரவையானது, நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, சபாநாயகருக்கே திருப்பி அனுப்பியதுடன், மறுபரிசீலனைசெய்யும்படி பேரவையைக் கேட்டுக்கொண்டுள்ளது தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பு புரிந்துகொள்ளக் கூடியது. விளைவாகவே ஆளுநரின் அதிகார வரையறை என்ன என்ற விவாதம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
1967-ம் வருட பொதுத் தேர்தலில் முதல் முறையாக தமிழ்நாடு சட்டமன்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதுடன், முதல்வராக அண்ணா பதவியேற்றார். இந்தியா முழுதும் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் 8 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்றது அதுவே முதல் முறை. இதனால் காங்கிரஸ் கட்சி பதவியில் இல்லாத மாநிலங்களில் மாநிலங்களின் உரிமை பற்றியும், அம்மாநிலங்களுக்கு அனுப்பப்படும் ஆளுநர் எப்படி நியமிக்கப்பட வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அண்ணா அவர்கள் தனக்கே உரிய பாணியில் ”ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு கவர்னர் எதற்கு?” என்ற கேள்வியை எழுப்பியது மக்களைக் கவர்ந்தது
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற கலைஞர், அரசமைப்புச் சட்டத்தில் மாநில சுயாட்சி பற்றியும், ஒன்றிய - மாநில உறவுகள் பற்றியும் எத்தகைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான உயர்நிலைக் குழு ஒன்றை அறிவித்ததுடன், அதன் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.வி.ராஜமன்னாரையும் நியமித்தார். அக்குழு அளித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான ஒன்று, ஆளுநர் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதைத் தடுப்பதற்கு ஏதுவாக ஆளுநரின் நியமனத்திற்கான ஒப்புதலை மாநில அரசுகளிடமிருந்து பெற வேண்டும் என்பதாகும். ஆக, இந்த விவகாரத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து விவாதித்துவருகிறது.
ஆளுநர்களின் வரலாறு
கடந்த 50 ஆண்டு காலத்தில் மாநில ஆளுநர்களை ஒன்றிய அரசிலுள்ள ஆளுங்கட்சி, தனக்கேற்ற முறையில் நியமித்து வந்ததுடன், மாநிலங்களிலுள்ள அரசுகளின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் வகையில் செயல்பட வைத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி ஆளுங்கட்சிகளில் ஏற்படும் உள்கட்சி சண்டைகளைத் தவிர்ப்பதற்கும், அதிகார மையங்களை மாற்றுவதற்கும் அக்கட்சிகளின் பொறுப்புகளிலிருந்த முதுபெரும் தலைவர்கள் வேற்று மாநிலங்களில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். “ஆளுநர் மாளிகை ஒன்றிய ஆளுங்கட்சிகளின் சதி ஆலோசனை செய்யும் இடமாகவே செயல்படுகின்றன” என்று பல மாநிலங்களிலும் பல முறை குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் 1976-ல் திமுக அரசை நீக்குவதற்கு ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் செயல்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் சாராம்சம் இன்றுவரை வெளியிடப்படவில்லை. மாறாக, திமுக அரசை நீக்கியவுடனேயே அன்றைக்குப் பதவியிலிருந்த ஆளுநர் கே.கே.ஷா கழட்டிவிடப்பட்டு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார். அதேபோல, நெருக்கடி நிலைமைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற நிலையில் மத்தியில் ஒன்றிய அரசை அமைத்த ஜனதா கூட்டணி அரசு தமிழக ஆளுநராக பிரபுதாஸ் பட்வாரியை நியமித்தது. ஆனால், இரண்டு வருடங்களில் மீண்டும் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. தொடர்ச்சியாக தமிழகத்திலேயே ஆளுநர்கள் பந்தாடப்பட்டதும், ஒன்றிய ஆளுங்கட்சியின் விருப்பத்திற்கேற்ப செயல்பட்டவர்களாகவும் இருந்து வந்ததைப் பார்த்தோம்.
நீட் தேர்வின் அரசியல்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த முறை திமுக ஆட்சியைப் பிடிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, ‘நீட் தேர்வை ரத்துசெய்வோம்’ என்று அது அளித்த வாக்குறுதி. விளைவாகவே, புதிதாக முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையைில் குழு ஒன்றை அமைத்து நீட் தேர்வினால் அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை மாணவர்கள் எத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார்.
நீதிபதி ஏ.கே.ராஜன் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே, தமிழ்நாடு பாஜகவின் செயலாளர் கரு.நாகராஜன் உயர் நீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். அவர் தொடுத்த பொதுநல வழக்கில் மாநில அரசு குழு அமைப்பதையும், நீட் தேர்விலிருந்து விடுதலை பெறுவதையும் அனுமதிக்க முடியாது என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த அன்றைய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவ்வழக்கை முதல்கட்ட விசாரணையிலேயே தள்ளுபடிசெய்து உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்குத் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார். 75 நீதிபதிகள் அடங்கிய பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து, மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு சிறு மாநிலத்திற்கு அவர் மாற்றப்பட்டது பழிவாங்கல் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டுக்கும் வழிவகுத்தது.
ஏ.கே.ராஜன் தன்னுடைய அறிக்கையில், "நீட் தேர்வுகளுக்குப் பிறகு தமிழக அரசு நடத்திவரும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் ஒற்றை இலக்கத்தில்கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதில்லை" என்று கூறியதுடன், "இதுவரை தமிழ்நாடு அரசு நடத்திவரும் மருத்துவமனைகளில் சிறப்பான சேவை செய்துவருபவர்கள் நலிவுற்ற பகுதிகளிலிருந்து வந்து மருத்துவக் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றவர்கள்தான்" என்றும் கூறியிருந்தார்
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில், நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை எதிர்த்து பாஜகவின் நான்கு உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்புசெய்த காரணத்தால் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட சில தினங்களில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். பிஹாரைச் சேர்ந்த காவல் துறை அதிகாரியான இவர், ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டபோது, தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டதாக அங்குள்ள பல கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இலக்கான வரலாற்றுக்கு உரியவர்.
இழுத்தடிப்புத் தந்திரம்
தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்ற ஆளுநர் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் குறித்து முடிவெடுக்காமல் மாதக்கணக்கில் நாட்களைக் கடத்திவந்தார். இதனால் அவருக்கு எதிராக கண்டனக் கணைகள் எழுந்தன. சபாநாயகர் அப்பாவு அகில இந்திய அளவிலான மாநாடு ஒன்றிலேயே, ஆளுநரின் காலக் கடத்தல் நடவடிக்கைக்கு எதிராகப் பேசினார். அடுத்து, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து முறையிடுவதற்கு முயன்றபோது, அமைச்சர் அமித் ஷா காலம் கடத்தினார். தமிழ்நாட்டு மக்களின் கோபக்கணைகள் பெருகிவருவதைப் பார்த்தபின், தமிழ்நாட்டு கட்சிகளின் ஆளுநர் எதிர்ப்பு ஆட்சேபனைக் கடிதத்தை 'கடமை'க்காகப் பெற்றுக்கொண்டார்.
மசோதா மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநர் 5 மாதங்களுக்குப் பிறகு 3.2.2022 அன்று திடீரென்று சட்ட மசோதாவை சட்டப்பேரவையின் மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பினார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவை நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஒன்றிய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநர் திருப்பி அனுப்புவதற்கு உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
அரசமைப்புச் சட்டத்தின் 246-வது பிரிவில், ஒன்றிய அரசிற்கும், மாநிலச் சட்டமன்றங்களுக்கும் உள்ள அதிகாரப் பிரிவினைப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது (7-வது அட்டவணை). ஆனால், கல்வி சம்பந்தமான சட்டங்களைப் பொறுத்தவரை அதற்கான அதிகாரப் பங்கீடு மூன்றாவது பட்டியலில் சேர்க்கப்பட்டதுடன், அதுகுறித்த சட்டங்களை ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் இயற்றலாம் என்று சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் சட்டத்திலிருந்து மாநில அரசு விதிவிலக்கு வேண்டும் என்றால் அத்தகைய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை மாநிலச் சட்டமே அம்மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 200-ன்படி மாநிலச் சட்டமன்றங்கள் இயற்றக்கூடிய சட்டங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டும். அதேசமயத்தில் 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டிய மாநிலப் பேரவை இயற்றிய சட்டங்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி அவருடைய இசைவைப் பெற்ற பின்தான் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்.
தமிழ்நாடு நீட் விலக்குச் சட்டம், ஒன்றிய அரசின் இந்திய மருத்துவ பிரிவு 10-Dக்கு முரணாக இருப்பதனால் மாநில நீட் விலக்குச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெறுவதற்காக கோப்புகளை ஆளுநர் தில்லிக்கு அனுப்பியிருக்க வேண்டும். மாறாக மீண்டும் பேரவையின் பரிசீலனைக்கு அவர் அனுப்பியது முறைகேடான செயலாகும்.
ஆளுநர் ரவி மசோதாவைத் திருப்பி அனுப்பும்போது அதற்கு இரண்டு காரணங்களை குறிப்பிட்டிருந்தார். ஒன்று, தமிழ்நாடு சட்ட வரைவு ஏழை மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன்களுக்கு புறம்பாக உள்ளது என்று கூறியிருந்தார். இதற்கான பரிசீலனையை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு செய்ததுடன், நீதிபதி ராஜன் கமிட்டி அறிக்கையையும் சட்டமன்றத்தில் வைத்தது. உறுப்பினர்கள் அனைவரும் (பாஜக தவிர) இச்சட்டத்தை ஏகமனதாக வரவேற்றிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கரிசனத்தைவிட ஆளுநர் ஏழை மாணவர்கள் மீது அதிகக் கரிசனம் காட்டியிருக்க முடியாததோடு, அவருடைய அதிகார வரம்பில் இப்படிப்பட்ட காரணத்தைக் கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை.
ஆளுநர் கூறிய இரண்டாவது காரணத்தில், ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட் தேர்வின் நன்மைகளைப் பற்றி கூறியுள்ளதனால் மாநில அரசு இச்சட்டத்தை இயற்றுவது சரியல்ல என்று கூறியிருந்தார். ஆனால், கிறித்துவ மருத்துவக் கல்லூரி வழக்கில் உச்ச நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட பிரச்சினை நீட் தேர்விலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு விதிவிலக்கு உண்டா இல்லையா என்பதுதான். உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு அனைத்து விதமான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், சிறுபான்மையினருக்கு விதிவிலக்கு அளிப்பதற்குக் காரணம் ஏதுமில்லை என்றும்தான் தீர்ப்பளித்திருந்தது.
ஒன்றிய சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்து சட்டம் இயற்ற மாநிலப் பேரவைக்கு உரிமை உண்டா என்பதைப் பற்றி இதுவரை எந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவில்லை. ஒருவேளை நீட் விலக்குச் சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தால் அதை எதிர்த்து யாரேனும் வழக்கு தொடுத்தால் மட்டுமே அப்பிரச்சினை குறித்து நீதிமன்றங்கள் கருத்து சொல்ல முடியும்.
ஆளுநரின் அதிகாரம் இங்கிலாந்து மன்னரைப் போன்றதல்ல. அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்டமன்றங்களின் அதிகார வரையறைக்கு உட்பட்டும், மாநில அமைச்சரவையின் ஆலோசனைகளுக்கும் உட்பட்டும்தான் செயல்பட முடியும் என்று ஏற்கெனவே 1974-ம் வருடம் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத தமிழக ஆளுநர், ஐந்து மாதங்கள் சட்ட ஆலோசனை பெறுவதற்காக செலவிட்டதாக கூறியிருப்பது நகைப்புக்குரியது. மேலும், அவருக்கு நீட் மசோதாவைத் திருப்பி அனுப்புவதற்கு ஆலோசனை கூறியது பா.ஜ.கவின் அரசியல் சூழ்ச்சியா (அ) அவர் பெற்ற சட்டக் கருத்து உச்ச நீதிமன்றம் கூறியது போல் 'மாட்டுக்கொட்டாய்' சட்டக்கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற ஒருவரின் கருத்தா என்பது தெரியவில்லை.
ஆளுநரின் இந்த அதிகார மீறலைக் கண்டிப்பதற்காக தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். அக்கூட்டத்தில் நீட் விலக்கு கோரும் சட்டத்தை மீண்டும் சட்டமன்றத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றுவதோடு, சட்ட வரைவைத் திருப்பி அனுப்பிய ஆளுநரையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரலையும் எதிரொலிக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா!
கே.சந்துரு,
சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி;
சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.