செப்டெம்பர் 29, வரலாற்றில் இன்று.
சர்வதேச காபி தினம் இன்று.
நாம் அன்றாடம் ஒன்று அல்லது இரண்டு தடவையாவது காபி அருந்தும் பழக்கம் உடையவர்களாக இருப்போம்... ஆனால் யாருக்கும் காபியின் வரலாறு தெரியாது... அது கடந்து வந்த பாதையும் தெரியாது... (வரலாறு முக்கியம் அமைச்சரே, மறந்து விடாதீர்கள்)
காபியின் ருசிகர தகவல்கள்...
சிலர் காபி குடிப்பது நல்லது என்பார்கள், சிலர் காபி குடிப்பது கேடு என்பார்கள், அதெல்லாம் அவரவர் பாடு. காபியில் பல வகைகள், சுவைகள் இருக்கின்றன. நாம் மிகவும் விரும்பி சுவைக்கும் ருசியான காபியின் வரலாறு அதை விட ருசிகரமானது. காபியை எந்த கேட்டரிங் படித்த மாணவரும் கண்டுப்பிடிக்கவில்லை. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த யாரோ ஒருவர் தெரியாமல் கண்டுப்பிடித்த பானத்தை இன்று உலகே வேண்டி விரும்பிக் குடித்துக் கொண்டிருக்கிறது.
காபி எனும் பானம் கண்டுபிடிக்கப்பட்டு 11 நூற்றாண்டுகள் ஆகிறது. 9ஆம் நூற்றாண்டில், எதியோப்பியாவை சேர்ந்த ஓர் ஆடு மேய்ப்பவர் தற்செயலாக கண்டுப்பிடித்த பானம் தான் காபி.
உலக வரலாற்றில் மூன்று முறை காபி தடை செய்யப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் மெக்காவிலும், 1675ஆம் ஆண்டு ஐரோப்பாவில் சார்லஸ் II ஆம் மன்னராலும், 1677ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிரெட்ரிக் என்பவராலும் காபி தடை செய்யப்பட்டது.
பின்லாந்த், ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் தான் காபி அதிகமாக பருகப்படுகிறது
பொதுவாக காபி மரங்கள் 30 அடி வரை வளர முடியுமாம். ஆனால், 10 அடியில் இருக்கும் போதே அறுவடை செய்துவிடுகின்றனர். அப்போது தான் எளிதாக பறிக்க முடியும். கேமரூனில் இருக்கும் ஒரு வகை காபி (Coffea Charrieriana) தான் உலகிலேயே இயற்கையாக காஃபைன் நீக்கப்பட்ட காபி ஆகும்.
கடந்த 1906ஆம் ஆண்டு, ஆங்கில வேதியியலாளர் ஜார்ஜ் கான்ஸ்டன்ட் வாஷிங்டன் என்பவர் தான் முதன் முதலில் இன்ஸ்டன்ட் காபியை தயாரித்தார். சில நாடுகளின், சில பகுதிகளில் காபிக் கொட்டைகளை உரமாகவும் பயன்படுத்துகின்றனர்.
உலகில் எண்ணெய்க்கு அடுத்து இரண்டாவதாக, அதிகமாய் ஏற்றுமதி செய்யப்படும் பொருள் காபி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் காபி
குடிப்பதால், டைப் 2 நீரிழிவு நோய், அல்சைமர் எனும் மறதி நோய், இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயங்கள் குறையும். ஓர் நாளுக்கு ஆறு தடவைக்கு மேல் காபிக் குடிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.