செவ்வாய், 11 ஜனவரி, 2022
e-Filing AY 2021-22 under the IT Act, 1961, CBDT further extends due dates for filing of Audit reports & ITRs for AY 21-22. Circular No. 01/2022 dated 11.01.2022 issued.
டெல்லி பல்கலைக்கழகத்தின் மோசமான முன்முடிவு
டெல்லி பல்கலைக்கழகத்தின் மோசமான முன்முடிவு
ஆசிரியர்
நாட்டின் செல்வாக்கு மிக்க உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவானது, நாடு முழுமையும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைக் கோருவதாக அமைந்திருக்கிறது. இதுவரை பள்ளி இறுதித் தேர்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களின் ‘கட் ஆஃப்’ அடிப்படையில் மாணவர்களைத் தேர்ந்தெடுத்துவந்த அது, வரவிருக்கும் ஆண்டிலிருந்து அங்கு சேரவிருக்கும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இனி கலை – அறிவியல் படிப்புகளில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு எனும் கலாச்சாரம் உருவாக இது அடிப்படையாக அமையும்.
இந்த நுழைவுத் தேர்வு தொடர்பில் விரிவான விளக்கங்களை டெல்லி பல்கலைக்கழகம் தெரிவிக்கவில்லை என்றாலும், மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு (சியுசிஇடி – CUCET) அல்லது டெல்லி பல்கலைக்கழகத்துக்கு என்றேயான பிரத்யேக நுழைவுத் தேர்வு (டியுசிஇடி -DUCET) ஆக இது நடத்தப்படும் என்று அதன் துணைவேந்தர் யோகேஷ் சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டபோது, அதன் எட்டுக் கல்லூரிகளிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ‘கட் ஆஃப் மார்க்’ 100%’ எனும் வரையறையைத் தொட்டிருந்தது. பெரும்பாலான படிப்புகள் 99% எனும் வரையறையைத் தொட்டிருந்தன. சுமார் 9,200 மாணவர்கள் 100% தகுதி பெற்றிருந்தார்கள்.
இந்த மாணவர்களில் மத்திய கல்வி வாரியத்தின் வழி தேர்வு எழுதி வந்தவர்களும் உள்ளடக்கம் என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்; அந்தந்த மாநிலக் கல்வி வாரியத் தேர்வுகளின் வழி வந்தவர்கள். குறிப்பாக, கேரள மாணவர்கள் கணிசமான இடங்களைப் பெறுவது சமீப ஆண்டுகளில் உள்ளூர் மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாநிலக் கல்வி வாரியங்கள் தங்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வாரி வழங்கி, இப்படி முக்கியமான உயர்கல்வி நிறுவனங்களை ஆக்கிரமிப்பதாகப் பேசப்படலானது. சங்கப் பரிவாரங்கள் இதற்கு மதச் சாயமும் பூசின. ‘இது கேரள அரசின் ‘மார்க்ஸ் ஜிகாத்’ என்று குற்றஞ்சாட்டினார் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான ராகேஷ் பாண்டே. உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை கோரி போராட்டங்களும் நடந்தன.
இத்தகு பின்னணியிலேயே டெல்லி பல்கலைக்கழகம் இந்த நுழைவுத் தேர்வு முடிவை அறிவித்திருக்கிறது. “இனி எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், எந்தக் கல்வி வாரியத்தின் வழி படித்தவராக இருப்பினும் இந்தத் தேர்வை எழுதித் தேர்வாக வேண்டும்; இந்த நுழைவுத் தேர்வானது, களத்தையும் போட்டியையும் சமப்படுத்தும்” என்று கூறுகிறார்கள் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தினர்.
மேலோட்டமாகக் கேட்பதற்கு சரியான முடிவு என்பதுபோலத் தோன்றினாலும், நிச்சயமாக இது முறையான தீர்வு இல்லை என்பது வெளிப்படை. நல்ல உயர்கல்வி நிறுவனங்களுக்கு இவ்வளவு போட்டி நிலவுவதற்கு மிக முக்கியமான காரணம், அதிகரிக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தரமான உயர்கல்வி நிறுவனங்கள் உருவாகவில்லை என்பதாகும். இதில் முதல் குற்றவாளி ஒன்றிய அரசு; போதிய அளவுக்குப் புதிய நிறுவனங்களை உருவாக்கவும் இல்லை; இருக்கும் நிறுவனங்களை தரப்படுத்த போதிய அளவுக்குச் செலவிடுவதும் இல்லை. அடுத்த குற்றவாளி மாநில அரசுகள். தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பல்கலைக்கழகங்களின் தரத்தை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவு சீரழித்திருக்கின்றன. கல்வித் துறையைத் தன்னுடைய ஏகாதிபத்தியத்தின் கீழ் ஒன்றிய அரசு கொண்டுவர முற்படுவதும், அதற்கேற்ப கல்விக் கொள்கையை அது வளைப்பதும், பல மாநில அரசுகள் இதை வேடிக்கை பார்த்திருப்பதும் இன்னொரு முக்கியமான காரணம்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் ‘இது அல்லது அது’ எனும் முடிவு இருவேறு கேள்விகளை எழுப்புகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு நடத்தப்படும் பொதுவான தேர்வையே அதுவும் வரித்துக்கொண்டால், அது ‘நீட்’, ‘ஜேஇஇ’ தேர்வுகளின் வரிசையில் கல்வியை முழுமையாக மத்திய மையப்படுத்த வழிவகுத்துவிடும். வெவ்வேறு மாநிலங்களில், மாநிலக் கல்வி வாரியங்கள் வழி பாடத் திட்டங்களைப் படித்து, தேர்வெழுதி வரும் மாணவர்களை அது கடுமையாகப் பாதிக்கும். மாறாக, தனக்கென்று ஒரு பிரத்யேக தேர்வை டெல்லி பல்கலைக்கழகமே நடத்தும் என்றால், உள்ளூர் பாடத்திட்டம் வழி படித்துவரும் மாணவர்களுக்கு ஏற்ப தேர்வை அமைக்க அதில் ஒரு வாய்ப்பு உண்டு.
எப்படியாயினும், இரு வழிகளுமே நுழைவுத் தேர்வு என்பது இனி எல்லாப் படிப்புகளுக்கும் கட்டாயம் என்ற சூழலை உருவாக்கவே வழிவகுக்கும். பன்னிரெண்டு ஆண்டுகள் பள்ளிக்கல்வியை அது அர்த்தமற்றதாக்கும். மாணவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் தேர்வை இம்முறை திணிப்பதுடன், தனிப் பயிற்சி நிறுவனங்களின் பல்லாயிரம் கோடி வணிகத்துக்கும், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி எனும் வாய்ப்பையே எட்ட முடியாத சூழலுக்கும் இது வழிவகுத்துவிடும்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் முடிவானது ஒரு பல்கலைக்கழகத்தின் பிரச்சினை அல்லது எங்கோ நமக்குச் சம்பந்தமில்லாத தொலைதூர ஊர் ஒன்றின் விவகாரம் இல்லை. அது ஒட்டுமொத்த நாட்டையும் வாரிச் சுருட்ட வல்ல சூறாவளி. எல்லாப் படிப்புகளுக்குமே நுழைவுத் தேர்வைக் கொண்டுவர ஆசை கொண்டிக்கும், மையப்படுத்தலை முனையும், 'மெரிட்டிஸம்' பேசும் பாஜக அரசின் செயல்திட்டத்தோடு சேர்த்தே இதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. நாம் இதுகுறித்து விவாதிக்கவும், செயலாற்றவும் வேண்டும். ‘நீட் தேர்வு’ போன்ற ஒரு அநீதியான, ஏற்றத்தாழ்வு முறைக்கு எதிராகப் போராடுவோர்தான் இதிலும் முன் நிற்க முடியும். அதேசமயம், பெருகிவரும் போட்டியை எதிர்கொள்வதற்கான ஒரு முறைமையையும் நாம் யோசிக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். பள்ளிக்கல்வித் துறையுடனும், வேலைவாய்ப்புத் துறையுடனும் இணைந்து, இதற்கான தீர்வைச் சிந்திக்க வேண்டும். அரசியல் களத்தில் அது எதிரொலிக்க வேண்டும்