மாநிலம் முழுவதிலும் சுமார் 2.26 கோடி குழந்தைகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை (பிப்.8) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.
தேசிய குடற்புழு நீக்க நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் நாடு முழுவதிலும் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அல்பெண்டசோல் எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், இம்முறை பிப்ரவரி 10-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
அதனால் அங்கு முகாம் நடத்தி மருந்துகளை வழங்க இயலாது. எனவே, நிகழாண்டில் குடற்புழு நீக்க மாத்திரை அளிக்கும் திட்டத்தை 8-ஆம் தேதி செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், அரசுசார் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மாத்திரைகளை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 2.26 கோடி குழந்தைகள் மற்றும் சிறாருக்கு அதை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் விடுபட்டவர்களுக்கு அடுத்தகட்டமாக பிப்ரவரி 14-ஆம் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கான பணிகளில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி ஊழியர்களும், 58 ஆயிரத்து 358 பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதும், அசுத்தமான உணவுகளை உண்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் குடற்புழுக்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அதைத் தடுக்கும் பொருட்டே மத்திய, மாநில அரசுகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை பிரச்னை வராமல் காக்க முடியும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்றி, குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் உடல் வளர்ச்சிக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பெரிதும் உதவுகின்றன என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு குடற்புழு நீக்க திட்டத்தின் கீழ் மாத்திரைகள் அளிப்பதோடு நில்லாமல் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், சுகாதாரம் பேணுவதன் அவசியம் உள்ளிட்டவை குறித்த தகவல்களை ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.