Click here for download...
திங்கள், 26 பிப்ரவரி, 2018
தேர்வு அறையில் மின் விசிறி கட்டாயம் : பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு...
பொது தேர்வுக்கான தேர்வு அறைகளில் மின்விசிறி மற்றும், கடிகாரம் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்டத்தில், மார்ச் 1ல்- பிளஸ் 2;
மார்ச் 7ல்- பிளஸ் 1;
மார்ச் 16ல்- 10ம் வகுப்புக்கும் பொது தேர்வுகள் துவங்க உள்ளன. தேர்வின் போது, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழகம் முழுவதும், 30 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், ஒரு லட்சம் ஆசிரியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, பள்ளிகளை தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
உள்ளூர் மின் வாரிய அதிகாரிகளுடன் பேசி அனைத்து தேர்வு மையங்களுக்கும் தடையில்லா மின் வசதி பெற வேண்டும் .
அனைத்து தேர்வறைகளின் முன்புறமும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ஓட்டை, உடைசல் பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகளை மாற்றி மாணவர்களுக்கு வசதியான பெஞ்ச்கள் மற்றும் எழுத்து பலகைகள் வைக்க வேண்டும்.
தேர்வின் போது மாணவர்களின் காலணிகள், உடைமைகளை வைக்க, தனி அறைகளை ஒதுக்க வேண்டும்.
அனைத்து தேர்வறைகளிலும், இயங்கும் நிலையில், மின் விசிறி மற்றும் சுவர் கடிகாரங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையில் பி.எட்., படிப்பு அறிமுகம்...
செண்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500
இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
சென்னை பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கல்வி கவுன்சில் கூட்டம், துணை வேந்தர், துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில், நடந்தது.இதில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான விதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் கல்வி ஆண்டில், சென்னை பல்கலையில், பி.எட்., கல்வியியல் படிப்பு அறிமுகப்படுத்தவும், கல்விக்குழு ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து, துணை வேந்தர், துரைசாமி கூறியதாவது.பல்கலையால் நடத்தப்படும், 58 வகை முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு, பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
அனைத்து முதுநிலை படிப்பிலும், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும், 'சி.பி.சி.எஸ்., கிரெடிட்' மதிப்பெண் முறை செயல்படுத்தப்படும்.
தமிழ் துறையில், தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம்; தமிழ் இலக்கிய படிப்புகள் என, இரண்டு பிரிவுகளாகவும், இயற்பியலில், அணு இயற்பியல் மற்றும் கருத்தியல் இயற்பியல் என, இரண்டு பாடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின், பல்கலை மானியக் குழு அனுமதியுடன், பட்டம், சான்றிதழ் மற்றும், 'டிப்ளமா' படிப்புகள், 'ஆன்லைனில்' நடத்தப்படும்.
'மூக்' என்ற ஆன்லைன் படிப்புகள், 'ஸ்வயம்' இணையதளம் வழியாக, சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் அறிமுகம் செய்யப்படும். ஆன்லைன் படிப்புக்கான சிறப்பு மையம், சென்னை பல்கலையில் அமைக்கப்படும்.
அனைத்து முதுநிலை படிப்புகளும், மூன்று வழிகளில் நடத்தப்பட உள்ளன. நேரடியாக பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியிலும், ஆன்லைன் முறையிலும், அறிமுகம் செய்யப்படும். இதனால், ஏதாவது ஒரு பாடத்தை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும், மாணவர்கள் படிக்கலாம்.
இதுகுறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தொலைநிலை கல்வி மாணவர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.வரும் கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பி.எட்., படிப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி பெறப்பட்டு உள்ளது. முதல் ஆண்டில், 500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பாடத்திட்டத்தில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்~ பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்…
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்க (ஜேஆர்சி) அமைப்பு கட்டாயமாகச் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் "ஜுனியர் ரெட்கிராஸ்' அமைப்பின் கல்வி மாவட்ட அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்களுக்கான மாநில மாநாடு சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு மாநில கிளை தலைவர் ஹரீஸ் எல்.மேத்தா தலைமை வகித்தார். மாநாட்டை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ரெ.இளங்கோவன் தொடங்கி வைத்துப் பேசியது:-
சமூகத்தைப் பாதுகாக்கவும், பிறருக்கு உதவும் நோக்கம் வேண்டும் என்ற கொள்கையோடும் செயல்பட்டு வருகிறது இளஞ்செஞ்சிலுவை சங்கம். மாணவர்களை நல்வழிபடுத்துவதில் இந்தச் சங்கத்தின் பணி அளப்பரியது. ஆசிரியர்கள் இதில் முக்கிய பொறுப்பேற்று செயல்பட வேண்டும். பள்ளிகளில் செயல்பட்டு வரும் ஜேஆர்சி அமைப்பு மாணவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் இந்த அமைப்பை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கல்வி இணைச் செயல்பாடுகளில் மாணவர்களைச் சேர்ப்பதில் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும் ஜே.ஆர்.சி. அமைப்பை தொடங்குவது குறித்து தொடர்புடைய கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றார்.
இதில் இளஞ்செஞ்சிலுவை சங்க மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் உள்பட 68 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டு பேசினர்.
குரூப் - 4 பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு...
சென்னை, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வு எழுதியவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, செயலர் விஜயகுமார், வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் - 4 பதவியில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் மற்றும்
தட்டச்சர் பதவிகளுக்கு, 2016 நவ., 6ல், எழுத்து தேர்வு நடந்தது. இதற்கான முடிவுகள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.அதில், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையாளர் பதவிகளுக்கு, 53 காலியிடங்களை நிரப்ப, 28 முதல், மார்ச், 1 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். தட்டச்சர் பதவியில், 15 காலியிடங்களை நிரப்ப, மார்ச், 1, 2ல், சான்றிதழ் சரிபார்க்கப் படும். இதற்கான கடிதங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)