செண்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், வரும் கல்வி ஆண்டு முதல், பி.எட்., படிப்பு அறிமுகமாகிறது. முதல் ஆண்டில், 500
இடங்களில், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
சென்னை பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளின் பிரதிநிதிகள் அடங்கிய, கல்வி கவுன்சில் கூட்டம், துணை வேந்தர், துரைசாமி தலைமையில், பதிவாளர், சீனிவாசன் முன்னிலையில், நடந்தது.இதில், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கான விதிகள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகள் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் கல்வி ஆண்டில், சென்னை பல்கலையில், பி.எட்., கல்வியியல் படிப்பு அறிமுகப்படுத்தவும், கல்விக்குழு ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து, துணை வேந்தர், துரைசாமி கூறியதாவது.பல்கலையால் நடத்தப்படும், 58 வகை முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு, பாடத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
அனைத்து முதுநிலை படிப்பிலும், விருப்ப பாடப்பிரிவை தேர்வு செய்யும், 'சி.பி.சி.எஸ்., கிரெடிட்' மதிப்பெண் முறை செயல்படுத்தப்படும்.
தமிழ் துறையில், தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம்; தமிழ் இலக்கிய படிப்புகள் என, இரண்டு பிரிவுகளாகவும், இயற்பியலில், அணு இயற்பியல் மற்றும் கருத்தியல் இயற்பியல் என, இரண்டு பாடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மத்திய அரசின், பல்கலை மானியக் குழு அனுமதியுடன், பட்டம், சான்றிதழ் மற்றும், 'டிப்ளமா' படிப்புகள், 'ஆன்லைனில்' நடத்தப்படும்.
'மூக்' என்ற ஆன்லைன் படிப்புகள், 'ஸ்வயம்' இணையதளம் வழியாக, சென்னை பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் அறிமுகம் செய்யப்படும். ஆன்லைன் படிப்புக்கான சிறப்பு மையம், சென்னை பல்கலையில் அமைக்கப்படும்.
அனைத்து முதுநிலை படிப்புகளும், மூன்று வழிகளில் நடத்தப்பட உள்ளன. நேரடியாக பல்கலைகளிலும், தொலைநிலை கல்வியிலும், ஆன்லைன் முறையிலும், அறிமுகம் செய்யப்படும். இதனால், ஏதாவது ஒரு பாடத்தை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்தும், மாணவர்கள் படிக்கலாம்.
இதுகுறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், தொலைநிலை கல்வி மாணவர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.வரும் கல்வி ஆண்டு முதல், சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பி.எட்., படிப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக, தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி பெறப்பட்டு உள்ளது. முதல் ஆண்டில், 500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். முதற்கட்டமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையின் பாடத்திட்டத்தில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக