செவ்வாய், 17 டிசம்பர், 2019

டிசம்பர் 17,
வரலாற்றில் இன்று.

வில்லியம் தாம்சன் நினைவு தினம் இன்று.

தாம்சன் (சூன் 26 1824 - டிசம்பர் 17, 1907 )அயர்லாந்தைச் சேர்ந்த இவர்  இயற்பியல் அறிஞர்  ஆவார். இவரே இலார்டு கெல்வின் என்றழைக்கப்பட்டார். இவர் 19-ஆவது நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

 மின்காந்தவியல், வெப்பவியல் என பலதுறைகளில் சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்ப அளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்து அது குறித்த ஆய்வுகள் நடத்தினார். இவர் பணியாற்றிய ஸ்காட்லாந்தில் உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையை, இவர் நினைவாக கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

வில்லியம் தாம்சன் 1824 ஆம் ஆண்டு சூன் 26 ஆம் நாள் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். இவர் தந்தையார் சேம்சு தாம்சன் ஒரு பயிர்த்தொழிலாளரின் மகன், இவரின் தாயார் மார்கரெட்டுத் கார்டனர். இப்பெற்றோர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இவர்களுள் சேம்பசு தாம்சனும் அவருடைய அண்ணன் சேம்சும் முதலில் வீட்டிலேயே அவர்களின் அக்காவால் பயிற்றுவிக்கப்பெற்றனர். பின்னர் வில்லியம் தாம்சன் இலண்டன் நகரிலும், பாரிசிலும், இடாய்ச்சுலாந்திலும், நெதர்லாந்திலும் பன்மொழிகள் கற்றனர். மொழிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. வில்லியம் தாம்சன் கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுப் பிற்காலத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியியல் கல்விக்கழகத்தில் பணிபுரிந்தார். கேம்பிரிட்சில் சேர வில்லியம் தாம்சனின் தந்தை நிறைய பணவுதவி முதல் நல்ல பரிந்துரை மடல்கள் பெறுவது வரை பல உதவிகள் செய்தார். வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler)ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். அதன் பின் 1846 -இல் கிளாசுக்கோ(Glasgow) நகரில் இயல் தத்துவப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார்.

ஆரம்பத்தில் மின்காந்தவியலில் ஆய்வுகள் செய்து இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires)அமைத்து வெற்றியடையச் செய்ய இவர் முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி(Zero point) (O K)-273 °C ஆக அமைக்கப்பட்டது. வெப்பவியலிலும், வானவியலிலும் இது அருஞ்சாதனையாகும்.

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போல திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். வெப்பவியலில் இவருக்கு இருந்த திறமை காரணமாகவே இக்கணிப்பினை இவர் நிகழ்த்தினார். சூரியனின் அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

அரிய சாதனைகள் புரிந்த கெல்வின் 1907 டிசம்பர் மாதம்  17-ஆம் நாள் மறைந்தார். இவரைப் பெருமைப் படுத்தும் விதமாக இவருடைய உடல் சர் ஐசக் நியூட்டனின் சமாதி அருகே புதைக்கப்பட்டது.