வெள்ளி, 5 ஜூன், 2020

*🌐ஜூன் 5,வரலாற்றில் இன்று:ஹோலோகிராபி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஹங்கேரி விஞ்ஞானி டென்னிஸ் கபார் பிறந்த தினம்.*

ஜூன் 5, வரலாற்றில் இன்று.

ஹோலோகிராபி தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த ஹங்கேரி விஞ்ஞானி டென்னிஸ் கபார் (Dennis Gabor) பிறந்த தினம் இன்று.

 ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் (1900) பிறந்தவர். இளம் வயதில் இருந்தே அறிவியல் பரிசோதனைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சகோதரருடன் சேர்ந்து வீட்டிலேயே சோதனைக் கூடத்தை அமைத்து, எக்ஸ் கதிர்கள், கதிரியக்கம் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

 இறை நம்பிக்கையோடு வளர்ந்தவர், பிற்காலத்தில் தன்னை நாத்திகவாதி என்று கூறிக் கொண்டார். முதல் உலகப் போரின்போது, வட இத்தாலியில் ஹங்கேரி நாட்டு பீரங்கிப் படையில் பணிபுரிந்தார். பெர்லினில் உள்ள சார்லோட்டன்பர்க் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பயின்றார்.

 கேதோடு கதிர் ஆஸிலோகிராப்பை பயன்படுத்தி உயர் மின்னழுத்தக் கம்பிகளின் பண்புகளை ஆராய்ந்தார். இதன்மூலம், எலக்ட்ரான் ஒளியியலில் அவரது ஆர்வம் திரும்பியது. ஆஸிலோகிராப், எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப், டிவி கதிர் டியூப்கள் ஆகியவை பற்றியும் தீவிரமாக ஆராய்ந்தார்.

 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். யூதரான தான், ஜெர்மனியில் இருப்பது ஆபத்து என்று, அங்கிருந்து வெளியேறினார். பிரிட்டிஷ் தாம்சன் ஹூஸ்டன் நிறுவனத்தின் வளர்ச்சித் துறையில் பணியாற்றுமாறு வந்த அழைப்பை ஏற்று 1933-ல் இங்கிலாந்து சென்றார்.

 இங்கிலாந்து பெண்ணான மர்ஜோரியை 1936-ல் திருமணம் செய்துகொண்டு 1946-ல் பிரிட்டன் குடியுரிமை பெற்றார். முப்பரிமாண ஒளிப்படவியலை (Holographic Photography) 1947-ல் கண்டறிந்தார். ஆனால், 1960-ல் லேசர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இது வெளியிடப்பட்டு, வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்கு வந்தது.

 ஹோலோகிராபி என்பது ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களை அதன் வெவ்வேறு தோற்ற வகைகளில் பதிவு செய்து, அப்பொருளின் அசைவுகளை முப்பரிமாண (3D) தோற்றத்தில் காட்டும் தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பம் மேட்ரிக்ஸ், அவதார் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டது.

 ரகசிய தகவல் சேகரிப்புகளுக்கு சிறந்த பாதுகாப்பு முறையாகவும், ஓவியக் கலையில் மெருகூட்டல் சம்பந்தமான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கலப்படத்தை தடுக்க பெருங்காய டப்பா, பனியன் தொடங்கி பதிவுப் பத்திரங்கள் வரை ஹோலோகிராபிக் ஸ்டிக்கர்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.

 தன் ஆராய்ச்சியை ‘ரீ-ஹோலோகிராபி’ என்ற பெயரில் தீவிரமாக்கி, தொடர்ச்சியாக பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

 ‘இன்வென்டிங் தி ஃப்யூச்சர்’ என்ற நூலை 1963-ல் வெளியிட்டார். லேசர்கள் குறித்த ஆராய்ச்சிகள் வளர்ச்சி அடைந்ததால், ஹோலோகிராபிக் முப்பரிமாண ஸ்டிக்கர்களும் தயாரிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்தன. ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக 1971 ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

 எண்ணற்ற விருதுகள், பல பல்கலைக்கழகங்களின் கவுரவ டாக்டர் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட ஹோலோகிராபியைக் கண்டுபிடித்த டென்னிஸ் கபார் 79ஆவது வயதில் (1979) காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக