வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

2016-ம் ஆண்டை விட குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2018-ல் அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்...

2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த குற்றங்களைக் காட்டிலும், 
2018-ம் ஆண்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.


அப்போது அவர் பேசியதாவது:

''கடந்த 2016-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக 1 லட்சத்து 6 ஆயிரத்து 958 குற்றங்கள் நடந்தன. இது 2017-ம் ஆண்டில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 32 குற்றங்களாக உயர்ந்தன. 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 குற்றச்சம்பவங்களாக அதிகரித்துள்ளன.

இருப்பினும் குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தடுப்புச் சட்டம் (போக்ஸோ) கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி திருத்தங்கள் செய்யப்பட்டு கடுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கம், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் 2018-ம் ஆண்டில் நடந்த குற்றங்கள் குறித்துத் தெளிவான விவரங்கள் வழங்கப்படவில்லை".

இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்த்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக