அனைத்து பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளதால், பொதுத் தேர்வு எழுத உள்ள, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசு தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத, சில தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், அவர்களை, அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டிய நிலை உள்ளதாகவும், 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகள் பரவுகின்றன.
இது குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் மெட்ரிக் அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளே கிடையாது. அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் உள்ளது.
எனவே, வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுத் தேர்வு எழுதும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அச்சமின்றி தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்றனர்.