இன, நிற, மத, மொழி வேறுபாடில்லாமல் உலகம் முழுவதுமுள்ள மக்களால் ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் முதல் தினம் ஆங்கிலப் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த புத்தாண்டு எப்படி வந்தது என்று கேட்டால் நம்மில் பலரிடம் பதில் இல்லை. வருடத்தின் புதிய தினத்தை வரவேற்கும் நாம், அந்த தினம் எப்படி தோன்றியது என்பதன் வரலாற்றை பற்றியும் தெரிந்து கொள்வோம்.
*மெசபடோனியர்களின் புத்தாண்டு*
ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங்களாகத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தது. மார்ச் மாதம் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதி ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தது. இயேசுவின் தாய் மேரி கர்ப்பமுற்ற தேதி என்பதால் இந்த நாளை புத்தாண்டு தினமாக அனுசரித்தனர்.
*ரோமானியர்களின் புத்தாண்டு*
சூரியனின் நகர்வினை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர்களின் காலண்டரின் மார்ச் 1 ம் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடத் தொடங்கினர். ரோமானிய மன்னர்களில் ஒருவரான, நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்கள் வைத்தனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அந்த முறைதான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.
*ஜீலியன் காலண்டர்*
ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது.
*புத்தாண்டு தினத்தில் நிலவிய குழப்பம்*
இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவியது.
*கிரிகோரியன் காலண்டர்*
கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். இதனையடுத்து உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை நடைமுறைக்கு வந்தது.
*புதிதாய் பிறந்த புத்தாண்டு கிரிகோரியன்*
காலண்டர் முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. அதன் முதல் கடந்த 500 ஆண்டுகளாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினமாக உலகம் முழுவதுமுள்ள மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
*அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்...*