வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு...
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி!
ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா? மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.
ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார்.
நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.
இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள் என்ற அறிவிப்புக் கொடுத்தார்.
விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.
65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், அ.தி.மு.க. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே! மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!
இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!
அ.தி.மு.க. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!
பாதிக்கப்படுவோர் யார்?
இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்? இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோ, செல்வந்தர்களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்
ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
(20-04-2018)