புதன், 9 மே, 2018
ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஒத்திவைப்பு...
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மே8 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.
அடுத்தகட்ட போராட்டம் குறித்து திருச்சியில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் முரண்பாடுகளைக் களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ - ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சென்னையில் செவ்வாய்க்கிழமை கோட்டையை முற்றுகையிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காவல் துறையினர் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டமும் கைது நடவடிக்கைகளும்...:
சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், தலைமைச் செயலகம் செல்லக் கூடிய சாலைகளான அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் நூற்றுக்கணக்கான போலீஸார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட முயன்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களை கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது, பெண் ஊழியர்கள் உள்பட பலரும் வேனில் ஏற மறுத்தனர். அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்த போலீஸார், வேனில் ஏற்றினர். இந்தப் போராட்டத்தால், வாஜாலா சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பேருந்துகளும், இதர வாகனங்களும் வேறு திசையில் திருப்பி விடப்பட்டன.
சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்கவைத்தனர். அதேபோல், காமராஜர் சாலையில், எழிலகம்-சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து ரயில்களில் வந்தவர்களையும் கைது செய்து சமூக நலக்கூடம், மதரசா பள்ளி, மாநிலக் கல்லூரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர். இதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திறங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பலரை காவல்துறையினர் கைது செய்து அருகில் இருந்த சமூக நலக்கூடங்களில் தங்கவைத்தனர்.
மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்த போராட்டம் காரணமாக தலைமைச்செயலகம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகளை வைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கை பிற்பகல் வரை நீடித்தது. இப்போராட்டத்தில் சென்னையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் ஒத்திவைப்பு:
இதனிடையே சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தங்க வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர்.
செவ்வாய், 8 மே, 2018
JacttoGeo போராட்டம் எதிரொலியாக தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னைக்குள் நுழைவதை தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்துக்கு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்
தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்றும் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் கைது நடவடிக்கை தொடர்கிறது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக JacttoGeo அறிவித்ததன் எதிரொலியாக தலைமை செயலகம் அமைந்துள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம்
தலைமை செயலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு...
அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு...
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்து இருந்தார். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியலை வெளியிட்டு, இது தமிழக அரசின் வரி வருவாய் தொகையில் 70 சதவீதம் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் இரா.சண்முகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை(விளம்பரம்) அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய மன உளைச்சலையும், அதிருப்தியையும் உருவாக்கி உள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில், 'அரசு அலுவலர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை திட்ட செலவினமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர வருவாய் செலவினமாக கருதக்கூடாது' என்று தெளிவாக கூறி உள்ளார். இதனை முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் வழிமொழிந்து உள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பின் செய்தி தொடர்பாளார் கு.தியாகராஜன் கூறும்போது, 'எங்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் 15 முதல் 20 சதவீதம் தான். ஆனால், கடந்த ஆண்டு எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பளத்தை 55 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். இது அவர்கள் சம்பளத்தில் 100 மடங்கு அதிகமாகும். அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதுக்கு கட்சித்தலைவர்கள் கண்டனம்...
மாநிலம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்களின் போராட்டத்தை களைய வேண்டுமானால், அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அமைச்சரோ, முதல்-அமைச்சரோ பேச்சு நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாத தமிழக அரசு மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
அரசு ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுப்பதால் தான் அரசு கடன் சுமையில் சிக்கியிருப்பதை போன்றும், அதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதை ஏற்க முடியாது. அரசு ஊழியர் ஊதியம் உயர்த்தப்பட்டது பிரச்சினையில்லை. அதற்கு இணையாக அரசின் வருமானத்தை உயர்த்தாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகும்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு, அரசின் தோல்வியை அதிகாரிகள் மீது சுமத்தி சிக்கலை திசைதிருப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே வீணாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விடுத்து, அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
'மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பு தலைவர்களை இரவோடு இரவாக கைது செய்து உள்ளனர். போராட்டத்துக்கு வந்து கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாகனங்கள் வழியிலேயே பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் பலர் அடைத்து வைக்கப்பட்டுள்ள கொடுமை நடைபெற்று வருகிறது. இத்தகைய அரசின் மோசமான நடவடிக்கைகள் அரசின் ஆணவ போக்கையே காட்டுகிறது. எனவே இதனை தவிர்த்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த நிலையில், திடீரென முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனை த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேலும், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)