செப்டெம்பர் 11, வரலாற்றில் இன்று.
மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று(1921).
கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன்.
1882ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11ஆம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.
தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர்.
இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்கர் மன்னர் வழங்கினார். அன்று முதல் பாரதி என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.