*🚗வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.*
*புது தில்லி: வாகனங்களில் ஃபாஸ்டேக் பொருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, வாகனங்களின் கண்ணாடியில் அந்த வில்லைகள் பொருத்தப்படும்.*
*அதில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்குக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, 'ஃபாஸ்டேக்' வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.*
*இந்த நடைமுறை ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. எனினும், சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பயணிப்பதற்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.*
*மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுப் பேசுகையில், ''வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. 'ஃபாஸ்டேக்' நடைமுறையால் சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு எரிபொருளும் சேமிக்கப்படும்'' என்றாா்.*
*அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது நடைமுறைக்கு வரவிருந்த நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.*
*அனைத்து சுங்கச் சாவடிகளிலும் இணையவழியிலும் வங்கிகள் வாயிலாகவும் 'ஃபாஸ்டேக்' வில்லையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.*