*🏮இன்று முதல் வாகனங்களுக்கு FASTag கட்டாயம்... தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்?!*
*இன்று(16.02.2021) முதல் இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் FASTag கட்டாயமாக்கப்பட்டுள்ளது. FASTag இல்லாத வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு சுங்கச்சாவடியில் ஒரு காருக்கு 55 ரூபாய் கட்டணம் என்றால் FASTag இல்லாத வாகனங்கள் 110 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். அதனால் நான்கு சக்கரம் மற்றும் அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் FASTag ஸ்டிக்கரைத் தங்கள் வாகனங்களில் அவசர அவசரமாகப் பொருத்திவருகிறார்கள்.*
*1. RFID எனப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாளத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த FASTag அட்டைகளை, காரின் விண்ட்ஷீல்ட்டில் ஒட்ட வேண்டும். டோல்பிளாசாக்களின் அருகே, அதாவது 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, அங்கேயுள்ள ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பச் சாதனம், FASTag மூலம் வாகன விவரங்களை சில நொடிகளில் ரீட் செய்து, வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். இதனால் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கவேண்டிய அவசியமோ, சில்லறைக்காக காத்திருக்கவேண்டிய அவசியமோ இல்லை.*
*2. மொபைல் ரீசார்ஜ் போல, FASTag அட்டைக்குக் குறைந்தபட்சம் நூறு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பத்தாயிரம் வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பல்வேறு தனியார் வங்கிகள், PAYTM உள்ளிட்ட வாலட்கள் மூலமும் இந்த FASTag அட்டைகளைப் பெறலாம். சுங்கச்சாவடியைக் கடந்து பணம் டெபிட் செய்யப்பட்டதும் எஸ்எம்எஸ் மூலம் எவ்வளவு ருபாய் எடுக்கப்பட்டது என்கிற விவரம் வந்துவிடும்.*
*3. வாகனத்தில் FASTag இருக்கிறது. ஆனால், சுங்கச்சாவடியில் அது வேலை செய்யவில்லை என்றால் அங்கேயிருக்கும் RFID ரீடரில் பிரச்னை இருக்கலாம். இதுபோன்ற நேரங்களில் வாகன ஓட்டுநர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்காமல் அவர்களை வெளியேசெல்ல அனுமதிக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.*
*4. சில டோல் பிளாஸாக்களில் ஸீரோ டோல் நடைமுறையில் உள்ளது. உதாரணத்துக்கு சென்னை மேடவாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலைக்கு செல்லவேண்டும், அல்லது கிழக்கு கடற்கரைச் சாலையில் இருந்து மேடவாக்கம் செல்லவேண்டும் என்றால் அதற்கு ஸீரோ டிக்கெட் வாங்கினால் போதும். கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. 25 நிமிடங்களுக்குள் ஒரு டோலில் இருந்து இன்னொரு டோலை அந்த வாகனம் கடந்துவிடவேண்டும் என்பது விதி. ஆனால், இப்போதைய FASTag முறையில் பணம் செலுத்தும் வழியில் வந்தால் மட்டுமே இந்த ஸீரோ டிக்கெட் முறை செல்லும். FASTag லைனில் வந்தால் கட்டணம் தானாக டிபெட் ஆகிவிடும்.*
*5. நாம் ஒரு பயணம் மேற்கொள்கிறோம் என்றால் அதற்கு ஏற்றபடி FASTag ஆக்டிவேட் செய்துவைத்திருக்கும் அக்கவுன்டில் பணத்தை பேலன்ஸ் வைத்திருக்கவேண்டும். நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 46 கிமீட்டருக்கும் ஒரு டோல் கேட் இருக்கிறது. கார்களைப்பொருத்தவரை 50 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரை டோல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு தங்கநாற்கரச் சாலையைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூரு சென்றால் டோல் கட்டணம் கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை ஆகும். இதற்கு ஏற்றபடி அக்கவுன்ட்டில் பேலன்ஸ் வைத்திருந்தால் மட்டுமே FASTag வேலை செய்யும். இல்லையென்றால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.*