புதன், 26 மே, 2021
கொரோனா முன்களப்பணியாளர் கட்டாயப்பணியில் இருந்து ஆசிரியப் பெருமக்களை விடுவித்து பாதுகாத்திடுங்கள்! தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!
கொரோனா முன்களப்பணியாளர் கட்டாயப்பணியில் இருந்து ஆசிரியப் பெருமக்களை விடுவித்து பாதுகாத்திடுங்கள்!
தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது!
----------------------------------------
கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசின் சீரியச் செயல்பாடுகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது!பெருநன்றி பாராட்டுகிறது!
தமிழக அரசின் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கும், சீரியச் செயல்பாடுகளுக்கு ஆக்கப்பூர்வமான வழிமுறைகளில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஒத்துழைக்கிறது! ஆதரவளிக்கிறது!
தமிழ்நாட்டின் ஆசிரியப் சமுதாயத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையிலான உணர்வு பூர்வமான,
மிக இணக்கமான நட்புறவினை பாழ்படுத்திடும் வகையில் ,
சீரழித்திடும் வகையில், சிண்டு முடிந்து விட்டு வேடிக்கை காணும் மனநிலையில்
ஒரு சில சக்திகளால் அவ்வப்போது வெவ்வேறு வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு தமிழ்நாட்டின் ஆசிரியப் பெருமக்கள் பெரும் பதட்டத்திற்கும்,
மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுவது பெருங்கவலை அளிக்கிறது
கொரோனாக்காலத்தில் பள்ளி ஆசிரியர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஏதாவது ஒருவகையில் உள்ளாக்குவது சிறந்த செயலாகாது. இத்தகு விசமத்தனமான நடவடிக்கைகளில் இருந்து பள்ளி ஆசிரியப்பெருமக்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகின்றனர்.
இத்தகு நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கொரோனாத்தடுப்புப் பணியில் முன்களப்பணியாளர்களில் ஒருவராக பள்ளி ஆசிரியப்பெருமக்களை வரையரைச் செய்துக்கொண்டு கூடுதல் பணிக்கு நியமனம் செய்து இருப்பது கடும் அதிருப்தி அளிக்கிறது.பேரதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் தடுப்புப் பணிகளின் முன்களப்பணியாளர் கூடுதல் பணிகளில் இருந்து பள்ளி ஆசிரியப் பெருமக்களை முழுமையாக விடுவித்து ஆசிரியப்பெருமக்களை பாதுகாத்திடல் வேண்டும்.
தமிழ்நாட்டின் பள்ளி ஆசிரியப்பெருமக்களுக்கு ஏற்ற பொருத்தமான பணிகளில் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளி ஆசிரியப் பெருமக்களை கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ளத் தக்க வகையில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் வழிகாட்டுதல் செய்து உதவிடுமாறு தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகிறது.
இவண்,
முனைவர்-மன்றம்
நா.சண்முகநாதன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
புதுக்கோட்டை
25.05.2021