வியாழன், 28 அக்டோபர், 2021
புதன், 27 அக்டோபர், 2021
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்று தொடக்கம்: மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
Join us live on the ILLAM THEDI KALVI inauguration by the Honorable Chief Minister of Tamil Nadu live at 04:30 PM today!
Link on Facebook - illamthedikalvi.tnschools.gov.in/fblive
Link on YouTube - illamthedikalvi.tnschools.gov.in/ytlive
Link on Twitter - twitter.com/SEDTamilNadu
மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய ரூ.200 கோடியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் இன்று தொடக்கம்: மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார்குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக்குழந்தைகளின் கற்றலில்ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் (எஸ்எஸ்ஏ) சார்பில் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, எஸ்எஸ்ஏ திட்ட இயக்குநர் இரா.சுதன், கூடுதல் திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஆகியோர் நேற்று விவரித்தனர். அப்போது சுதன் கூறியதாவது:
குழந்தைகளின் கற்றல்இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ‘இல்லம் தேடி கல்வி’திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் மகிழ்ச்சியான முறையில் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.
இப்பணியில் ஈடுபட விருப்பம் உள்ளவர்கள் illamthedikalvi.tnschools.gov.in என்றஇணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதுவரை 44 ஆயிரம் பெண்கள் உட்பட 60 ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.
சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி, நீலகிரி,மதுரை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறும்போது, ‘‘மரக்காணம் அருகே உள்ள முதலியார்குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்27-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்கிறார்’’ என்றார்.
இல்லம் தேடிக் கல்வி :வரவேற்கலாமா?இந்து தமிழ்திசை கட்டுரை.
இல்லம் தேடிக் கல்வி: வரவேற்கலாமா?
நன்றி:இந்துதமிழ்திசை
மார்ச் 20, 2020, கரோனா பெருந்தொற்று காரணமாகத் திடீரென்று மூடப்பட்டன பள்ளிகளின் கதவுகள். வரும் நவம்பர் 1-ம் தேதி, மீண்டும் திறக்கப்படவுள்ளன அக்கதவுகள். சொல்லொணாத் துயரங்களோடு வீடுகளில் அடைந்து கிடந்த குழந்தைகள், பள்ளி நோக்கி ஆர்ப்பரித்து வரவிருக்கின்றனர். பள்ளி விடுமுறை என்றால் பேரானந்தம் அடையும் சிறார்கள், முதல் முறையாகப் பள்ளித் திறப்பைக் கண்டு பேரானந்தத்தோடு பள்ளி நோக்கி ஓடி வரவிருக்கின்றனர்.
அதே நவம்பர் 1 அன்று, ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற திட்டமும் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டம், கரோனாவால் முற்றாகக் கல்வியை இழந்து தவிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறார்களுக்கானது. அந்த இழப்பை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. பள்ளி நேரம் முடிந்த பிறகு, மாலைப் பொழுதில், வாரத்தில் ஆறு மணி நேரம். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல், தன்னார்வலர்கள் வழியாகக் குடியிருப்புப் பகுதிகளில் கற்றல் இணை செயல்பாடுகளை முன்னெடுக்கவிருக்கிறார்கள். இடைநிற்றல் விளிம்பில் நிற்கும் 1.41 லட்சம் குழந்தைகளை, ஒருவர்கூட விடாமல் பள்ளியில் சேர்த்தல். கற்றல் இடைவெளியைக் குறைக்கப் பாடல்கள், புதிர் விளையாட்டுகள், விடுகதைகள், விளையாட்டு வழிக் கணிதம், எளிய அறிவியல் பரிசோதனைகள் என ஆறு மாதங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். 34 லட்சம் அரசுப் பள்ளிக் குழந்தைகள், 20 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற வீதத்தில், 1.70 லட்சம் தன்னார்வலர்களையும் கூடவே தொண்டு நிறுவனங்களையும் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரசுப் பள்ளிக் குழந்தைகளை மையப்படுத்தி இத்திட்டம் உருவாக்கப்பட்டாலும், மையங்கள் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பங்குபெற்றுப் பயன் பெறலாம் என்பது இதன் சிறப்பு.
இது ஒரு ஆறு மாதச் செயல்திட்டம். இதற்கான திட்டச் செலவு ரூ.200 கோடி. இந்த நிதியாண்டின் வரவு-செலவு அறிக்கையில், இத்திட்டத்துக்கான தேவையும் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ‘‘அரசின் இந்தத் திட்டம், ‘இல்லம் தேடிக் கல்வி’ அல்ல ‘இல்லம் தேடிப் புதிய கல்விக் கொள்கை’ ’’ என்று விமர்சிக்கப்படுகிறது.
ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர்... ஒரு வகுப்புக்கு ஒரு வகுப்பறை. ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர். தேவையான உள்கட்டமைப்பு வசதிகள். இவையே தரமான பள்ளிக் கல்வியின் அஸ்திவாரம். அத்தோடு அனைவருக்கும் சமமான, தரமான கல்வி என்பது சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுப் பள்ளி, அருகமைப் பள்ளி முறையிலேயே சாத்தியம் ஆகியிருக்கிறது. போட்டியால் தரம் உயரும் என்ற சந்தை விதி, கல்விக்குப் பொருந்தாது என்று அமர்த்தியா சென் உட்படப் பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனை நோக்கி நகர வேண்டும்.
பல மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழ்நாடு மேம்பட்டு இருந்தாலும், அனைவருக்கும் தரமான, சமமான பள்ளிக் கல்வியை நோக்கிப் பயணிக்க இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கற்றல் செயல்பாடுகளிலிருந்து முற்றாகத் தூக்கி எறியப்பட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகள் ஒருபுறம். பள்ளி வளாகத்துக்கு நேரில் வர இயலாமல் பெரும் பகுதி கற்றல் அடைவுகளை இணையவழித் தொடர்புகள் மூலம் பெற்றுவிட்ட குழந்தைகள் மறுபுறம். இப்படியான சம வயது, சம வகுப்புக் குழந்தைகள் மத்தியில் ஏற்பட்டுள்ள, கற்றல் இடைவெளியை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஈடுசெய்ய முடியாதோ என்ற அச்சம் எழுகிறது.
இந்தச் சூழலில், கற்றல் இடைவெளியைக் குறைக்க, தமிழ்நாடு அரசின் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் வரவேற்கப்பட வேண்டியதே. 18 மாதங்கள், கல்வி இல்லை என்ற பெரும் பட்டினியோடும் பெரும் பசியோடும் குழந்தைகள் பள்ளிக்கு வர இருக்கிறார்கள். இதனை ஈடுசெய்ய, மாலை நேரங்களில் இன்னும் இரண்டு கவளம் கல்வியை, ஏதோ ஒரு பெயரில், ஏதோ ஒரு நிதியிலிருந்து கொடுத்தால் என்ன என்றே மனம் அரற்றுகிறது.
‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ மத்திய அரசின் திட்டமான சமக்ர சிக்ஷா அபியான் நிதியின் மூலம் நடைமுறைக்கு வருவதாக இருக்கலாம். அந்தத் திட்டம் ‘புதிய கல்விக் கொள்கை’ என்ற தாம்புக் கயிற்றில் கட்டப்பட்டிருக்கலாம். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபட அத்திட்டத்தைச் சமயோசிதமாகப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை, இது மாநில அரசின் சொந்த நிதி என்றால், அதை மக்களுக்கு அரசு தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
திட்டத்தின் தொடக்கப் புள்ளி, கரோனா பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் செயல்திட்டம் என்ற நிலையிலிருந்து விலகி, புதிய கல்விக் கொள்கையை அமலாக்கம் செய்வதாக இத்திட்டம் ஆகிவிடாமல் அரசு கவனமாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் அமலாக்கத்தில் அரசுடன் இணைந்து செயல்பட்டுவரும் அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெரும்பாலும் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பவை. இயக்கங்கள் நடத்தியவை. கற்றல் செயல்பாடுகளை ஈடுசெய்ய அரசுக்கு உறுதுணையாக இருப்பவை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நூற்றாண்டின் பேரவலம் கரோனா பெருந்தொற்று. கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத இழப்புகளை ஈடுசெய்ய, இதுவரை நடைமுறையில் இல்லாத செயல்திட்டம், உத்திகள் தேவைப்படுகின்றன. அப்படியான ஒரு தற்காலிகச் செயல்திட்டமே ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம். இந்தத் திட்டப் பெயரில் சிறிது அலங்காரம் இருக்கலாம். ஆனால் அரசின் நோக்கத்தில், செயல்திட்டத்தில் அலங்காரம் இல்லை; கரோனா பாதிப்பிலிருந்து தமிழ்நாட்டுக் கல்வியை மீட்டெடுக்க வேண்டும் என்கிற ஏக்கம்தான் இருக்கிறது.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் பிற இளைஞர்களும் இத்திட்டத்தில் தன்னார்வலர்களாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, கல்வி இழப்பை ஈடுசெய்வதற்கு அவர்கள் ஒன்றாக இணைய வேண்டும். ஆசிரியர்கள் அவர்களைத் தோழமையோடு அரவணைத்து உற்சாகமூட்டிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மாலை நேர வகுப்புகள் பள்ளிகளுக்கு நிகரானவை என்று கருதத் தேவையில்லை. ஏனெனில், ‘ஆசிரியருக்கு நிகர் ஆசிரியரே... பள்ளிக்கு நிகர் பள்ளியே!’ என்பதைக் கற்றல் இன்மைக் காலமும் இணையவழிக் கற்றலும் நிரூபித்து வருகின்றன.
- நா.மணி,
பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
செவ்வாய், 26 அக்டோபர், 2021
வடகிழக்கு பருவ மழை காரணமாகப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரின் கடிதம்
வடகிழக்கு பருவ மழை காரணமாகப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலரின் கடிதம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)