செவ்வாய், 18 ஜனவரி, 2022
திங்கள், 17 ஜனவரி, 2022
கிரீமிலேயர் : ஊதியத்தையும் கணக்கில்சேர்க்கும் முடிவு கைவிடப்பட்டது வெற்றி !வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்!-டாக்டர் ராமதாஸ்.
ஞாயிறு, 16 ஜனவரி, 2022
சனி, 15 ஜனவரி, 2022
ஜல்லிக்கட்டு எனும் திருவிழா
ஜல்லிக்கட்டு எனும் திருவிழா பெருமாள்முருகன் 15 Jan 2022 ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறைவான பார்வையாளர்களைக் கொண்டு நடத்த வேண்டும் என்பது குறிப்பான விதி. இருக்கைகளில் 50% இருக்கலாம் அல்லது 150 பேரைக் கொண்டிருக்கலாம் என்கிறது அரசு விதி. பண்பாட்டு நிகழ்வு ஒன்று அர்த்தம் பெறுவது பார்வையாளர்களால்தான். திறந்தவெளியில், பரந்த நிலப்பரப்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டைப் பார்வையாளர்கள் இல்லாமல் கற்பனைசெய்து பார்ப்பதே சிரமம். உண்மையில் இத்தகைய நிகழ்வுகளில் பார்வையாளர்கள் என்று தனிப் பிரிவே கிடையாது. எல்லோருமே பங்கேற்பாளர்கள். ஜல்லிக்கட்டு நிகழ்வுக்குக் கூடும் கூட்டத்தில் இருப்பவர்கள் யார் என்று பார்த்தால் இது விளங்கும். போட்டியில் பங்கேற்கும் காளையுடன் அதன் உரிமையாளரும் அவர் உறவினர்களும் அவர் ஊரைச் சேர்ந்தவர்களும் எனப் பலர் வருவர். அந்தக் காளை போட்டியில் பங்கேற்பது ஊருக்கான கௌரவமாகிறது. மாடுபிடி வீரர்கள் வரும்போது அவர்களை ஊக்குவிக்க உடன் ஒரு கூட்டம் வருகிறது. ஒரு வீரர் பங்கேற்பது என்பது அவர் சார்ந்த ஊரே பங்கேற்பதாகும். எவ்வூரில் நடைபெறுகிறதோ அவ்வூரைச் சேர்ந்தவர்களுக்கும் சுற்று வட்டார ஊரார்களுக்கும் ஜல்லிக்கட்டு என்பது சாதாரணப் போட்டி அல்ல, திருவிழா. அதன் ஒவ்வொரு அம்சத்திலும் மக்கள் பங்கேற்பு இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் திருவிழாக் காலத்து வியாபார ஸ்தலமாகவும் மாறுகிறது. உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், விவசாயம் சார்ந்த கருவிகளும் மாடு பராமரிப்புக்கான பொருட்களும் விற்கும் கடைகள் நிறைந்த பெரும் சந்தை அது. எனினும் பார்வையாளர்கள் கூடாது என்பதற்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் வரவில்லை. காரணம் உள்ளூர் மக்கள் வருகையை எக்காரணத்தாலும் தடுக்க முடியாது என்பது அரசுக்கும் தெரிந்திருக்கிறது; மக்களுக்கும் புரிந்திருக்கிறது. வெளியூர் மக்கள் வருகை மட்டும் ஓரளவு பாதிக்கக் கூடும். இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். பொங்கல் திருநாள் என்பது எல்லாப் பகுதிகளிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது. சிற்றூர்ப் புறங்களில் பலவகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் இத்திருநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள். மாடு சார்ந்தும் ஜல்லிக்கட்டு என்னும் ஒரே ஒருவகை நிகழ்வு மட்டும் நடப்பதில்லை. பொங்கல் நாளில் ‘மாட்டுப் பொங்கல்’ தனி ஒருநாளில் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு ஆடு, மாடு, எருமை, நாய், பூனை ஆகிய அனைத்துக் கால்நடைகளும் கூடுதலாகக் கவனிக்கப்படுகின்றன. அவற்றைக் குளிக்க வைப்பது, வயிறு நிறையத் தீனி போடுவது, அன்றைக்கு வேலையில் ஈடுபடுத்தாமல் இருப்பது, வண்ணம் பூசுவது, பொட்டிடுவது, பொங்கல் வைத்துப் படைப்பது என முழுநாள் நிகழ்வு நடைபெறுகிறது. அது மட்டுமல்ல, ஜல்லிக்கட்டைப் போல மாட்டை வைத்துச் செய்யும் பலவிதமான நிகழ்வுகள் நடக்கின்றன. ஜல்லிக்கட்டு என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. அது வெவ்வேறு வடிவங்களைக் கொண்டதாகப் பகுதி சார்ந்தும் சாதி சார்ந்தும் அமைகின்றது. அனைவரும் அறிந்த ஜல்லிக்கட்டு என்பது ஏதாவது சில ஊர்களில் மட்டும் நடக்கும் நிகழ்வு. மதுரை மாவட்டம் என்றால் அலங்காநல்லூர், பாலமேடு எனச் சில ஊர்கள். சிவகங்கை என்றால் சிராவயல், அரளிப்பாறை எனச் சில ஊர்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, திருவாபூர். சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டி, கூலமேடு. நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி. இவையெல்லாம் பெருங்கூட்டம் கூடும், ஏராளமான காளைகள் வரும் ஜல்லிக்கட்டுகள். வேறு சில மாவட்டங்களில் பிரபலமான ஜல்லிக்கட்டு இல்லை என்றாலும் வேறுவகையான நிகழ்வுகள் உள்ளன. எல்லா மாவட்டங்களின் உள்ளூர்ப் புறங்களிலும் வெவ்வேறு வடிவங்கள் இருக்கின்றன. ‘மஞ்சு விரட்டு’ என்னும் சொல் மக்கள் வழக்கு. ஜல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும் ஒன்றல்ல. சங்க இலக்கியம் குறிப்பிடும் ‘ஏறு தழுவுதல்’ என்பதை ஜல்லிக்கட்டின் மூல வடிவமாகக் கருதலாம். ஆனால் ‘மஞ்சு விரட்டு’ வேறு. மஞ்சு என்பது மைந்து என்பதன் திரிபு; மைந்து என்றால் வீரம்; வீரம் மிக்கவர் மைந்தர்; வீரத்தோடு காளைகளை விரட்டிப் பிடிப்பது ‘மஞ்சு விரட்டு’ என விளக்கம் கூறுபவர் உண்டு. வேறு சில விளக்கங்களும் கூறப்படுகின்றன. ஜல்லிக்கட்டுக்கான தமிழ்ச் சொல்லாக இதைக் கருதுவோரும் உள்ளனர். மைந்து என்பது மஞ்சு எனத் திரிந்திருக்கலாம். அது வீரத்தைக் குறிப்பதாகவும் அமையலாம். காளைகளின் வீரம், மாடு பிடிப்பவர்களின் வீரம் என எதுவோ ஒன்று. ஆனால் நடைமுறையில் ‘மஞ்சு விரட்டு’ என்பது காளைகளை விரட்டிப் பிடிக்கும் வீர விளையாட்டு அல்ல தமிழகத்தின் வட மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு இன்றும் பெருமளவு நிகழ்கிறது. மாட்டுப் பொங்கல் அன்று மாலையில் ஊரில் இருக்கும் மாடுகளை எல்லாம் (எருமைகளையும் உள்ளடக்கி) கயிற்றை அவிழ்த்து விரட்டி விடுகின்றனர். அவை சுதந்திர உணர்வுடன் ஊர்த் தெருக்களிலும் விவசாய நிலங்களிலும் ஓடித் திரிகின்றன. மாடுகளோடு கன்றுகளும் ஓடுகின்றன. தமக்கு விருப்பமான இடத்தில் நின்று கன்றுகளுக்கு மாடுகள் பாலூட்டுகின்றன. அவை குழுவாகக் கூடி வயல்வெளிகளில் தாவித் திரிகின்றன. மாடுகளின் இயல்பே குழுவாக வாழ்வதுதான். அவை ஒன்றோடு ஒன்று கொம்பினால் செல்லமாக முட்டிச் சண்டையிடுகின்றன. மேடுகளைக் கண்டால் அதைத் தகர்க்க முட்டி மோதுகின்றன. விருப்பம் போல எந்த வயலிலும் சென்று மேய்கின்றன. தீவனப் போர்களில் உருவித் தின்கின்றன. துரத்தும் நாய்களைத் திருப்பித் தாக்குகின்றன அப்போது மனிதர் பழக்குவதற்கு முந்தைய கால வாழ்வை மாடுகள் வாழ்ந்து பார்க்கின்றன. அவற்றின் சுதந்திர உணர்வுக்கு ஓரிரு மணி நேரம் கொடுத்த பிறகு அவை சோர்ந்திருக்கும் நேரத்தில் உரிமையாளர்கள் தத்தமது மாடுகளைத் தேடிப் பிடித்துக் கட்டுத்தறிக்குக் கொண்டுவருகின்றனர். சில மாடுகள் தம் எஜமானரைக் கண்டதும் அன்போடு அருகில் வந்து எளிதில் சிக்கிக்கொள்கின்றன. சில மாடுகள் போக்குக் காட்டி ஓடுகின்றன. அவற்றை விரட்டிப் பிடிப்பது அல்லது ஏமாற்றிப் பிடிப்பது மக்களுக்கு ஆனந்தமான விளையாட்டு. சில மாடுகள் எங்கோ சென்று ஒளிந்து கொள்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது கண்ணாமூச்சி விளையாட்டுக்குச் சமமாக இருக்கின்றது. சில மாடுகள் அங்கும் இங்கும் ஓடிவிட்டுக் கடைசியில் தமக்குரிய கட்டுத்தறிக்கே வந்து சேர்கின்றன. முட்டும் உணர்வு கொண்ட சில மாடுகள் மட்டுமே இவ்விளையாட்டில் அபாயகரமானவை. குழந்தைகளை அவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அத்தகைய மாடுகளை ஊரார் அனைவரும் அறிந்திருப்பர். ஆகவே அவற்றை அவிழ்த்துவிடாமல் இருப்பதோ விட்டதும் பின்னாலேயே சென்று விரட்டிப் பிடித்துக்கொள்வதோ விளையாட்டின் விதி. மற்றபடி மாடுகளும் மனிதர்களும் உற்சாகத்தோடு பங்கேற்கும் விளையாட்டு இது. எந்த ஆபத்தும் இல்லாத விளையாட்டு. இன்னொரு வகை மஞ்சு விரட்டும் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட சாதியினர் இந்த விளையாட்டில் ஈடுபடுகின்றனர். அச்சாதி மக்கள் வசிக்கும் ஒவ்வொரு ஊரிலும் ‘ஊர் மாடு’ ஒன்று வளர்க்கப்படுகிறது. அது காளைதான். யாராவது ஒருவர் தம் அன்பளிப்பாகக் கன்றாக இருக்கும்போதோ ஊருக்குக் கொடுத்துவிடுகின்றனர். கிட்டத்தட்டச் சாமிமாட்டுக்கு இருக்கும் எல்லா உரிமையும் இந்த 'ஊர் மாடு'க்கும் உண்டு. ஊர் மாட்டைக் கயிறு கொண்டு கட்டுவதில்லை. அது ஊருக்குள் எங்கும் போகலாம்; எந்த வயலிலும் மேயலாம். யாரும் அதை அடிக்கவோ விரட்டவோ செய்வதில்லை. இப்போது சில ஊர்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஊர் மாடு செய்யும் அழிம்பு பொறுக்க முடியாமல் அதைப் பராமரிக்கும் பொறுப்பை யாராவது ஒருவரிடம் கொடுத்துவிடுகின்றனர். அதைக் கவனித்துக் கொள்பவருக்கு ஊர் சார்பாக ஆண்டுக்கான சிறு ஊதியம் வழங்கப்படுகிறது. தைப்பொங்கலுக்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்து அம்மாட்டை விரட்டி ஓடப் பழக்குகின்றனர். மாட்டுப் பொங்கல் நாளில் தொடங்கி அச்சாதியினர் வசிக்கும் வெவ்வேறு ஊர்களில் ஒவ்வொரு நாள் ‘மஞ்சு விரட்டு’ நடக்கிறது. பல ஊர் மாடுகளும் அதில் பங்கேற்கின்றன. மனிதர்கள் நடத்தும் நூறு மீட்டர், இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயம் போன்றது இது. ஊர் மாடுகள் வரிசையாக நிற்க வைக்கப்படுகின்றன. அதிகபட்சம் ஐந்நூறு மீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. சீழ்க்கை ஒலி கேட்டதும் மாடுகள் விரட்டப்படுகின்றன. ஏற்கனவே ஓடிப் பழக்கமுள்ள மாடுகள் இப்போது பந்தயத்தில் ஓடுகின்றன. நேராக ஓடாமல் திசை திரும்பி ஓடும் மாடுகளும் இருக்கும். இருபுறமும் வரிசை கட்டி நிற்கும் மக்கள் அரணாக நின்று மாடுகள் ஓடப் பாதையைக் காட்டுகின்றனர். அப்படியும் மிரண்டோடும் மாடுகள் உண்டு. அவற்றை அவ்வூரார் விரட்டிப் பிடிக்கின்றனர். பார்வையாளர்களாக எல்லாச் சாதியினரும் பங்கேற்கலாம். இலக்கை எட்டி முதலிடம் பெறும் மாட்டுக்குப் பணப்பரிசும் தலைப்பாகை கௌரவமும் செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைக்கும் வெவ்வேறு ஊர்களில் இத்தகைய மஞ்சு விரட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அந்நாட்களில் மாட்டுக்குத் தீனி வைப்பது, ஆரோக்கியத்தைப் பேணுவது, வலுவூட்டுவது, பயிற்சி தருவது என ஊர் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். ஊர் மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர். தொடக்கத்தில் சரியாக ஓடாத மாடு சில நாள் பயிற்சிக்குப் பிறகு நன்றாக ஓடி முதலிடம் பெறுவதும் முதலில் நன்றாக ஓடிய மாடு பிறகு திருகல்செய்து இடத்தை இழப்பதும் நடக்கும். இப்போட்டிகள் முடியும்வரைக்கும் இந்த மக்கள் வேலைகளுக்குச் செல்வதில்லை. நடந்தே மாடுகளைப் பிடித்துச் சென்ற காலம் மாறி இப்போது ‘குட்டி யானை’ வண்டியில் ஏற்றி ஊர் ஊருக்கு மாட்டைக் கொண்டுசெல்கின்றனர். இந்த மஞ்சு விரட்டுக்கு என்றே ஆண்டுதோறும் ஊர்ப் பொதுப்பணம் திரட்டப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. மாடுகளை விரட்டாமல் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நிலம் முழுதும் அல்லது ஊர் முழுதும் வலம் வரும் முறையும் சில இடங்களில் உண்டு. அப்படி வரும்போது மாட்டை நன்றாக அலங்கரித்திருக்கின்றனர். கொம்புக்கு வண்ணம் பூசுவது, கொப்பு மாட்டுவது, வண்ணக் கயிறுகள் போடுவது, மணிகளோ சலங்கைகளோ அணிவிப்பது என அலங்காரம் பலவிதம். ஒவ்வொரு மாட்டின் அலங்காரத்தையும் பார்த்து மக்கள் ரசிக்கின்றனர். இவ்விதம் பல்வேறு தன்மைகள் கொண்ட பண்பாட்டு நிகழ்வாக மாடு பிடித்தல் நடக்கின்றது. இதற்கு உள்ளூர்த்தன்மை இருக்கும் காரணத்தால், ஒவ்வொருவரும் பங்கேற்பாளராக இருப்பதால் பெரும் ஜல்லிக்கட்டைத்தான் பார்த்தாக வேண்டும் என்பதில்லை. மேலும் மஞ்சு விரட்டில் யாருக்கும் உயிர்ப்பயம் இல்லை. எந்தச் சேதமும் நேர்வதில்லை. முழுமையாக விளையாட்டாகவே மஞ்சு விரட்டு அமைகிறது. எல்லா வகைகளுமே வேட்டைச் சமூகத்தின் எச்சம்தான். தொடக்கத்தில் உணவுக்காக மாட்டை வேட்டையாடிய மனிதர் பிறகு ஓரிடத்தில் நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்து உழவுத்தொழிலை மேற்கொண்டபோது மனிதருக்கு மாடு துணையாக விளங்கியிருக்கிறது. உணவுக்காக அல்லாமல் வேலைக்காகக் காட்டு மாடுகளைப் பிடித்து அடக்கிப் பழக்குவதை மேற்கொண்டிருப்பர். ஓரிடத்தில் நிலைத்திருக்க உருவான காரணிகளில் ஒன்று மாடு. கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவலில் இடம்பெயர்ந்து வந்து காட்டை அழித்து விவசாய நிலமாக்கும் மக்கள் சேற்றில் சிக்கிக்கொண்ட காட்டு மாடு ஒன்றைப் பிடித்து வந்து பழக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. கந்தர்வனின் ‘கொம்பன்’ கதை மந்தையில் சுதந்திரமாகத் திரியும் காளையைப் பிடித்து வந்து உழவு வேலைகளுக்குப் பழக்கும் காட்சிகள் வருகின்றன. மனித சமூக வளர்ச்சியில் மாடுகளுக்கு முக்கியமான பங்குண்டு. ஆகவேதான் இன்று வரைக்கும் மனிதரையும் மாட்டையும் பிரிக்க முடியவில்லை. உழவு வேலைகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்ட பிறகும் மாடுகள் பாலுக்காகவும் வீர விளையாட்டுக்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டால் அதில் உயிர்ப்பிருக்காது. மாட்டை வைத்து மனிதர் விளையாடும் விளையாட்டே பிணைப்பைக் கூட்டுகிறது; உயிர்ப்பைத் தருகிறது. இந்தப் பிணைப்புக்கு நீண்ட வரலாறு உண்டு. அவ்வரலாறு அத்தனை சீக்கிரம் முடிந்துவிடுவதல்ல. மனித சமூகத்தின் ஆயுட்காலம் வரைக்கும் மாடுகளும் உடன் வரக் கூடும்.