வட்டாரக்கல்வி அலுவலகப் பணிக்கு ஆசிரியர்கள்
குசாலாக -குஷியாக செல்வதின் காரணம் தான் யாதோ!?
எத்தனை கிளார்க்குகள் அலுவலகத்தில் இருந்தாலும்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களை ஆசை ...ஆசையாய்... அலுவலகப் பணிக்கு அழைத்துக் கொள்வதின் நோக்கம் தான் யாதோ!?
எவருக்காவது இதன் மெய்யான சூட்சுமம் தெரிந்தால் வெளிப்படையாகப் பதிவிடுங்களேன்!
சரியான சூட்சுமத்திற்கு பரிசு-பாராட்டு உண்டு!
--------------------------------------------------------------------------
மாண்புமிகு.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மிக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில்,
மாண்புமிகு.பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள்
வட்டாரக்கல்வி அலுவலகப்பணிக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக்கூடாது எனும் பொருளிலும்,
வட்டாரக்கல்வி அலுவலகப் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டியது இல்லை எனும் பொருளிலும்,
பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை என்றால் அலுவலக கிளார்க்குகள் வந்து பாடம் நடத்துகிறார்களா?!-
நடத்துவார்களா?!எனும் பொருளிலும் சொன்னதாக- பேசியதாக -கேட்டதாக என் நினைவில் பதிவாகி உள்ளது.
எனக்கு பதிவாகி உள்ளது போன்று , வட்டாரக்
கல்வி அலுவலர்கள் பலருக்கு பதிவாகிடவில்லை போலும்.
அல்லது இந்த வட்டாரக்கல்வி அலுவலர்களின் வசதிக்கு -தேவைக்கு ஏற்ப ஞாபகமறதி வந்து சேர்ந்துவிட்டது போலும்.
மாண்புமிகு.தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மிக அண்மையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் வழியில் சொல்லியது -சமூக ஊடகங்களிலும் பெருந்தீயாய் பரவியது ஒருசில ஆசிரியர்களுக்கும், பெரும்பாலான வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் நீங்காது நினைவில் நிற்கவேண்டும் என்று சரசுவதி தேவியிடம் இறைஞ்சுகிறேன்.
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறைச்செயலாளர்,
தமிழ் நாட்டின் தொடக்கக்கல்வி இயக்குனர்,பல்வேறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்,பல்வேறு மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்கள்,பல்வேறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் என்போர் எல்லாம் கடந்தக்காலங்களில் ஆசிரியர்களை அலுவலகப் பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்று பிறப்பித்த கட்டளைகள் எதுவுமே நினைவில் நிற்காத இந்த ஞாபகமறதி வட்டாரக்கல்வி அலுவலர்களைக் கொண்டு என்ன செய்துவிட முடியும் (!?)என்பது தான் பெரும் புதிராகவே உள்ளது.
இன்றும்கூட, தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு வட்டாரக்கல்வி அலுவலகப் பணியில் ஏதாவது ஒரு ஆசிரியரை பணியில் அமர்த்தி வேலை வாங்கிக்கொண்டுத்
தான் இருக்கிறார்கள்.வண்டி ஓட்டச்சொல்லி சொகுசாய் பயணித்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.
இதே வேளையில்,
மாணாக்கர் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை.மாற்றுப்பணியில் ஒரு ஆசிரியரை அனுப்பி உதவுங்கள் என்று எவ்வளவு தூரம் கெஞ்சினாலும் கிணற்றில் போட்ட கல்லாய் தான் பள்ளித்தலைமையாசிரியரின் கல்விக்கான வேண்டுகோள்கள் கிடக்கிறது.
உபரி ஆசிரியர்களை தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்குவதும், பள்ளியில் பாடம் நடத்திடவேண்டிய ஆசிரியரை அலுவலகத்தில் அமர்த்தி வேலை வாங்குவதும் ,வேலை வாங்க வேண்டிய கிளார்க்கை சும்மா உட்காரவைத்து
அழகுப் பார்ப்பதும்
எவ்வளவு பெரிய கேடுகெட்டத்தனம் (?!)என்பதை-மோசடித்தனம் என்பதை
இது மாதிரியான வட்டாரக்கல்வி அலுவலர்கள் அறியவில்லை என்றால்,
உணர வில்லை என்றால்
இந்தமாதிரியான வட்டாரக்கல்வி அலுவலர்கள்
இந்தப்பதவிக்கே இலாயக்கற்றவர்கள் என்றே பொருள்படுகிறது.
இவர்கள் இந்தப்பதவியில் இருந்தால் என்ன?!இல்லாவிட்டால் தான் என்ன!?
என்றே எண்ணத்தோன்றுகிறது.
தமிழ்நாட்டின் தொடக்கக்கல்வியை காப்பாற்ற வேண்டிய கள அலுவலர்களான இந்த வட்டாரக்கல்வி அலுவலர்களின் பல்வேறு வகையான சபலங்கள் தான் தொடக்கக்கல்வித் துறையின் சாபக்கேடாக மாறிக்கெண்டு வருகிறது என்றே கூறலாம்.
இத்தகு கூற்று ஒன்றும் வலிய இட்டுக் கட்டிய ஒன்றல்ல. வெறுப்புணர்வின் அடிப்படையில் சொல்லப்பட்டதும் அல்ல.
சமூக அக்கறையில் சொல்லப்பட்டவை ஆகும்.
இந்த மாதிரியான வட்டாரக்கல்வி அலுவலர்களின் மீது
தமிழ்நாடு அரசும்,
தொடக்கக்கல்வி இயக்குனரும்
நடவடிக்கை எடுக்க தயங்குவது என்பது தொடக்கக்கல்வியை இயற்கை மரணத்தை நோக்கி தள்ளி விடுவதற்கு ஒப்பானதாகிவிடும் .
# *நன்று கருது*
-கரிகாலன்.