செவ்வாய், 22 மார்ச், 2022
மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதாமல் எந்தப் படிப்பையும் படிக்க முடியாதாம்! ▪பல்கலைக் கழக மானியக் குழுவின் அபாய அறிவிப்பு!
▪மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத் தேர்வு எழுதாமல் எந்தப் படிப்பையும் படிக்க முடியாதாம்! ▪பல்கலைக் கழக மானியக் குழுவின் அபாய அறிவிப்பு! ----------------------------------------------- காலங்காலமாக கல்வி மறுக்கப்பட்டது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கடந்த மனுதர்ம கால ஆட்சியில். எடுத்துக்காட்டாக, குலதர்மக் கல்வித் திட்டம் என்பதின்மூலம் ஆச்சாரியார் ஆட்சியினால் கொண்டுவரப்பட்ட ஆரம்பக் கல்வித் திட்டத்திற்கு மக்களின் பேரெதிர்ப்பை தந்தை பெரியாரின் பிரச்சாரப் புயல் உருவாக்கியது - மக்கள் தெளிவடைந்தனர். சர்வாதிகாரியைப்போல் நடந்த ஆச்சாரியார் பதவி விலகி, பச்சைத் தமிழர் காமராசர் பதவியேற்றவுடன் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். ▪‘திராவிட மாடல்’ ஆட்சியில் சமூகநீதி! தொழிற்கல்வி - மருத்துவம், பொறியியல் கல்விக்காக ‘தகுதி - திறமை’ என்ற பெயரால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டதினால்தான் ஏழை, எளிய, கிராமத்து விவசாயிகளின் பிள்ளைகளும், அடித்தட்டு மக்களும், ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையினரும் படித்துப் பட்டம் பெற்று, புதியதோர் சமூக மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கால ‘திராவிட மாடல்’ ஆட்சி - சமூகநீதி அடிப்படையில் ‘அனைவருக்கும் அனைத்தும்‘ என்று வாய்ப்புக் கதவுகளைத் திறந்துவிட்டதன் விளைவு, நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை என்ற ஒரு புது திருப்பத்தை உருவாக்கிற்று! இதனை சீரழிக்கும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி நிறைவேற்றப்பட்டுள்ள ஒன்றிய அரசின் ‘‘புதிய கல்விக் கொள்கை’’ என்ற திட்டம் இப்போது திணிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை! ▪சமூக அநீதிக்கு சிவப்புக் கம்பளமா? பெயர் ‘புதிய தேசிய கல்விக் கொள்கை’ - சரக்கோ பழைய குலதர்மம் - சமூக அநீதிக்குக் சிவப்புக் கம்பளம் விரிக்கும் பிற்போக்குத் திட்டம்! ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். அரசின் திணிப்புக் கல்விக் கொள்கை திட்டத்தை வகுத்தவர்களில் பிரபல - அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் ஓரிருவர்தான். முதலில், ஒரு ஓய்வு பெற்ற பார்ப்பன அதிகாரி சுப்ரமணியம் அய்.ஏ.எஸ். அடுத்து, அதை சரிப்படுத்த அணுசக்திக் குழுவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் - கஸ்தூரிரெங்கன், சிறீரங்கத்துப் பார்ப்பனர். 1. இந்தக் கல்விக் கொள்கை முழுவதும் மத்திய மயமாக்குதல் (Centralisation) 2. வணிக மயம் (Commercialisation) 3. கார்ப்பரேட் கல்வியாக ஆக்குதல் (Corporatization) இவைதான் அந்த திரிசூலங்கள். அடியிலிருந்து திட்டம் வகுத்தால், பங்களிப்பு இருந்தால், எத்திட்டமும் வெற்றியடையும். இதுவோ அதற்குப் பதிலாக முடியிலிருந்து கீழே உத்தரவு போடும் விசித்திரக் கல்வித் திட்டமாக உள்ளது என்பது நிபுணர்களின் கருத்தாகும். AICTE, UGC போன்ற அமைப்புகளையே முதலில் ரத்து செய்து, எல்லாம் ஒன்றிய அரசுக்கே என்று முதலில் தொடங்கி, இப்போது இந்த இரு அமைப்புகளும் மாறி, மாறி நாளுக்கொரு ஆணை, வேளைக்கொரு சுற்றறிக்கை வெளியிடுவதால், கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி பெறுவதற்குப் பதிலாக, நாளும் மூச்சுத் திணறலில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது. இந்தியா ஒரு கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டம் கூறும் விதி. ▪நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்குப் போனது! ஆனால், அவ்வரசமைப்புச் சட்டத்தின்படி நெருக்கடி நிலை பிரகடன காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, ஒத்திசைவுப் பட்டியலுக்கு (மாநில அரசும், ஒன்றிய அரசும் சட்டங்கள் செய்துகொள்ளும் அதிகாரப் பட்டியல்) மாற்றப்பட்டதே தவறு என்று அரசமைப்புச் சட்ட நிபுணர்கள் குரல் ஓங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இன்றைய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தக் கல்வியை - முற்றாக யூனியன் பட்டியலுக்கே கொண்டு சென்றுவிட்டதாக - அரசமைப்புச் சட்ட விதிகளையே புறந்தள்ளி நடந்துகொண்டு, இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதை வகுத்து செயல்படுத்தத் துடியாய் துடிக்கின்றார்கள்! அத்திட்டத்தில், சமூகநீதிபற்றியோ, பெண் கல்விக்குரிய முக்கியத்துவமோ தராமல், பழைய குலக்கல்வித் திட்டத்தை வேறு பெயரிட்டு, புண்ணுக்குப் புனுகு பூசுவதைப்போல அழைக்கின்றதோடு, சமஸ்கிருதத் திணிப்புடன் பண்பாட்டு படையெடுப்பை பச்சையாக பகிரங்கப்படுத்தி நடத்திடத் துணிந்துவிட்டனர்! ▪ஏழை - எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ‘நீட்’ தேர்வு ‘நீட்’ தேர்வு என்பதை மருத்துவக் கல்வி பட்டப் படிப்பு, மேற்பட்டப் படிப்பு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி எல்லாவற்றிலும் திணித்து, ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை அறவே பறித்துவரும் நிலையில், இந்தக் கல்வித் திட்டத்தை மேலும் விரிவாக்கி, பட்டப் படிப்பு எதுவானாலும் இனி, நுழைவுத் தேர்வு இல்லாமல் உள்ளே நுழைய முடியாது என்ற பன்னாடை வடிக்கட்டல் முறைமூலம் உயர்ஜாதி - உயர்வர்க்கத்தினருக்கு மட்டும் இனி கல்வி ஏகபோகமாகும் உத்தியை, சூழ்ச்சியை அமலாக்கத் துடித்து, அறிவித்தும் வருவது கடுங்கண்டனத்திற்குரியதல்லவா? இரண்டு பறிப்புகள் இது. ▪பல்கலைக் கழக மானியக் குழுவின் புதிய அறிக்கை! மத்திய பல்கலைக் கழகங்களில் இனி நுழைவுத் தேர்வு எழுதி, வெற்றி பெறாமல் எந்தப் படிப்பையும் படிக்கவே முடியாது என்று நேற்று (21.3.2022) பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவர் அறிவிப்பு விடுத்துள்ளது எவ்வளவு கொடுமையானது! பல்கலைக் கழகங்களில் இனிமேல் ‘ஆய்வுப் பட்டங்களுக்காகப் பதிவு செய்பவர்களை பல்கலைக் கழகமே அனுமதித்து, தேர்வு செய்யும். பல்கலைக் கழக சுயாட்சி (University Autonomy) முறை அழிக்கப்பட்டு, இனிமேல் ஒன்றிய அரசுதான் அதற்கான அனுமதியை வழங்கும் என்றால், இதன்படி அரசமைப்புச் சட்ட உரிமைப் பறிப்பு, பல்கலைக் கழகங்களின் உரிமைகள், மாநில அரசுகளின் உரிமையும் பட்டாங்கமாகப் பறிக்கப்படுகிறதல்லவா? மக்களாட்சியில் இப்படி அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற இவர்கள் எடுத்த உறுதிமொழி காற்றில் பறக்கலாமா? ▪பார்ப்பனீய ஆதிக்க முதலைகளை விரட்டுவோம்! இதனை நம் மக்களிடையே தெளிவுபடுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், சமூகநல விரும்பிகள், மாநில அரசுகள் அனைவரும் எதிர்த்துக் குரல் கொடுத்து, முறியடித்து, கல்வி நீரோடையில் புகுந்துள்ள இந்த பார்ப்பனிய முதலைகளை விரட்டா விட்டால், நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருண்ட காலம்தான்! எச்சரிக்கை! பெற்றோரே, கவனம்! கவனம்!! கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் 22.3.2022 சென்னை
PAN and Aadhaar link the due date to march 31th 2022
Link your PAN & Aadhaar to enable quick & easy e-verification of ITRs. The due date to link your Aadhaar & PAN is 31st March, 2022. Link today!
Clickhere https://www.incometax.gov.in/iec/foportal