புதன், 7 செப்டம்பர், 2022
முன்னுதாரணம் ஆகட்டும் மாதிரிப் பள்ளிகள்...
ஆசிரியர்
06 Sep 2022,
தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கியமான ஒரு பிரச்சினையை அங்கீகரித்து, அதற்கு முகம் கொடுத்திருக்கிறது அரசு. ஆசிரியர் தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் மாதிரிப் பள்ளிகள் மற்றும் தகைசால் பள்ளிகள் தொடர்பான அறிவிப்பானது, நம்முடைய பள்ளிக்கல்வித் துறையில் முக்கியமான ஒரு முன்னெடுப்பு.
தமிழகத் தொடக்கக் கல்வி பெரும் சரிவை எதிர்கொண்டிருக்கிறது. இரு தசாப்தங்களாக இது படிப்படியாக நடந்தது. மாநிலத்தின் பெரும் பகுதி மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளுடைய தரம் வீழ்ச்சியடைந்தது இதற்கு முக்கியமான ஒரு காரணம். அரசுப் பள்ளிகளுக்கே உரித்தான ஆசிரியர்கள் பற்றாக்குறை, நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள், ஆசிரியர் வேலைக்கு அப்பாற்பட்டு திணிக்கப்படும் நிர்வாகப் பணிகள், கற்பித்தல் சாதனங்களின் போதாமை போன்ற கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் சமூகமும் தங்களுடைய உயிர்ப்புணர்வை இழந்தது.
ஒட்டுமொத்தக் கல்வி நீரோட்டத்தில் தாங்களும் முக்கியமான பங்கேற்பாளர்கள் எனும் உணர்வையே அரசுப் பள்ளிகள் பெருமளவில் இழந்தன. தரமான உயர்கல்விக்கான போட்டியிலோ நல்ல வேலைக்கான சந்தையிலோ அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடம் என்ன என்ற கேள்வியையே அவை கேட்டுக்கொள்ளத் தவறின. ஏதோ ரேஷன் கடைக்காரர்கள் ஏழை எளியோருக்கு அரசு மூலமாக வரும் அரிசியை வழங்குவதுபோலத் ஏழைக் குழந்தைகளுக்குத் தேர்ச்சியை வழங்குவதோடு தம் பணி முடிந்தது என்ற மனநிலைக்குப் பெரும்பாலான அரசு ஆசிரியர்கள் வந்துவிட்டனரோ என்று எண்ணத் தோன்றியது.
உலகெங்கும் கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக மக்கள் நல அரசுகள் செலவிடும் தொகை தொடர்ந்து அதிகரிக்கப்படுவது எப்படி ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறதோ அதேபோல, இப்படிச் செலவிடப்படும் தொகைக்கான விளைவுகள் மதிப்பிடப்படுவதும் ஒரு சமூகக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு துறையில் எவ்வளவு செலவிடுகிறோம், பலன்களாக எவற்றைப் பெறுகிறோம் எனும் கேள்விக்கு நியாயமான பதிலைப் பெறுவது முக்கியம். நம்முடைய கல்வித் துறையில் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டால் கிடைக்கும் பதிலானது பெரிய அளவில் ஏமாற்றத்தையும் ஆயாசத்தையுமே தரும்.
போதாமைகள் நிறைய இருந்தாலும் தமிழ்நாட்டில் அது திமுகவோ, அதிமுகவோ இரு கட்சிகளுமே கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை இயன்ற அளவுக்கு வழங்கிவந்திருக்கின்றன. கால் நூற்றாண்டுக்கு முந்தைய சூழலை ஒப்பிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு எவ்வளவோ மேம்பட்டிருக்கிறது. ஆனால், "எங்கள் ஊருக்கு அரசுப் பள்ளி வேண்டும். எங்கள் ஊர் அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும்" என்று போராட்டங்கள் நடந்த காலம் போய் போதிய மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் அரசுப் பள்ளிகள் மூடப்படும் / இணைக்கப்படும் சூழல் இன்று உருவாகிவருவது வெளிப்படுத்தும் செய்தி என்ன?
அரசுப் பள்ளிகள் தங்கள் செல்வாக்கை இழப்பதற்கு ஏராளமான காரணங்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, நல்ல உயர்கல்வி வாய்ப்புகளைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுடைய எண்ணிக்கைச் சரிவு. ஊருக்கு ஒரு மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞரை உருவாக்கும் ஆற்றலைக்கூட இன்று நம் அரசுசார் பள்ளி அமைப்பு இழந்துவிட்டிருக்கிறது. எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஎம், என்எல்எஸ்யு போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தமிழகத்திலிருந்து செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். சொல்லப்போனால், பள்ளியிறுதித் தேர்வு எழுதி வெளியே வரும் பல லட்சம் மாணவர்களில் சில நூறு பேர்கூட இத்தகு உயர் படிப்புகளுக்கு இங்கே விண்ணப்பிப்பதே இல்லை. இதற்கான காரணம், நம் மாணவர்களின் தகுதியின்மை அல்ல; தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அவர்களுக்கு உத்வேகம் தரும் பின்னணியின்மை.
தேசிய அளவிலான உயர்கல்வி இடங்களில் தமிழக மாணவர்கள் - குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கல்வியாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்தனர். ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதுமே இந்த விஷயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டது. தமிழக அளவிலேயேகூட நல்ல உயர்கல்வி நிறுவனங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதைச் சென்ற ஆண்டில் முதல்வர் ஒருமுறை குறிப்பிட்டுப் பேசியதை இங்கே நினைவுகூரலாம்.
விளைவாக இந்த அரசு பிரதான கவனம் கொடுக்கும் துறைகளில் பள்ளிக்கல்வித் துறை ஒன்றானது. தலைமையாசிரியர்களை, ஆசிரியர்களை உத்வேகப்படுத்துவதற்கான புத்தாக்கப் பயிற்சிகளில் ஆரம்பித்து கற்பித்தல் முறையிலேயே மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான யோசனைகள் வரை பல நல்ல முயற்சிகள் இன்று நம் கல்வித் துறையில் நடக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே இப்போது வெளியாகியிருக்கும் 'மாதிரிப் பள்ளிகள்' தொடர்பான அறிவிப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இடையே உத்வேகத்தை உருவாக்கவும், நன்றாகப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாகத் தயார்படுத்தவும் முன்னதாக 'மாதிரிப் பள்ளிமுறை'யை 10 இடங்களில் பரீட்சார்த்தமுறையில் அரசு முயற்சித்திருக்கிறது. இந்த முயற்சியில் நல்ல பலன் கிடைத்திருப்பதன் விளைவாகவே ஏற்கெனவே நடத்தப்பட்டுவந்த 10 பள்ளிகளோடு கூடுதலாக 15 பள்ளிகள் சேர்த்து இந்த ஆண்டு முதல் 25 மாதிரிப் பள்ளிகள் நடத்தப்படும் என்று அரசு இப்போது அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு 'மாதிரிப் பள்ளி' அமைப்பு புதிது இல்லை. இந்தப் பத்து ஆண்டுகளுக்குள் வெற்றிகரமான விளைவுகளை இருவேறு மாவட்டங்களில் ஏற்கெனவே தந்த அமைப்பு இது. தமிழ்நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களான ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூரில் இது பெரிய வெற்றிகளைத் தந்தது. இந்த மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில், உத்தேசமாகப் பள்ளிக்கு ஒருவர் என்பதுபோல ஒரு விகிதாச்சாரத்தில் நன்கு படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கென்று ஒரு பிரத்யேகமான உண்டு உறைவிடப் பள்ளியை உருவாக்கி, நல்லாசிரியர்களைக் கொண்டு தயார்ப்படுத்தும் பணியையே இந்த 'மாதிரிப் பள்ளி'கள் செய்தன.
இதற்கு நல்ல பலன் இருந்தது. மருத்துவம்,பொறியியல், சட்டம் எனப் பல்வேறு துறைகளிலும் நல்ல உயர்கல்வி வாய்ப்புகளை இங்கு பயின்ற மாணவர்கள் பெற்றார்கள். இந்தப் பள்ளிகளில் கைவரப் பெற்ற அனுபவங்களை இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் ஏனைய அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பகிர்ந்துகொண்டனர். அது அந்த மாவட்டங்களில் ஒரு தொடர் மாற்றத்துக்கு வித்திட்டது. மிக நீண்ட காலமாகப் பின்தங்கியிருந்த அந்த மாவட்டங்கள் இன்று கல்வியில் முன்னோக்கி நகர்ந்திருக்கின்றன.
இப்போது அந்த அனுபவத்திலிருந்துதான் மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு 'மாதிரிப் பள்ளி' என்று அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டுசெல்ல விழைகிறது. அடுத்தடுத்த நிலைகளில் வட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அளவுக்குப் பல நூறு பள்ளிகளாக இது விரித்தெடுக்கப்படும் என்கிறார்கள். இந்த 'மாதிரிப் பள்ளி'களிடம் இருந்து ஏனைய பள்ளிகள் புதிய கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் முகமாகத்தான் 'தகைசால் பள்ளிகள்' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் நல்ல முறையில் செயல்படும் பள்ளிகள் தம்மை மேம்படுத்திக்கொள்ள அவற்றுக்குச் சிறப்பு நிதி வழங்கி அவற்றுக்கு முழு நிறைவான கட்டமைப்பையும் வழங்கும் திட்டம் இது. மாதிரிப் பள்ளிகள் வழக்கமான, முழுமையான பள்ளிகள் கிடையாது. கிட்டத்தட்ட முகாம் பள்ளிகள் அவை. நர்சரியில் ஒரு தொட்டியில் வளர்த்தெடுக்கப்பட்டு, ஒரு கன்று தழைத்ததும் வீட்டுத் தோட்டத்துக்கு மாற்றப்படுவதுபோல மாதிரிப் பள்ளிகளில் இருந்து படிப்படியாக தகைசால் பள்ளிகளுக்கு இந்தப் புதிய வகுப்புகளை மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் மாதிரிப் பள்ளிகளுக்கும் தகைசால் பள்ளிகளுக்கும் இடையில் நடக்கும் பரிவர்த்தனைகள் ஏனைய எல்லாப் பள்ளிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என்று தெரிகிறது. அப்படியென்றால், விரிந்த பார்வையில் நிரந்தரமான ஒன்றாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது உறுதியாகிறது.
திட்டமிடப்பட்டிருக்கும் விஷயங்கள் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால் நிச்சயமாக முதல்வரின் அறிவிப்பானது தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகள் எதிர்கொள்ளும் மோசமான தேக்கம் முடிவுக்கு வரும். நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையான நல்ல உயர்கல்விவாய்ப்புகளை, நல்ல வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.
நல்ல திட்டம். கல்வித் துறை அதிகாரிகளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இதை வெற்றியடையச் செய்யட்டும். மாதிரிப் பள்ளிகள் ஏனைய பள்ளிகளுக்கு முன்னுதாரணப் பள்ளிகளாகத் திகழட்டும்!
திங்கள், 5 செப்டம்பர், 2022
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும்~பள்ளிக் கல்வித்துறை உத்தரவு...
அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருட்களை உடனே அகற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறைசார்ந்த அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த மற்றும்உபயோகமற்ற மரச் சாமான்கள், இரும்பு பொருட்கள் நீண்டகாலமாக வகுப்பறைகள் மற்றும் வெளிப்புறங்களில் காணப்படுகின்றன.
மறுபுறம் பள்ளிகளில் இடப் பற்றாக்குறை காரணமாக பணியாளர்கள், மாணவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவல் உள்ள நிலையில் பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்களை அகற்றவேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, அவற்றை உடனடியாக அகற்றுவதற்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும். அத்தகைய பயன்பாடற்றபொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து, அந்தத் தொகையை உரிய அரசு வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:தினகரன்
மொபைல் போன் மூலம் வாக்காளர் அட்டை - ஆதார் எண் இணைப்பது எப்படி?~வழிகாட்டி-,,,
- பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Voter Helpline செயலியை டவுன்லோட் செய்ய வேண்டும்.
- அந்த செயலியை ஓபன் செய்ததும் ‘I Agree’ ஆப்ஷனை கிளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்
- அதில் ‘Voter Registration’ என உள்ள முதல் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதில் அங்கீகார படிவம் 6B-யை ஓபன் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து ‘லெட்ஸ் ஸ்டார்ட்’ ஆப்ஷனை கிளிக் கொடுக்க வேண்டியுள்ளது.
- அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணை உள்ளிட்டு, OTP அனுப்புவதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- மொபைல் எண்ணுக்கு வரும் OTP -யை அதில் உள்ளிட்டு, Verify செய்ய வேண்டும்.
- அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, அதன் எண்ணை (EPIC) உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து வாக்காளர்கள் தங்களது மாநிலத்தை தேர்வு செய்து, வாக்காளர் விவரத்தை எடுக்க வேண்டி உளள்து.
- அந்த விவரங்கள் வந்ததும் ‘Proceed’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
- அதை செய்ததும் ‘Done’ கொடுத்தால் படிவம் 6B ஓபனாகிறது. கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டு ‘Confirm’ கொடுத்தால் அந்த படிவம் சமர்ப்பிக்கப்படும்.
முக்கியமாக இதனை செய்ய வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணுடன் தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருப்பது அவசியம்.
IFHRMS WEBSITE-ல் PAY SLIP மற்றும் PAY DRAWN DOWNLOAD செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை...
IFHRMS-ல் LOGIN செய்ய முடியவில்லையா?
IFHRMS WEBSITE-ல் PAY SLIP மற்றும் PAY DRAWN DOWNLOAD செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை...
சனி, 3 செப்டம்பர், 2022
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)