வாஷிங்டன்: பூமியை போல் மற்ற கோள்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், சனிக்கோளின் துணைக்கோளான என்செலடசில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பூமி எப்படி தோன்றியது... பூமியை போன்ற வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா.. என்ற ஆய்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பூமிக்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலம் குறித்து அறிந்து கொள்ள உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேற்றுக்கிரகவாசிகள்
இந்த அண்டத்தில் நமது பூமியைத் தவிர வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் வேற்றுக்கிரகவாசிகளை பார்த்தததாகவும் அவர்களுடன் அவ்வப்போது பேசியதாகவும் சிலர் கூறுவதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அப்படி ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்... அவர்களின் பழக்கவழக்கங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது.
சனி கிரகத்தின் துணைக்கோளில் ஏலியன்கள்
ஏன் பல ஹாலிவுட் படங்கள் கூட ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் , சூரிய குடும்பத்தில் ஆறாவது கோளாக இருக்கும் சனி கிரகத்தின் துணக்கோளான என்செலடஸ் என்ற கோளில் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
உயிரினங்கள் வசிக்கலாம்
ஏனனில், என்செலடசின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. ஐஸ் கட்டிகளின் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலையில் பெருங்கடல்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த பெருங்கடல்களில் உயிரினங்கள் வசிக்கலாம் என்ற ஐயமும் விஞ்ஞானிகளுக்கு வலுத்துள்ளது. என்செலடஸில் உள்ள ஒசோனில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கலாம் என்றும் உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய கூறுகள் இவையே என்பதும் விஞ்ஞானிகள் எடுத்து வைக்கும் வாதமாக இருக்கிறது.
அறிவியல் ஆய்வு இதழில்
இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் நேஷனல் அகடமி ஆஃப் சைன்ஸ் (PNAS) என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த இதழைசேர்ந்த கிரிஸ்டோபர் கிலேன் என்பவர் கூறுகையில், ''சூரிய குடும்பத்தில் மனித குலம் வேறு எங்கும் உள்ளதா? என்பதை தேடும் முக்கிய கோளாக என்செலடஸ் உள்ளது. நாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தையும் அதன் அமைப்புகளையும் ஆய்வு செய்த பிறகு அங்கு சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டும் வகையில் அமைந்து வருகிறது'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளும் இது கொண்டுள்ளதாகவே நாங்கள் அறிகிறோம். இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவைகளில் ஒன்றாக கருதப்படும் பாஸ்பரஸ் நிறைந்து இருப்பதாக நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் சனி கிரகத்தின் நிலவின் ஐஸ் பரப்புக்குக்கு கீழே உள்ள கடலில் பாஸ்பரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை எங்கள் குழு கண்டுபிடித்துள்ளது'' என்றார்.