வெள்ளி, 30 செப்டம்பர், 2022
தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வருமா பழைய பென்ஷன் திட்டம்? விகடன் கட்டுரை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்- ஆசிரியர் மாநாட்டில், 'வாழ்வாதாரப் பழைய பென்ஷனை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்க, 'நிதிநிலை சீரடைந்ததும் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என்று உறுதி அளித்துள்ளார்.
"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன" எனத் தமிழக நிதியமைச்சர்
பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், கடந்த மாதம் சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
"பழைய பென்ஷனை மீண்டும் கொண்டு வருவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று தமிழக முன்னாள் நிதிச் செயலாளர் ஒருவரும், பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார நிபுணர் குழுவும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வரின் இந்த வாக்குறுதியானது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தாலும், பொதுமக்களிடம் கொஞ்சம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்
பழையது போய், புதியது வந்தது எப்போது? ஆங்கிலேய ஆட்சியில் 1871-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட 'பழைய பென்ஷன்' எனப்படும் வரையறுக்கப்பட்ட பயன் தரும் பென்ஷன் (Defined Benefit Pension), தமிழக அரசு மற்றும் மத்திய அரசில் 2003-ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. அதாவது, கடந்த 26.06.2001-ல் பென்ஷனை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை பரிந்துரை செய்தது. இதன் விளைவாக, சி.பி.எஸ், என்.பி.எஸ் என்கிற இரு திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன.
சி.பி.எஸ்*
இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழக அரசின் பென்ஷனுக்கான செலவினங்கள் அதிகமாக உள்ளது என்பதால், 2002-03-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பின்படி, 01.04.2003 முதல் சி.பி.எஸ் (Contributory Pension Scheme) எனப்படும் பங்களிப்பு பென்ஷன் திட்டம் நடைமுறைக்கு வந்ததால், பழைய பென்ஷன் முடிவுக்கு வந்தது. சி.பி.எஸ் திட்டத்தை தமிழக அரசின் டாடா பிராசஸிங் சென்டர் பராமரிக்கிறது. சி.பி.எஸ்ஸில் கட்டப்படும் பணம் முழுவதும் தமிழக அரசுக் கணக்கில் (Public account) உள்ளது.
தமிழக அரசு சி.பி.எஸ் பென்ஷன் திட்டத்தைக் கொண்டு வந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அதாவது, 01.01.2004 முதல் மத்திய அரசும் தன் ஊழியர்களுக்கான (பங்களிப்பு) நேஷனல் பென்ஷன் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ஊழியர்களின் மாதாந்தர பங்களிப்பு 10% மத்திய அரசின் பங்களிப்பு 14% இவை இரண்டும் சேர்ந்த 24% தொகை மத்திய அரசின் (Public account) கணக்கில் இல்லை. ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority) பராமரிப்பில் என்.பி.எஸ் டிரஸ்டில் உள்ளது.
பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ்ஸிலும் உண்டு 01.04.2004 முதல் 31.03.2019 வரை என்.பி.எஸ் திட்டத்துக்கான தனது பங்களிப்பாக 10% தொகையை மட்டுமே மத்திய அரசு தன் ஊழியர்களின் கணக்கில் செலுத்திவந்தது. அவ்வப்போது எழுந்த 'பழைய பென்ஷன்' கோரிக்கையை சமன்படுத்தும் விதமாக 01.04.2019 முதல் என்.பி.எஸுக்கான தனது மாதாந்தர பங்களிப்பை 14 சதவிகிதமாக உயர்த்தியது, மத்திய அரசு. என்.பி.எஸ் திட்டத்தில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு, மத்திய அரசின் பழைய பென்ஷன் திட்டத்தைச் சார்ந்த ஊழியருக்கு உள்ளது போன்றே பணிக்கொடை வழங்கப்படுகிறது.
பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர்களுக்கு உடல் இயக்கம் பாதிக்கப்பட்டாலோ, மூளை செயல்திறன் இழந்து போனாலோ, பழைய பென்ஷன்தாரர்களுக்கு உள்ளது போலவே இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension) உண்டு. பணியில் உள்ள என்.பி.எஸ் ஊழியர் இறந்துபோகும் பட்சத்தில் அவரின் குடும்பத்துக்கு
குடும்ப பென்ஷன் உண்டு.ஜி.பி.எஃப்-க்கு இணையாக கிடைக்கும் நன்மைகள் என்.பி.எஸ்ஸில் கணக்கு II-லும் (Tier II Account) கிடைக்கும். ஆக மொத்தம், பழைய பென்ஷனுக்கு இணையாக எல்லா வசதிகளும் என்.பி.எஸ்
திட்டத்திலும் உண்டு.
ஆண்டு முழுக்க பென்ஷன் பெற என்ன செய்யலாம்?*
ஓய்வு பெறும்போது என்.பி.எஸ் மூலம்
கிடைக்கும் தொகையை என்.பி.எஸ்ஸின் அன்யூட்டி திட்டத்தில் டெபாசிட் செய்தால், மாதம் தோறும் பென்ஷன் போல ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக் கும். அவ்வாறு கிடைக்கும் அன்யூட்டி தொகை ஓய்வு பெறும் தேதியில் பழைய பென்ஷன்தாரர் பெறும் பென்ஷனுக்கு இணையாகவும் இருக்கலாம். ஆனால், அன்யூட்டியில் வருடாந்தர உயர்வை எதிர் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுக்கக் கிடைக்கும் தொகை ஒரே அளவாகவே இருக்கும். ஆனால், செலவு ஏறுமுகமாக இருக்குமே! தவிர, சம்பள கமிஷன் (Pay Commission) உயர்வு, அகவிலைப்படி உயர்வு என எதுவும் என்.பி.எஸ்ஸில் கிடைக்காதே என்பது அரசு ஊழியர்களின் கவலை
அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம்; அரசுக்கு..*?அகவிலைப்படி தரப்படும் போதெல்லாம் 'பழைய பென்ஷன் மூலம் கிடைக்கும் தொகை உயர்ந்துகொண்டே போகும். சம்பள கமிஷன் வந்தால் 'ஓஹோ' என்று எகிறும். இதனால் அரசு ஊழியர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், அரசுத் தரப்புக்குத் திண்டாட்டம். கடந்த காலத்தில் பழைய பென்ஷன் மூலம் கிடைத்த தொகை எப்படி உயர்ந்து வந்தது என்பதைப் பாருங்கள்...
1984-ல் குறைந்தபட்ச பென்ஷன் (235+12) ரூ.247 மட்டுமே. தற்போதைய குறைந்தபட்ச பென்ஷன் (7850+2669+300) ரூ.10,819.
செப்டம்பர் 1984-ல் அதிகபட்ச பென்ஷன் (1500+54) ரூ.1,554 மட்டுமே. தற்போதைய அதிகபட்ச பென்ஷன்
(1,12,500+38250+300) ரூ.1,50,780.
எகிறிய குடும்ப பென்ஷன்...*
அதுமட்டுமல்ல, 1.7.1960-க்குமுன் ஓய்வு பெற்றவர்களுக்கு குடும்ப பென்ஷன் இல்லை.8.2.1971 முதல் குறைந்தபட்ச குடும்ப பென்ஷன் ரூ.50; அதிகபட்சம் ரூ.300-தான்.31.12.2015 வரை அதிகபட்ச குடும்ப பென்ஷன் (23100+26,796) ரூ.49,896 மட்டுமே. ஆனால், 01.01.2016 முதல் அதிகபட்ச (உயர்த்தப் பட்ட) குடும்ப பென்ஷன் ரூ.1,12,500. இத்துடன் முடிந்ததா என்றால், இல்லை. பணிக் கொடைக்காக அரசாங்கம் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டி யிருக்கிறது.
அதாவது, * 01.01.1996-ல் 3.5 லட்சம்; 01.01.2006-ல் 10 லட்சம்: 01.01.2016-ல் 20 லட்சம்; தற்போதைய 38% அகவிலைப்படி 50% என்ற அளவை எட்டிவிட்டால் அதிகபட்ச பணிக்கொடை ரூ.25 லட்சமாகும்.பழைய பென்ஷன் வருமா? பழைய பென்ஷனைக் கொண்டுவருவதில் இத்தனை பிரச்னைகள் இருக்கின்றன. இதை எல்லாம் தாண்டி, மீண்டும் பழைய பென்ஷன் வருமா என்று கேட்டால், அதற்கும் கொஞ்சம் வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அதாவது, 2019-20 பட்ஜெட் அறிக்கையின்படி, தமிழக அரசு பென்ஷன் பெற்றவர் எண்ணிக்கை 7,37,699. தற்போதைய 2022 23 பட்ஜெட் அறிக்கையின் படி பென்ஷன் பெறுபவர்களின் எண்ணிக்கை 7,15,761 மட்டுமே.அதாவது, வயது மூப்பு காரணமாக இறப்பு ஏற்படுவதால், எண்ணிக்கை குறைகிறது. மேலும், 01.04.2003 முதல் சி.பி.எஸ் திட்டத்தின்கீழ் பணிக்கு வந்து தற்போது வரை ஓய்வு (மற்றும் இறப்பு) எண்ணிக்கை வெறும் 24,719 மட்டுமே. ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் சார்ந்தோர் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20,000 பேர்
ஓய்வுபெறுவதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். இதனால் இளம் வயதில் உள்ள சி.பி.எஸ் ஊழியர்கள் பழைய பென்ஷன் பெற வாய்ப்பு உண்டு. மேலும், சி.பி.எஸ். திட்டம் தொடங்கப்பட்ட 2002-03 நிதியாண்டில் பழைய பென்ஷனுக்கான செலவு அப்போதைய அரசின் வருவாயில் ரூ.3,488.20 கோடி இது அரசின் வருவாயில் 16.86%.தற்போதைய 2022-23 பட்ஜெட்டின்படி, பழைய பென்ஷனுக்கான செலவு ரூ.39,508.37
கோடி என்றாலும், இது நமது வருவாயில் 17.07% மட்டுமே. அதாவது, 2002-03 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பழைய பென்ஷனுக்கான கூடுதல் செலவு 0.21 சதவிகிதம்தான். இந்தக் கணக்கை எல்லாம் தெரிந்துகொண்டுதான் 'பழைய பென்ஷனைக் கொண்டு வருவோம்' என தமிழக முதல்வர் சொன்னாரா?
பழைய பென்ஷன் திட்டத்தை எப்படிக் கொண்டுவருவோம் என அவர் எடுத்துச் சொன்னால், அரசு ஊழியர்கள், ஆசிரியர் நிம்மதிப் பெருமூச்சுவிடுவார்கள்!
தவறான தகவல்..! தமிழக அரசு ஊழியர்களில் ஒரு சிலர், தமிழக அரசு ஊழியர்கள் என்.பி.எஸ்ஸில் உள்ளதாக தவறாக நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல. தமிழக அரசு ஊழியர்கள் சி.பி.எஸ் திட்டத்தில்தான் உள்ளனர்.
இதற்கான கணக்கை பராமரிப்பது அரசு டாடா சென்டர். நமது சி.பி.எஸ் தொகை பி.எஃப். ஆர்.டி.ஏ-யில் உள்ளது என்பதும் தவறான தகவல். மத்திய அரசு ஊழியர்களுக்கான என்.பி.எஸ்ஸை பராமரிப்பதுதான் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA).
*நன்றி விகடன்*
வியாழன், 29 செப்டம்பர், 2022
தொடக்கக் கல்வி - கள அளவில் நிர்வாக மறுகட்டமைப்பு - ஒப்படைக்கப்பட வேண்டிய பணியிடங்களைக் கொண்டு புதிய பணியிடங்கள் உருவாக்கம் - பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்களின் திருத்தி அமைக்கப்பட்ட கடமைகள் மற்றும் பொறுப்புகள் - 58 மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பணியிடங்கள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)