செவ்வாய், 17 ஏப்ரல், 2018
கோடை விடுமுறைக்கு பிறகே ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது...
தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும்.
இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.
முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை எடுக்க 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது...
இ.பி.எப்., எனப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில் பிப்ரவரியில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 'வைப்பு நிதியில் இருந்து, ஒரே நேரத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பும் ஊழியர்கள் ஆன்லைன் எனப்படும் இணையம் வழியே விண்ணப்பிப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக சந்தாதாரர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில் சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை:
வைப்பு நிதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அந்த விண்ணப்பத்தை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது குறித்து மூன்றுநாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
வைப்பு நிதியில், ஒரே சமயத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவில் பல சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் சந்தாதாரர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. இதை மனதில் வைத்து அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர், காகிதம் மூலமாகவும், இனி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்த உயர்நீதி மன்றம் விதித்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதித்திருக்க முடியாது. ஐகோர்ட் கிளை விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.
WhatsApp ல் புதிய Update ~அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யலாம்...
WhatsApp-ல் ஏற்கனவே அழித்த மீடியா Files-களை மறுபதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்...
ஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீடியா ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் வரும் ஜிஃப், வீடியோக்கள், ஆடியோக்கள், மற்றும் கோப்புகள் ஒரு முறை பதிவிறக்கம் செய்யப்பட்டால் செல்போனில் சேமிக்கப்பட்டுவிடும்.
சேமிக்கப்பட்ட ஃபைல்களை தெரியாமல் அழித்து விட்டால் அவற்றை மீண்டும் வாட்ஸ் ஆப்பில் சென்று பதிவிறக்கம் செய்ய முடியாது. இந்தப் பிரச்சனையை தீர்க்கும் விதமாக மீடியா ஃபைல்களை மறு பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதி ஆன்ட்ராய்டு போன் வாட்ஸ் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)