வெள்ளி, 9 அக்டோபர், 2020

FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

*📘FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

இதுவரை தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றிவந்த.(Tamilnadu elementary education subordinate service) வட்டார கல்வி அலுவலர்கள் ,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள் அனைவரும்

 இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services)  மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு .

அந்தந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதி மற்றும்  தேர்ந்தெடுக்கும் முறை குறித்தான  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு மேலும்  ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு 40 வயதினை வயது வரம்பாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தொடக்க கல்வித்துறையின் கீழ் எந்த ஒரு பதவியும் வரவில்லை

அரசிதழைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.(2019-2020)

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.
(2019-2020)
பட்டியலைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

அக்டோபர் 9,வரலாற்றில் இன்று.விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 9,
வரலாற்றில் இன்று.


விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் (M.Bhaktavatsalam) பிறந்த தினம் இன்று.

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936இல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார்.

ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்.

தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார்.

நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.

தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். ‘எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்’ என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர்.

‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர்.

மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90ஆவது வயதில் (1987) காலமானார். சென்னையில் இவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9, வரலாற்றில் இன்று. விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம் இன்று.

அக்டோபர் 9, 
வரலாற்றில் இன்று.

 விடுதலைப் போராளி சே குவேரா நினைவு தினம் இன்று.

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது. 
ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைக்கு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.

அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.

அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். 

ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார். முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதப்படும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,

பின் மருத்துவ கல்லூரியில் படித்தார் ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிக்கிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொம்மையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

பொதுவாக தென் அமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.
கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும்  சீனியும்.

நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். 
ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?

ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூபாவில் ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.

பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.
ஆம் எல்லை கடந்து கியூபா விடுதலைக்கு போராடியவர், 

இப்பொழுது ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.
ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென் அமெரிக்கா திரும்பினார்.

இந்த காலகட்டத்திற்குள் சேவினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.
கியூபா அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூபா உறவுகள் தொடரவேண்டும் என்றார்.

இலங்கைக்குச் சென்று தேயிலைத்தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர்  அவர்தான்.
இப்படியாக உலகெல்லாம் கொண்டாடப்பட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்கும் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடப்படுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்காவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.

சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.

அக்டோபர் 9, 1969... அந்த மாலைப்பொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"

சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.

விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.

எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூபா மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.
ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்?"

ஆஸ்துமா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"

இன்று அவரின் நினைவு நாள். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.
சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.

மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.
ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.
காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மானிட நேயம் மட்டுமே.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.
அவனுக்கு அழிவே இல்லை.
அந்த மனித நேயமிக்க மாவீரனான சே குவாரேவிற்கு நம் அஞ்சலிகள்.!

வியாழன், 8 அக்டோபர், 2020

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்-சார்பு

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்-சார்பு

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.உலகின் முதல் தற்கொலைப்போராளி குயிலி நினைவு தினம் இன்று.

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.

உலகின் முதல் தற்கொலைப்போராளி குயிலி நினைவு தினம் இன்று.

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரம் செறிந்த பல போராட்டங்கள் தமிழ் மண்ணில் நடைபெற்றுள்ளன. உயிரைத் துச்சமென மதித்து பலர் போராடினர். ஆனால், அனைத்தையும்விட போற்றத்தக்க ஒரு போராட்டத்தை நிகழ்த்தியவர் வேலுநாச்சியார். ஆங்கிலேயர்களிடம், இழந்த தங்கள் நிலம் அனைத்தையும் மீட்ட  பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அதற்கு காரணகர்த்தவாக விளங்கியவர் குயிலி. 

சிவகங்கைச் சீமையை  ஆட்சி செய்த முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்தார். படைகளைத் திரட்டி ஆங்கிலேயர்கள்மீதும், அவர்களின் கூட்டாளிகளான ஆற்காடு நவாப்கள்மீதும் போர் தொடுத்தார். 

ஒரு கட்டத்தில், போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டார். அவருக்குப் பின்னர், இழந்த நாட்டை மீட்டெடுக்க  அரசி வேலுநாச்சியார் சபதமெடுத்தார்.

ஹைதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் உதவியோடு வேலு நாச்சியார் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். 8 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்துகொண்டே பெரும்படையை உருவாக்கி, ஆங்கிலேயர்களோடு போரிட்டு சிவகங்கைச் சீமையை மீட்டார். இவரது படையில் வாள் படை, வளரிப்படை, பெண்கள் படை ஆகியவை இருந்தன. அதில் பெண்களின் படையான 'உடையாள் பெண்கள் படை'க்குத்  தலைமை ஏற்றவர்தான் குயிலி.

யார் இந்தக் குயிலி ?

வேலுநாச்சியாருக்குப் போர்ப் பயிற்சி அளித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் வெற்றிவேலு. இவர் சிலம்பக் கலையில் கைதேர்ந்தவர். வேலு நாச்சியாரது நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றவர்.  அவரின் பாதுகாவலராகவும் விளங்கினார். ஒரு கட்டத்தில் எதிரிகளால் விலை பேசப்பட்ட வெற்றிவேலு, எதிரிகளுக்கு உளவு வேலை பார்க்கத் தொடங்கினார்.

போர்க்களத்தில் இருந்த குயிலி, தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் சிவகங்கைக்குச் செல்லத் திட்டமிட்டார் . இதை அறிந்துகொண்ட வெற்றிவேலு, குயிலிக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று கருதி, ஒரு கடிதத்தைத் கொடுத்து சிவகங்கை அரண்மனைக்கு அருகே வசித்த மல்லாரிராயன்  என்பவரிடம் கொடுக்கச் சொன்னார்.  வெற்றிவேலின் செயல்பாடுகள்மீது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்த குயிலி அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தார்.  அந்தக் கடிதத்தில் அரசி வேலுநாச்சியாரைக் கொல்வதற்கான திட்டங்கள் விவரிக்கப்பட்டிருந்தது.  

வெகுண்டெழுந்த குயிலி, குத்தீட்டியை எடுத்துக்கொண்டு வெற்றிவேலின் இருப்பிடம் சென்று அவரைக் கொன்றார். ஒரு கையில் ரத்தம் வடியும் குத்தீட்டியுடனும், மறுகையில் கடிதத்துடனும் அரசியிடம் சென்று  நடந்ததை விவரிக்க,  குயிலியின் வீரத்தை வெகுவாகப் பாராட்டினார் வேலுநாச்சியார். அன்று முதல் நாச்சியாரின் மெய்க்காப்பாளரானார் குயிலி.

உலகின் முதல் தற்கொலைப் போராளி குயிலி :

1780 - ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5 - ம் நாள்  தம் பகுதியான சிவகங்கையை மீட்க, விருப்பாச்சியிலிருந்து படையெடுத்துச் சென்றார் வேலுநாச்சியார். பெண்கள் படைக்குத் தலைமையேற்றார் வீரப்பெண் குயிலி.  

சிவகங்கை நோக்கி வரும் வழியில் கோச்சடையில் மல்லாரிராயனையும், அடுத்ததாக திருப்புவனத்தில் மல்லாரிராயனின் தம்பி ரங்கராயனையும், மானாமதுரையில்  மார்டின்ஸ், பிரைட்டன்  போன்ற வெள்ளைக்கார அதிகாரிகளையும், நவாப்பின் படைத்தளபதியான பூரிகானையும் கொன்று குவித்து வெற்றியோடு முன்னேறியது நாச்சியாரின் படை. 

வேலுநாச்சியாரின் கணவரான முத்துவடுகநாதரைக் கொன்ற ஆங்கிலத் தளபதி ஜோசப் ஸ்மித்தை காளையார்கோயிலில் அடித்து துவம்சம் செய்தார்கள். ஆனால், சிவகங்கைக்குள் நுழைவது மட்டும் கடினமாக இருந்தது. காளையார்கோயிலில் இருந்து சிவகங்கை வரை அடிக்கு ஒரு வீரனை நிறுத்தியிருந்தான் ஆங்கிலத் தளபதி பான்சோர் . 

யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் ஊர் நிலவரம் அறிந்து வந்த குயிலி, "நாளை  விஜயதசமித் திருவிழா. சிவகங்கையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு நடைபெறவிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி...நாம் அனைவரும் மாறுவேடத்தில் கோயிலுக்குள் செல்வோம். அங்கிருந்து போரைத் தொடங்குவோம்'' என்று யோசனையை முன்வைத்தாள். 

குயிலியின் யோசனையை அரசியும் ஏற்றுக்கொண்டார். அரசியின் தலைமையில் அனைவரும் மக்களோடு மக்களாகக் கோயிலுக்குள் புகுந்தனர். மருதுபாண்டியர்களின் தலைமையில் படைவீரர்கள் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தனர். ஆயுத பூஜைக்காக வெள்ளையர்கள் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நிலா முற்றத்தில் வைத்திருந்தனர். உள்ளே நுழைந்ததுமே அதைக் கண்டுகொண்டார் குயிலி. 

சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்த அரசியும் பெண்கள் கூட்டம் கலையும் நேரம் கையை உயர்த்தி, 'வெற்றிவேல்! வீரவேல்' என்று முழங்கினார். மாலைகளுக்குள் இருந்த வாள் வெள்ளையர்களின் தலையை நோக்கிச் சீறிப்பாய்ந்தது. 

ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி பான்சோர் 'சார்ஜ்' என்று கத்தினான். வெள்ளையர்களும் தங்களுடைய ஆயுதக் கிடங்குக்கு ஓடினர். அவர்களுக்கு முன்னே குயிலியும் ஓடினார். அவரது மேனியில் விளக்குக்காகக் கோயிலில் இருப்பு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் வழிந்து
கொண்டிருந்தது. தீப்பந்தத்தால் தன்மேல் தீயிட்டுக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார். ஆயுதங்கள் அனைத்தும் வெடித்துச் சிதறின. தன்னையே மாய்த்துக்கொண்டு வெள்ளையர்களின் ஆயுதங்களைத் தீக்கு இரையாக்கினார் குயிலி.  மீதமிருந்த வெள்ளையர்களை, நாச்சியாரின் படைவீரர்கள் துவம்சம் செய்தனர். 

ஊர் எல்லையிலிருந்து  மருது சகோதரர்களும் கோட்டையை நோக்கி முன்னேறியிருந்தனர். இழந்த நிலம் அனைத்தையும் மீட்டாயிற்று. "எங்கே குயிலி?" என்று தேடுகிறார் அரசி. தன்னுயிர் தந்து மண்ணுயிர் மீட்டது குயிலிதான் என்பதை அறிந்து அவரின் வீரத்தையும் தியாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போனார். உலகின் முதல் தற்கொலைப் போராளியானார் வீரப்பெண் குயிலி.

தீப்பாய்ந்த அம்மனாக வழிபடப்படும் குயிலி :

அன்றிலிருந்து, தங்கள் மண்ணையும் மானத்தையும் காத்த குயிலியை அம்மனாகவே வழிபடத் தொடங்கினார்கள் இப்பகுதி மக்கள். சிவகங்கை- மதுரை சாலையில் முத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அங்கிருந்த அம்மனை 'தீப்பாய்ந்த அம்மன்' என்ற பெயரிட்டு மக்கள் வணங்குகிறார்கள். இக்கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்போது அந்தக் கோயில் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகிக் கிடக்கிறது. உள்ளே, குயிலியின் நினைவாக நடப்பட்ட நடுகல்லும், சூலாயுதம் ஒன்றின் முனைப்பகுதியும் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன.    

''குயிலியைப் பற்றி வாய்மொழியாக பல வரலாறுகள் உள்ளன. எல்லாக் கதைகளிலுமே குயிலிதான் தீப்பாய்ந்த அம்மனாக குறிப்பிடப்படுகிறார். எங்கள் பகுதியில் மக்களால் பாடப்படும் நாட்டுப்புறப் பாடலில்கூட இது பற்றி பேசப்படுகிறது. 'முத்துப்பட்டி முத்தன் மக செத்துப் போயி தெய்வம் ஆனா' என்று பாடுவார்கள். 

சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் ஆய்வு செய்து,  அவரும், 'இந்தக் கோயில் குயிலிக்காகக் கட்டப்பட்டது' தான் என்று தெரிவித்துள்ளார். ஆலம்பட்டு உலகநாதன் என்பவரும், குயிலி பற்றி எழுதிய புத்தகத்தில் இந்தக் கோயில் பற்றி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தக் கோயிலை உரிய முறையில் பராமரிக்காமல் கைவிட்டு விட்டார்கள்" என்கிறார் குயிலி பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர் லெனின்.

 இறந்த முன்னோர்களையும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களையும் வழிபடுவது தமிழர் பண்பாடு. அந்த வகையில் மண் காத்த குயிலிக்குக் கோயில் கட்டி வழிபடுவது போற்றத்தக்கது. சிதைவடைந்து கிடக்கும் அந்தக் கோயிலைச் சீரமைத்துப் பராமரிக்க  வேண்டியது அரசின் கடமை.

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.

 மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம் இன்று.

பாமர மக்களின் மொழியில் பொதுவுடைமை கருத்துகளை சொன்ன ஒரே கவிஞர்.

 மக்களின் கவிஞன் என்ற பட்டத்திற்கு முற்றிலும் தகுதியானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

 29 வருடங்களே இப்பூமியில் வாழ்ந்தவர். ஆனால் இந்த பூமி உள்ள மட்டும் அழியா பாடல்கள் தந்தவர்.!
விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரம், முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன், நண்டு பிடி தொழில், உப்பளத் தொழில், மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டி ஓட்டுநர், அரசியல் பிரச்சாரகர், பாடகர், நடிகர், நடனக்காரர், கவிஞர் இப்படி 17 தொழில்கள் புரிந்தவர்.! அந்த பாட்டாளிகளுக்கான மக்கள் கவிஞரை இன்று நினைவு கூர்வோம்.

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.இந்திய விமானப் படை தினம் இன்று.

அக்டோபர் 8, வரலாற்றில் இன்று.

இந்திய விமானப் படை தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி இந்திய விமானப் படை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய விமானப்  படையானது 1932இல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று, இந்தியா ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சமயத்தில்  உருவாக்கப்பட்டது