சனி, 19 ஆகஸ்ட், 2023
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023
புதன், 16 ஆகஸ்ட், 2023
திங்கள், 14 ஆகஸ்ட், 2023
வியாழன், 10 ஆகஸ்ட், 2023
பள்ளிகளில் தலைகீழ் மாற்றம்: ஆசிரியர்கள் தாக்கப்படுவது ஏன்? ஆசிரியர் - மாணவர் உறவில் என்ன சிக்கல்?
பள்ளிகளில் தலைகீழ் மாற்றம்: ஆசிரியர்கள் தாக்கப்படுவது ஏன்? ஆசிரியர் - மாணவர் உறவில் என்ன சிக்கல்?
சாரதா வி
பதவி,பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் இது போன்று தமிழ்நாட்டில் நடப்பது முதல் முறையல்ல. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய வகுப்பில் தூங்கிய மாணவனை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் ஆசிரியரை அடிக்க கையை ஓங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே தொடக்கப்பள்ளியில் மாணவனை அடித்தற்காக, மாணவனின் பெற்றோர் ஆசிரியரையும் தலைமை ஆசிரியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் , பிறந்தநாளை பள்ளி வளாகத்தில் கொண்டாடியதற்காக கண்டித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்த ஆசிரியரை பள்ளி முடிந்து வரும் வரை காத்திருந்து மாணவர்கள் தாக்கியுள்ளனர்.
இவை தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்வதில்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதிப்பெண் குறைவாக வழங்கிய ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதேபோன்று வேறு மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன.
ஆசிரியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஆசிரியர் சமூகத்தை மிகவும் பாதித்துள்ளன. தவறு செய்யும் ஆசிரியர்களை யாரும் நியாயப்படுத்தவில்லை என்றாலும், கல்வி கற்றுக் கொடுப்பரை தரம் தாழ்ந்து வசைப்பாடுவதும், அடிப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரை தாக்கும் உரிமையை யார் கொடுத்தது என கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார் திருவள்ளூர் அரசுப் பள்ளி ஆசிரியர் ஜி பகவான்.
தான் பணி செய்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு மாறும் போது, அவர் செல்லக் கூடாது என மாணவர்கள் தெருவில் நின்று கதறும் அளவு மாணவர்களின் அன்பைப் பெற்றவர் 33 வயதான ஆசிரியர் பகவான்.
இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆசிரியரை செருப்பால் அடித்தது என்னை மிகவும் காயப்படுத்தியது. ஆசிரியர் என்ன தவறு செய்திருந்தாலும் அது குறித்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, பள்ளி வளாகத்துக்குள் புகுந்து ஆசிரியரை தாக்க யார் உரிமை கொடுத்தது? ஆசிரியர்களை அடித்தால் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணம் சமூகம் முழுவதுமே உள்ளது. இன்று செருப்பால் அடித்தவர்கள் நாளை கத்தி எடுத்து குத்த மாட்டார்கள் என என்ன நிச்சயம்? இப்படி நடந்தால் ஆசிரியர்களுக்கு பயம் அதிகரிக்கும், ஈடுபாடு குறைந்துவிடும்.” என்று வேதனை தெரிவிக்கிறார் அவர்.
சில பத்தாண்டுகளுக்கு முன், ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அந்தப் பள்ளியை சுற்றியுள்ள சமூகத்துக்குமே மிகுந்த மரியாதை இருக்கும். கல்வியே ஒருவரை தங்கள் பொருளாதார சமூக பாகுபாடுகளிலிருந்து காப்பாற்றும் கருவியாக இருக்கும் போது அந்த கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் மீது பக்தியுடன் கலந்த மரியாதை இருந்தது.
இன்றும் கல்வியே ஒருவரின் முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது என்றாலும் ஆசிரியர் மூலமே கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கற்றலில் ஆசிரியரின் பங்கு மாறி வருகிறது. விரல் நுனியில் இருக்கும் தரவுகளை ஆசிரியரின் வாய்வழி கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது இல்லை
இந்த வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மாறவில்லை என்பது உண்மையே. வீட்டில் பெற்றொருக்கும் பிள்ளைக்கும் இருக்கும் தலைமுறை இடைவெளி வகுப்பறையிலும் நிலவுகிறது. இதன் காரணமாக ஆசிரியர் - மாணவர் உறவு சுமூகமாக இல்லை என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஆசிரியர்களை அடிக்கும் மனநிலை ஏன்?
ஆசிரியர்கள் இப்போதும் தாங்கள் ‘குரு-சிஷ்யன்’ உறவில் இருப்பது போல எண்ணிக்கொள்வது தவறு என்கிறார் எழுத்தாளரும் ஆசிரியருமான‘ஆயிஷா’ நடராஜன். “ஆசிரியர்கள் முன்பு ஆசிரியராக மட்டுமே இருந்தார்கள். அதுவே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. ஆனால் இன்று அது ஒரு அலுவலக வேலை போலாகிவிட்டது. ஆசிரியர் - மாணவர் உறவு என்பது குரு-சிஷ்யன் உறவாக இன்று இல்லை. சேவை வழங்குபவர் - வாடிக்கையாளர் உறவாக மாறியுள்ளது” என்கிறார் அவர்.
கடந்த பத்து ஆண்டுகளாகவே பொது சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து வருவது இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என்கிறார் பதினைத்து வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் சி எஸ் ஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன். “சமூகத்தில் சாதிய, மத ரீதியான பிளவுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. வீடுகளிலும் பணியிடங்களிலும் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. இவை அனைத்தையும் பிள்ளைகள் பார்க்கிறார்கள். இந்த சூழலில் தான் வகுப்பறைக்குள்ளும் சகிப்புத் தன்மை குறைவாக உள்ளதை பார்க்கிறோம்.” என்கிறார்.
மாணவர்களுக்கு விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை இல்லை என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் சிவபாலன். “தற்கால பெற்றோர் தங்களது குழந்தைகளை மிகவும் சௌகரியமாக வளர்க்க விரும்புகிறார்கள். குழந்தையின் பிரச்னைகளை தாங்களே எல்லா இடங்களிலும் தீர்த்து வைக்க நினைக்கிறார்கள். எனவே பிள்ளைகளுக்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லை, வீட்டுக்கு வெளியே யாராவது தன்னை விமர்சித்தால் கேள்வி கேட்கிறார்கள், தாங்கிக் கொள்ள முடிவதில்லை, சில நேரங்களில் வன்முறையை கையில் எடுக்கிறார்கள்” என்கிறார் அவர்.
மாணவர்களுக்கு தண்டனைகள் தேவையா?
ஆசிரியர்கள் மீதான தாக்குதலை பேசும் போது, மறுபுறம் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்கள் குறித்தும் பேச வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் மாணவனை அடித்தால் ஆசிரியரின் பக்கம் நியாயம் இருக்கும் என பெற்றோர்கள் நம்பினர். ஆனால் இன்று அப்படி சொல்வதில்லை. மேலும் வகுப்பறைக்குள் உடலை வருத்தும் தண்டனைகள் குறித்த நம் சமூகத்தின் பார்வையும் மேம்பட்டு உள்ளது. 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தின் படி, மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துவது சட்டத்தை மீறிய செயலாகும்.
நான் ஆசிரியரிடம் அடி வாங்கியதால்தான் முன்னேறினேன் என ஒருவர் கூறுவது மிக அபத்தமானது என சுட்டிக் காட்டுகிறார் எழுத்தாளர் நடராஜன். “வீட்டுப்பாடம் செய்யாத ஒரு மாணவரை முட்டி போட சொல்வதால் அந்த மாணவரிடம் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. முட்டி போட்டு எழுந்து முடித்தவுடன் அதை மறந்து விடுவார். கற்றலுக்கான சூழலுக்கும் அடி உதைக்கும் சம்பந்தமே இல்லை” என்று கூறுகிறார்.
மாணவர்களின் அன்பைப் பெற்றிருந்த ஆசிரியர் பகவான், தனது கண்டிப்பை மாணவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என விளக்குகிறார். “நான் மாணவனாக இருந்த போது எனக்கு ஆசிரியரிடம் பயம் இருந்தது. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு பயம் இல்லை. நண்பரை போல பழக விரும்புகிறார்கள். அதை நல்ல மாற்றமாக தான் நான் பார்க்கிறேன். தவறு செய்த மாணவரை அடிப்பது எளிது. ஆனால் அது பலனளிக்காது. நான் மாணவர்களை அழைத்து பேசுவேன். ஒரு முறை புரியவில்லை என்றால் பல முறை பேசுவேன். மாணவருக்கு புரியும் வரை பேச வேண்டும். அதற்கு பலன்கள் உடனே கிடைக்காது. அன்பும் அரவணைப்பும் தலை தூக்கி நின்றால் ஆசிரியரின் கண்டிப்பை மாணவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்றார்.
ஆசிரியர்களாக திணறும் 80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ்
சமூகத்தின் பிற பகுதிகளை போலவே வகுப்பறைகளிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், அரசின் கல்விக் கொள்கைகள் காரணமாகவும் தலைமுறை இடைவெளி காரணமாகவும் இவை நிகழ்கின்றன. ஆனால் இந்த மாற்றங்களை சமாளிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகிறார்கள்.
இன்று வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலும் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் என்கிறார் டாக்டர் ஜேக்கப் பிரசன்னா ஸ்டீபன். “70களில் பிறந்தவர்கள் பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். 90களின் கடைசியில் பிறந்தவர்கள் தற்போது பணிக்கு வந்திருக்கும் புதிய ஆசிரியர்கள். எனவே தற்போது பெரும்பாலான ஆசிரியர்கள் 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் ஆவர். இவர்கள் தாங்கள் மாணவர்களாக வகுப்பறையில் எப்படி இருந்தார்களோ அதுபோன்று தற்போதைய மாணவர்கள் இல்லை. இந்த தலைமுறை இடைவெளியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்” என்கிறார் அவர்.
மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான மோதல்களை இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான பிரச்னையாக சுருக்கிப் பார்க்கக் கூடாது என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன். “வகுப்பறையில் ஏற்படும் மாற்றங்களை கையாள ஆசிரியர்களுக்கு தெரியவில்லை. அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை. சமூக ஊடகத்தால் தவறாக நடக்கும் மாணவரை எப்படி கையாள்வது என ஆசிரியருக்கு சொல்லி தரவில்லை. நகரங்களில் நிறைய பள்ளிகளில் மாணவர்களுக்கு போதைப் பழக்கம் உள்ளது. அதை ஆசிரியர் எப்படி கையாள வேண்டும்? இதை யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள்? ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து கல்வி முறை குறித்த கேள்விகளை எழுப்ப வேண்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவரை நிறுத்தி நாம் பார்க்கக் கூடாது” என்கிறார்
கொரோனாவுக்கு பிறகான மாற்றம்
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களை பலிவாங்கியது. ஆனால், தப்பித்து உயிர் வாழ்பவர்களுக்கு பல்வேறு விதமான நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் கல்வித்துறையும் விதிவிலக்கு அல்ல.
கொரோனா ஊரடங்கு காலத்தில் செல்போன் மூலம் பள்ளிப் பாடங்கள் நடத்தப்பட்டன. அப்போது அதிகப்படியான செல்போன் பழக்கத்துக்கு அடிமையான மாணவர்கள் இன்றும் மீளவில்லை என்கிறார் ஆசிரியர் பகவான். “ மாணவரின் கவனத்தை வகுப்பறைக்குள் வைப்பது ஆசிரியர்களுக்கான புதிய சவாலாகும். ஆசிரியர்கள் அதற்கு ஏற்றவாறு தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொடுக்கும் பாடத்தில் நமக்கு பாண்டித்தியம் வேண்டும். இல்லை என்றால் மாணவர்கள் நமக்கு மரியாதை தர மாட்டார்கள்” என்கிறார் அவர்.
கொரோனாவுக்கு பிறகு பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீதான ஈர்ப்பும் கவனமும் அதிகரித்துள்ளது என்கிறார் எழுத்தாளர் நடராஜன். குழந்தைகளின் உணர்வு ரீதியான மிரட்டலுக்கு பெற்றோர்கள் ஆளாகிறார்கள் என்கிறார் அவர். “இந்த பொருளை வாங்கிக் கொடுக்கா விட்டால், என குழந்தைகள் மிரட்டுகிறார்கள். பெற்றோர்கள் அதற்கு இணங்கிவிடுகிறார்கள்” என்கிறார் அவர். இதுவும் கூட வகுப்பறை மோதல்களுக்கு காரணமாகிவிடுகிறது.
ஆசிரியர்களுக்கு மன அழுத்தம்
மருத்துவர் சிவபாலன் கூறுகிறார்.
ஒரு காலத்தில் பாதுகாப்பான, நிம்மதியான பணியாக கருதப்பட்ட ஆசிரியர் பணி தற்போது மன அழுத்தம் நிறைந்ததாக மாறியிருக்கிறது என பல தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர்.
“ஆசிரியர் பணியில் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக, இன்று அந்த பணியை ஆபத்தானது என்று கூறுகிறார்கள். அரசுப் பள்ளி ஆசிரியருக்கு கற்பித்தல் தவிர நிறைய பணிகள் கொடுக்கப்படுகின்றன. இன்றைய பெற்றோர்கள் எல்லாவற்றுக்கும் ஆசிரியர்களிடம் புகார் செய்கிறார்கள். இவை எல்லாம் ஆசிரியர் மீதான பொறுப்புகளை பல மடங்கு அதிகரிக்கிறது” என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன்.
கல்வி நிலையத்துக்கான மாணவர் சேர்க்கை பொறுப்பும் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதாக டாக்டர் ஜேக்கப் கூறுகிறார். “ குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சேர்த்தால் தான், ஆசிரியருக்கு அந்த கல்வியாண்டில் வேலை நிச்சயம். இப்படியான சூழலில் ஆசிரியர்கள் எப்படி மாணவர்கள் நலன் பற்றி கவலைப்படுவார்கள்?” என கேள்வி எழுப்புகிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: