அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்கு என்று குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும், சில வரையறைகளுக்கு உட்பட்டு அனுமதி பெற்ற ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கும், பிற படிப்புகளை தொடங்குவதற்கும் ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலின் அனுமதியை பெறவேண்டும்.
ஆனால், கவுன்சிலின் அனுமதியை முறைப்படி பெறாமல் சில ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மாணவர்களை சேர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் படித்து முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு ஆசிரியர் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுவதில்லை.
இந்த பிரச்னையை தீர்க்கவும் 1993ல் கொண்டு வரப்பட்ட தேசிய ஆசிரியர் கவுன்சில் சட்டத்தை மாற்றி அமைக்கவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் முடிவு எடுத்தது. இந்நிலையில், மாணவர்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு குறிப்பிட்ட தேதி வரையில் அங்கீகாரம் வழங்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் தேசிய கவுன்சிலின் அங்கீகாரமற்ற நிறுவனங்களில் படித்தவர்கள் அரசு வேலைவாய்ப்புகளில் சேர வழி ஏற்பட்டுள்ளது.