சனி, 30 டிசம்பர், 2017

ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு...


அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன.
இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோரையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும்.

இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக